இந்தியத் தொழிலாளி வர்க்கம் உருவாகி வளர்ந்த வரலாறு பகுதி -6

பழைய இந்தியப் பொருளாதாரத்தின் வடிவமும் சமூகமும்:

33 லட்சம் சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்ட 100 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்ற இன்றை இந்தியாவானது வரலாற்றின் கூர்முனையில் இப்போது நின்று கொண்டிருக்கிறது.நவீன உலகத்தை இறுக்கிப் பிடித்து வரும் அடிப்படையான பிரச்சினைகளும் மோதல்களும் இந்தியாவில் தீவிரமான வகையில் வெளிப்பட்டு வருகின்றன.

இந்திய மக்களின் கடந்தகாலம் என்பது நிலப்பிரபுத்துவ மன்னராட்சி, அந்நிய நாட்டின் கீழ் அடிமை, மனிதத்தன்மையற்ற சுரண்டல் மற்றும் மிக மோசமான துன்புறுத்தல்கள் ஆகியவற்றுக்கு எதிரான கடுமையான போராட்டங்களை பற்றிய உண்மைகள் நிறைந்ததாக இருந்தது. இந்த நாட்டின் மாபெரும் செல்வத்தையும் ஆதார வளங்களையும், அதன் மக்களின் வாழ்கை மற்றும் உழைப்பையும் நிலப்பிரபுத்துவ மன்னாராட்சிகளை தொடர்ந்து இறுதியாக இரண்டு நூற்றாண்டுகளுக்கும் மேலாக தனது மேலாதிக்கத்தின் மூலம் ஏகாதிபத்தியம் சூறையாடி மக்களை கொடுமையான வறுமையில் வாழும் நிலைக்கு தள்ளின. மேற்கத்திய முதலாளித்துவ ஊடுருவலானது இந்த சுரண்டலை மேலும் தீவிரப்படுத்தியது. இந்த சுரண்டலை எதிர்த்து தொடர்சியான போராட்டங்கள் நடந்து வந்தன.

இந்தியாவில் முதலாளித்துவம்:

முதலாளித்துவத்தின் முதல் அறிகுறிகள் 19 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் இந்தியாவில் வெளிப்படத் துவங்கியது.மிகவும் சிக்கலான சமூக மற்றும் பொருளாதார செயல்முறைகளின் மூலம் அது படிப்படியாக வளர்ச்சி பெற்றது. நவீன இந்திய தொழிலாளி வர்க்கம் என்பது இந்தியாவில் முதலாளித்துவ வளர்ச்சிப் போக்கின் விளைவே ஆகும்.

இந்தியாவின் பொருளாதாரம் மற்றும் சமூக அமைப்பு குறித்து மார்க்ஸ்:

1853 ஆம் ஆண்டில் “கிழக்கிந்தியக் கம்பெனியின் சாசனத்தை” புதுப்பிப்பதற்க்கான விவாதம் ஆங்கிலேயப் பாராளுமன்றத்தில் கடைசி முறையாக வந்த போது ” நியூயார்க் டெய்லி ட்ரிப்யூன் ” நாளிதழுக்கு இந்தியா குறித்த கட்டுரைகளை மார்க்ஸ் தொடர்ந்து எழுதி வந்தார். இவையும் “மூலதனம் ” நூலில் இந்தியாவை பற்றிய பல்வேறு பகுதிகளும் இந்தியாவை பற்றி மார்க்சின் கருத்தோட்டங்களை தெரிவிப்பவையாக விளங்கும்.

” மூலதனம்” நூலின் முதல் தொகுதியில் பரம்பரியமான இந்தியப் பொருளாதாரம் மற்றும் மற்றும் சமூக அமைப்பு முறை ஆகியவை குறித்து தனது ஆய்வை மார்க்ஸ் வெளிப்படுத்தியிருந்தார். இவ்வாறு இந்தியா குறித்து மார்க்சின் ஆய்வு காலகட்டத்தில் இங்கிலாந்தில் ஏற்கனவே தொழிற்புரட்சி நடந்து முடிந்திருந்தது. முதலாளித்துமானது இங்கிலாந்திலிருந்து இதுர ஐரோப்பிய நாடுகளுக்கும் படிப்படியாக விரிவடைந்து சென்றது. இந்திய தொழில் மற்றும் விவசாயம் ஆகிய பாரம்பரியமான அமைப்பானது ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தின் பகல் கொள்ளையால் சேத முற்றது. ரயில்வே அமைப்பு உருவாக்கப்பட்டதும் காலனிய நலன்களை மேலும் வலுப்படுத்துவதற்கான ஒரு சில தொழில்களை இணைத்ததும் இந்த செயல்முறையை முற்றுப்பெறச் செய்தன.”மூலதனம்” நூலின் முதல் தொகுதியில் இந்த பழைய பொருளாதார மற்றும் சமூக அமைப்பு குறித்து தெளிவான சித்திரத்தை மார்க்ஸ் வழங்கியிருந்தார்

புராதான இந்தியக் குழுக்கள் அவற்றில் சில இன்றும்கூட செயல்பட்டு வருகின்றன நிலத்தைப் பொதுவாக கொண்டிருப்பதை அடிப்படையாகவும்,விவசாயத்தையும் கைத்தொழிலையும் ஒன்றிணைப்பதை அடிப்படையாகவும் மாற்றப்படவே முடியாத உழைப்பு பிரிவினையை அடிபடையாகக் கொண்டதாகவும் ( இங்கு உழைப்பு பிரிவினை என்பது இந்திய சமூகத்தின் சாதிய அடுக்கு முறை அமைப்பு முறையை குறிக்கிறது ) அமைகின்றன .

எங்கெல்லாம் ஒரு புதிய குழு துவங்கபடுகிறதோ அங்கெல்லாம் இந்த அமைப்பானது மிகத் தயாரான நிலையில் ஒரு திட்டம் மற்றும் முறை என்ற வகையில் பயன்படுகிறது. இந்த மாற்றவியலாத தன்மையானது ஆசிய நாடுகள் தொடர்ந்து கலைக்கப்பட்டு மீண்டும் நிறுவப்படுவதும் அரச பரம்பரையில் முடிவேயில்லாத வகையில் மாற்றங்கள் ஏற்பட்டு வருவதற்கும் முற்றிலும் மாறுபட்டதாக அமைகிறது . அரசியல் வானில் எழுகின்ற புயல்மேகங்களால் சமூகத்தின் பொருளாதார அம்சங்கள் பாதிக்காத வகையில்தான் இந்த அமைப்பு அமைந்துள்ளது.

மார்க்சின் இந்த விளக்கமானது புராதன இந்தியப் பொருளாதார மற்றும் சமூகம் ஆகியவற்றின் சாரத்தை வழங்குவதாக அமைகிறது.

– தொடரும்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *