மக்கள் யுத்தம் நாவல்…இரா.பாரதிநாதன்

தமிழ்நாடு மற்றும் இந்தியா முழுவதும் 1970,1980 காலகட்டங்களில் நக்சல்பாரி இயக்கங்களின் எழுச்சியான காலகட்டமாக இருந்துள்ளது. அப்போது ஆதிக்க நிலவுடையாளர்கள் பண்ணையார்கள் கந்துவட்டி கொடுமை செய்பவர்கள் என மக்களை சுரண்டுபவர்களை அழித்தொழிக்கும் சம்பவங்கள் நடைபெற்றது இந்த சம்பவங்களை மையபடுத்தியும் அழித்தொழிப்பு நடவடிக்கை தவற விட்ட தத்துவார்த்த போராட்டத்தை விமர்சன பூர்வமாக அணுகி நிகழ்காலம் கடந்த காலம் என நாவல் பயணிகிறது.

மக்களை சுரண்டி கொழுத்து வாழ்ந்து வரும் பண்ணையார் சங்கரலிங்கம் ஒரு கட்டத்தில் தன்னை எதிர்க்கும் பழங்குடி இனத்தை சேர்ந்தவரை குடும்பத்துடன் உயிரோடு எரித்து கொள்கிறார் அரசாங்கம் எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில் இயக்கம் நடவடிக்கை எடுக்க முடிவெடுக்கிறது தோழர் காளியப்பன் தலைமையில் அழித்தொழிப்பு நடக்கிறது பிறகு தலைமறைவாக வாழும் காளிப்பன் இயக்கத்தில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக விலகுகிறார். சாதிமறுப்பு திருமணம் செய்துகொண்டு மும்பை சென்று தனது காலத்தை கழிக்கிறார்.

பல வருடங்கள் கழித்து அவரை கைது செய்கிறது தமிழக உளவுத்துறை தனது தந்தை தீவிரவாதி என காவல்துறை சொல்கிற உண்மை நிலையை புரிந்து கொள்ள தாயுடன் முரண்பட்டு சொந்த கிராமத்தில் உண்மை அறிய வருகிறான் மகன் செந்தில். அதன் வாயிலாக கிடைக்கும் அனுபவங்கள் பண்ணையார் சங்கரலிங்கத்தின் மகன் தற்போது கிரனைட் தொழில் அதிபராக உள்ள சிவபெருமாள் மூலம் தொடரும் பழிவாங்கும் நிகழ்வுகள் சிறையில் தந்தையை சந்திக்கும் செந்திலிடம் தான் தவறவிட்ட தத்துவார்த்த போராட்டத்தையும் மக்கள் திரளை அணிதிரட்டாமல் விட்டதையும் சுயவிமர்சனம் செய்து தனது அனுபவங்களை சொல்கிறார்.

அதன் மூலம் மகன் சொந்த ஊரில் நிரந்தரமாக குடியேறிய மக்களை திரட்டி மக்களின் மூலமாக கிரனைட் தொழிற்சாலை அதிபராக உள்ள சிவபெருமாளை எப்படி மக்கள் வெற்றிகொள்கிறார்கள் என்பதுதான் நாவலின் காதை. மிக எதார்த்தமான மொழி நடையிலும் சுவாரசியமான சம்பவங்களும் நிறைந்துள்ளது வழக்கறிஞகராக வரும் மனோகரன் அவரின் மகள் முத்தரசி செந்திலுக்கும் முத்தரசிக்கும் இடையேயான காதல். காலனி மக்களையும் ஊர் மக்களையும் வர்க்க போராட்டத்தில் இணைப்பது . கதையின் முக்கிய கதாபாத்திரமாக வரும் ருக்கு என்ற மனநிலை பாதிக்கப்பட்ட பெண் என அனைவரும் மனதில் நிற்கிறார்கள். குறிப்பாக தோழர் காளியப்பனுக்கும் உளவுத்துறை அதிகாரி மூர்த்திக்கும் நடக்கும் உரையாடல் மிகுந்த தைரியத்தை கொடுக்கும்.

மக்கள் திரள் மூலம் அரசாங்க எந்திரத்தை எப்படி செயல்படுத்த முடியும் என்பதையும் ஆளும் வர்க்கங்களின் ( அரசாங்கம் – முதலாளிகள்) இடையேயான முரண்பாடுகளை வளர்ப்பத்தில் மக்கள் போராட்டத்தின் பங்களிப்பையும் உணர்த்துகிறது. நேர்மையான அதிகாரி என பெயருள்ள மாவட்ட ஆட்சியாளர்கள் தனக்கான வாய்பை பயன்படுத்தாமல் அரசாங்கம் மற்றும் முதலாளிகளிடம் மண்டியிடுவதையும் இந்த நாவல் தோலுரிக்கிறது . சமூக மாற்றம் என்பது உற்பத்தி கருவி உற்பத்தி நிகழ்முறையுடன் தொடர்புடையது என மார்க்சியம் சொல்கிறது . அதன் அடிப்படையில் நாவல் பயணிக்கிறது . கடந்தகால நிகழ்வுகளையும் நிகழ்கால நிகழ்வுகளையும் நாவலை படிக்கும் போது தொழில்நுட்ப மாற்றங்களை நாம் உணர முடிகிறது.
அரசியலில் மக்களுக்காக வேலை செய்யும் தோழர்களும் வேலை செய்ய விரும்பும் தோழர்களும் படித்து விவாதிக்க வேண்டிய புத்தகம் .
ஆசிரியர் தோழர் இரா. பாரதிநாதன் தோழருக்கு வாழ்த்துகளும் ! பாராட்டுகளும் !

– நே ராம்பிரபு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *