வேலையின்மைப் பிரச்சினை: வென்றெடுக்கும் வழிகள்:

மனித உரிமைகளில் முதன்மையானது உயிர் வாழும் உரிமை. உயிருடன் இருப்பது என்றில்லாமல், தன்மானத் துடன் உயிர் வாழ வேண்டும் என்பதுதான் இதன் பொருள். தன்மானத்துடன் உயிர் வாழ்வதற்கு அத்தியாவசியமான இரண்டு அம்சங்கள் சுதந்திரமும் வாழ்வதற்கான ஆதார வளங்களும்.

ஆதார வளங்களான நிலங்கள் பெரும் பணக்கார விவசாயிகள், தொழிற்சாலை முதலாளிகள், அரசு ஆகியோரின் வசம் உள்ளன. உற்பத்திச் சாதனங்கள் உழைப்பவர்களின் கையில் இல்லை. இந்த நிலையில், உழைப்புக்கேற்ற ஊதியமும் கிடைப்பதில்லை.

மனிதர்கள் வாழ வேண்டும் என்றால் உணவு, உடை, இருப்பிடம் ஆகிய மூன்றும் அத்தியாவசியம். இவற்றைப் பெறுவதற்கு மனிதர்களுக்குக் கண்ணி யமான வேலையும், வாழ்வதற்குத் தேவையான நியாயமான ஊதியமும் அவசியம். ஆனால், உலகம் முழுவதும் பல கோடி மக்கள் இவை கிடைக்காமல் வறுமையில் வாடிவருகின்றனர்

அதிகரிக்கும் வேலையின்மை:

வேலையின்மை என்பது உலகில் முதன்மையான பிரச்சினையாக உருவெடுத்திருக்கிறது. இந்தியாவும் இதிலிருந்து தப்ப முடியாது. 30 வயதுக்குக் கீழ் உள்ளவர்களில் ஏறத்தாழ 53% பேர் வேலையின்றி உள்ளனர். இந்தியப் பொருளாதாரக் கண்காணிப்பு மையத்தின் 2023 ஜூலை மாதத் தகவலின்படி இந்தியாவில் ஒட்டுமொத்த வேலையின்மை விகிதம் 7.95%ஆக அதிகரித்திருக்கிறது.

2014இல் பாஜக ஆட்சிப் பொறுப்பை ஏற்றபோது, அது 5.44%ஆக இருந்தது. இது போதாதெனச் சமீபகாலமாகச் செயற்கை நுண்ணறிவு என்னும் உயர் தொழில்நுட்பம், முதலாளிகள் கொள்ளை லாபம் அடையும் வகையில் வளர்த்தெடுக்கப்பட்டிருக்கிறது; ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழக்கவும் இது வழிவகுத் திருக்கிறது. இதனால் வேலையின்மை மேலும் அதிகரித்துள்ளது.

குறிப்பாக, தகவல் தொழில்நுட்பத் துறை, சேவைத் துறைகளில் முக்கிய வேலைகளில் இருந்தவர்கள் வெளியேற்றப்பட்டிருக்கிறார்கள். இந்தியாவில் மிகப் பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் கணிசமான அளவுக்கு ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டிருக்கின்றனர்.

மத்திய அரசுத் துறையில் சுமார் 9.64 லட்சம் பணியிடங்கள் காலியாக இருக்கின்றன. பொதுத் துறை நிறுவனங்களில் ரயில்வே துறையில் மட்டும் 2023 ஜூலை நிலவரப்படி 2.63 லட்சம் பணியிடங்கள், மத்தியப் பல்கலைக்கழகங்களில் 6,028 பணியிடங்கள் காலியாக உள்ளன. தமிழ்நாடு அரசுத் துறைகளில் சுமார் 5 லட்சம் பணியிடங்கள் பல்லாண்டு காலமாக நிரப்பப்படாமல் உள்ளன.

இந்தப் பணியிடங்களின் எண்ணிக்கை பல பத்தாண்டுகளுக்கு முன்பாக நிர்ணயிக்கப்பட்டவை. ஆண்டுதோறும் மக்கள்தொகை அதிகரித்துவரும் நிலையில், அதற்கேற்பப் புதிய பணியிடங்கள் உருவாக்கப்படவில்லை. இதனால், பணியாளர் பற்றாக்குறை காரணமாக, இருக்கும் ஊழியர்களே பணிச்சுமையை ஏற்க வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

புதிதாக நிரந்தரப் பணி நியமனம் என்பதே அநேகமாக இல்லை. இதனால் படித்த இளைஞர்கள் போட்டித் தேர்வுகளில் வெற்றிபெற்றாலும் பணி நியமனம் எப்போது நடைபெறும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. புதிய வேலை கிடைக்காது என்பது மட்டுமல்லாமல், வேலையில் இருப்பவர்களுக்கே பணி நிரந்தரம் என்பது உத்தரவாதம் இல்லாத நிலையில்தான் இருக்கிறது.

தத்தளிக்கும் தொழிலாளர்கள்:

நவீனத் தாராளமயக் கொள்கையை மத்திய-மாநில அரசுகள் போட்டி போட்டுக்கொண்டு அமல்படுத்துகின்றன. புதிய வேலைகளை உருவாக்கும் வகையில் அரசுகள் மேலும் முதலீடு செய்வதற்குப் பதிலாக, சகலமும் தனியார்மயம் என்பதைத் தீவிரமாகச் செயல்படுத்துகின்றன. அரசு முதலீட்டில் தொடங்கப்பட்டு, லட்சக்கணக்கானோருக்கு வேலை அளிக்கும் பொதுத் துறை நிறுவனங்கள் தனியாருக்குத் தாரைவார்க்கப்படுகின்றன. 26 நிறுவனங்களை முற்றிலுமாக மூடுவது, 10 நிறுவனங்களில் அரசின் பங்குகளை விற்பது உள்பட 74 பொதுத் துறை நிறுவனங்களை ‘நிதி ஆயோக்’ அமைப்பு அடையாளம் கண்டுள்ளது.

அந்நிய மூலதனம், உள்நாட்டு முதலாளிகள் மூலதனம் மூலம் தொடங்கப்படும் தொழிற்சாலை களுக்கு நிலம், கடன், மின்சாரம், நீர், வரிச்சலுகை எனப் பல்வேறு ஊக்க உதவிகளை அரசு செய்கிறது. ஆனால், அதற்கேற்ப வேலைவாய்ப்பு உருவாக்கப்படவில்லை.

தனியார் முதலாளிகள் குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு வேறு தொழில், வேறு இடம் என்று மாறிச் சென்றுவிடுகிறார்கள். இதனால், கிடைக்கிற வேலை எதுவாக இருந்தாலும், பெறுகிற கூலி எவ்வளவு குறைவாக இருந்தாலும் உயிர் வாழ்வதற்காக உடன்பட்டுதான் தீர வேண்டும் என்ற நிலைக்கு உழைக்கும் மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

ஒப்பந்த முறை, வெளி முகமை, தொகுப்பூதியம், மதிப்பூதியம் எனக் கூலியைக் குறைத்து, உழைப்புச் சுரண்டலை அரசே அதிகரிக்கிறது. சம வேலைக்குச் சம ஊதியம் வேண்டும் என்கிற கோரிக்கை வலுப்பெற்றுவரும் காலத்தில், ஒரே வேலை செய்யும் நிரந்தரப் பணியாளருக்கு ஒரு சம்பளமும், ஒப்பந்த ஊழியருக்கு மிகக் குறைவான சம்பளமும் வழங்கப்படுகிறது.

கண்ணியமான வேலை, நிறைவான ஊதியம் என்பது பெரும்பகுதித் தொழிலாளர்களுக்குப் பகல் கனவாகவே இருக்கிறது. விலைவாசி அன்றாடம் உயர்ந்துவரும் நிலையில், குறைந்த ஊதியத்தில் வாழ்ந்துவரும் குடும்பங்கள் கல்வி, சுகாதாரம், குடும்பச் செலவுகளுக்குத் தாக்குப்பிடிக்க முடியாமல் அல்லாடுகின்றன.

காற்றில் பறக்கும் வாக்குறுதிகள்:

அரசு, பொதுத் துறை நிறுவனங்களில் மட்டும்தான் இடஒதுக்கீடு நடைமுறையில் இருக்கிறது. எல்லாம் தனியார்மயம் என்கிற கொள்கையின் காரணமாக, இடஒதுக்கீட்டு அடிப்படையில் பணி நியமனம் பெற வேண்டிய பகுதியினர் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பட்டியல் சாதியினர், பழங்குடியினருக்கு உரிய காலிப் பணியிடங்கள் பல்லாண்டு காலமாக நிரப்பப்படாமல் உள்ளன. மேலும், தனியார் துறையில் இடஒதுக்கீடு அமல்படுத்தப்பட வேண்டும் என்ற சட்டம் இயற்றப்பட்டால்தான் இடஒதுக்கீடு முழுமைபெறும்.

ஆண்டுதோறும், 2 கோடிப் பேருக்கு வேலை தருவோம், வேலையின்மைப் பிரச்சினைக்கு முடிவுகட்டுவோம் என்று வாக்குறுதி கொடுத்து ஆட்சியைக் கைப்பற்றிய பாஜக, அந்த வாக்குறுதியை நிறைவேற்றுவது குறித்துக் கவலைப்படவில்லை. மாறாக, தற்போது ஆண்டுக்கு 10 லட்சம் பேருக்கு வேலை என்று பிரதமர் பேசிவருகிறார்.

உண்மையில், இந்தக் காலத்தில் வேலையிழப்பே நிதர்சன நிலை. அத்துடன் புதிய இயந்திரங்கள், நவீனத் தொழில்நுட்பங்கள், வேலை நேரத்தை அதிகரிப்பது, ஊதியத்தைக் குறைப்பது போன்றவற்றின் மூலம் முதலாளிகள் கொள்ளை லாபம் எடுக்க சட்டப்படியே வழிவகை செய்கிறது மத்திய அரசு.

அரசு செய்ய வேண்டியது:

புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க அரசின் பொது முதலீடு அதிகரிக்கப்பட வேண்டும். அதிக வேலைவாய்ப்புகளைத் தரும்துறைகளைத் தேர்ந்தெடுத்து வளர்க்க வேண்டும்.வேளாண்மைத் துறையில், வேளாண் விளைபொருள்களை மதிப்புக் கூட்டப்பட்ட பொருள்களாகவும், மூலப்பொருளாகவும் கொண்டு பல்வேறு புதிய தொழிற்சாலைகளை உருவாக்க முடியும்.

தொழில் துறை, சேவைத் துறை, வேளாண் துறை ஆகிய மூன்றிலும் கூடுதலான வேலைவாய்ப்புகளை உருவாக்கமுடியும். குறைந்தபட்ச ஊதியம் மாதம் ரூ.26,000 என்று நிர்ணயித்து வழங்குவதன் மூலம், கௌரவமான வாழ்க்கைக்கு அடித்தளமிட முடியும்.

பணிப் பாதுகாப்பு, நிரந்தர வேலை, கௌரவமான ஊதியம் கோரி உலகம் முழுவதும் உழைக்கும் மக்கள் பெரும் போராட்டங்களை நடத்தி வருகின் றனர். இந்தியாவிலும் வேலையின்மை என்பது எரிமலையாகக் கொதித்துக்கொண்டிருக்கிறது. அது எப்போது வேண்டுமானாலும் வெடித்துச் சிதறி, ஆட்சியாளர்களுக்கு அழிவை ஏற்படுத்தும் என்பதை உணர்ந்து மத்திய, மாநில அரசுகள் வேலையின்மைப் பிரச்சினைக்குத் தீர்வுகாண முனைப்புடன் செயல்பட வேண்டும்.

பெ.சண்முகம் (தலைவர்
தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்)

– தொடர்புக்கு: pstribal@gmail.com
(இந்து தமிழ்திசை நாளிதழில் வெளியான கட்டுரை)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *