மேதினத்தின் வரலாற்று பின்னணி: தோழர் சிலம்பரசன் சே

மே தினம், உழைப்பாளர் தினம் என்று அடையாளப்படுத்தப்படும் இந்த நாள் தோன்றியதன் வரலாற்று பின்னணி என்பது மிக முக்கியமானது.

விவசாய உற்பத்தியில் இருந்து முதலாளித்துவ உற்பத்தி முறைக்கு சமூகம் மாறியவுடன் மிக வேகமாக சமூக மாற்றம் நடைபெற்றது. விவசாய உற்பத்தியில் நிலங்களோடு பிணைக்கப்பட்டு நிலப்பிரபு கட்டுப்பாட்டில் வாழ்ந்த நிலைமை மாறி ஆலை முதலாளிகளின் கட்டு பாட்டில் வாழும் நிலைக்கு பெரும்பான்மை மக்கள் தள்ளப்பட்டார்கள் இதனால் விவசாய உற்பத்தி முறையில் பிரிந்து வாழ்ந்து வந்த மக்கள் ஆலையில் வேலை செய்ய வேண்டிய நிர்பந்தத்தின் காரணமாக ஒருங்கிணைய ஆரம்பித்தார்கள். அதாவது விவசாய உற்பத்தியில் பண்ணை அடிமைகளாக இருந்தவர்கள் அந்தந்த நிலப்பிரபு கட்டுப்பாட்டை தாண்டி ஒன்று கூடும் வாய்ப்பு இல்லாமல் இருந்த நிலைமை மாறி முதலாளித்துவ உற்பத்தி முறையில் நகரங்களுக்கு வந்து ஆலை முதலாளிகளின் கட்டுப்பாட்டிற்க்குள் வந்தாலும் பழைய பண்ணை அடிமைகள் போல அல்லாமல் சுதந்திர தொழிலாலர்களாக மாறி இருந்தார்கள்.

பண்ணை அடிமையாக இருந்த போது 24 மணி நேரமும் பண்ணையாருக்கு அடிமையாக இருந்த நிலை இப்போது இல்லை ஆனால் தற்போது ஒரு நாளுக்கு எத்தனை மணி நேரம் வேலை செய்கிறோமோ அத்தனை மணி நேரம் மட்டும் முதலாளிக்கு அடிமையாக இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. வேலை நேரம் போக மீதி நேரம் ஆலைக்கு வெளியே சுதந்திர மனிதராக வளம் வர அனுமதிக்கப் பட்டார்கள். இதனால் உழைப்பாளி மக்கள் அந்த நேரத்தில் ஒன்று கூடி தங்களின் பிரச்சனையை பற்றி பேச வாய்ப்பு கிடைத்தது.

இவை மட்டும் அல்லாமல் துண்டு துண்டாக நிழப்பிரபுவின் கீழ் சிதறி கிடந்த மக்களை ஆலை உற்பத்தி முறை ஒரே ஆலையில் ஆயிரக்கானக்கான மக்களை ஒன்று சேர வைத்தது. இதனால் அவர்களின் வாழ்க்கை பிரச்சனையை அறிந்து கொள்ள அது உதவியது..

பண்ணை அடிமையாக இருந்த போது தனது நிலத்தில் உழைப்பது போக மீதி நேரம் பண்ணையார் நிலத்தில் கூலி இல்லாமல் வேலை பார்த்து வந்த நிலைமை மாற்றம் அடைந்து தற்போது ஒரு நாளைக்கு கிட்ட தட்ட 18 மணி நேரமும் ஆலையிலேயே வேலை பார்த்தால் தான் தானும் தன் குடும்பமும் உயிர் வாழ முடியும் என்ற நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டார்கள்.

பாதுகாப்பற்ற பணி சூழல், ஓயாத வேலை, இடைவேளை இல்லாத இடுப்பை உடைக்கும் உழைப்பு என மக்கள் கடுமையாக வேலை வாங்கப்பட்டார்கள்.

இதை எதிர்த்து போராட வேண்டும் என்ற நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டார்கள். போராட்டம் தொடங்கியது. அன்றில் இருந்து இன்றுவரை வேலை நேரத்தை முறை படுத்தும் போராட்டம் தொடர்கிறது.

இந்த போராட்டத்தின் முத்தாய்ப்பான நாளாக மே மாதம் முதல் தேதி வந்து சேர்ந்தது.

19-ஆம் நூற்றாண்டு முழுவதும் வேலை நேரத்தை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கையோடு உலகம் முழுவதும் உள்ள தொழிலாளர்கள் தத்தமது நாடுகளில் போராடி வந்த நிலையில் 1864-ஆம் ஆண்டு துவக்கப்பட்ட முதலாம் அகிலத்தில் ஒரு நாளுக்கான வேலை நேரம் 8-மணி நேரமாக நிர்ணயிக்கப்பட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றபட்டது அந்தத் தீர்மானத்தை முன்மொழிந்தவர் தோழர் காரல்மார்க்ஸ் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

அதன் பிறகு 8-மணி நேரம் வேலைக்கான போராட்டம் பெரும் எழுச்சியோடு நடைபெற தொடங்கியது. 8-மணி நேர வேலை 8-நேரம் மணி நேர ஓய்வு 8-மணி நேர உறக்கம் என்ற கோஷத்தோடு பாட்டாளி வர்க்கம் போராடி வந்த நிலையில் 1884-ஆம் ஆண்டு அமெரிக்காவின் சிக்காகோ நகரில் நடைபெற்ற அமெரிக்க தொழிற்சங்க கூட்டமைப்பின் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானமே, மே தினம் உருவானதற்கான காரணமாக உள்ளது.

1886 மே-1 ஆம் தேதி முதல் 8-மணி நேர வேலை என்பதை சட்டபூர்வமாக்க வேண்டும் என்று அந்தத் தீர்மானம் கூறியது.

தீர்மானத்தை நிறைவேற்றக்கோரி 1886-மே 1-தேதி அன்று அமெரிக்காவில் மிகப்பெரிய வேலை நிறுத்தம் நடைபெற்றது அதனைத் தொடர்ந்து மே 3-ம் தேதி ஹேமார்க்கெட் சதுக்கத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் காவலர்களால் கலவரம் தூண்டப்பட்டு, துப்பாக்கி சூடு நடத்தப்பட்டு தொழிலாளர்கள் கொலை செய்யப்பட்டனர். அந்தப் போராட்டத்தில் உயிர் நீத்த தொழிலாளர்களை நினைவு கூறும் நாளாக, பாட்டாளி வர்க்கத்தின் நலனை முன்னெடுக்கும் கோரிக்கை நாளாகவும் மே தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.

இந்தியாவில் முதன் முதலாக மே தினத்தை அனுஷித்தவர் தோழர் சிங்காரவேலர் ஆவார். 1923-ஆம் ஆண்டு சென்னையில் செங்கோடியை ஏற்றி மே தினத்தை நினைவு கூர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

தொழிலாளர்களின் உழைப்பு சக்தியால் உருவான செல்வங்கள் அனைத்தும் வெகு சொற்பமான எண்ணிக்கையில் உள்ள பெரும் முதலாளிகளின் கைகளுக்கு மட்டுமே செல்கிறது. அந்த செல்வங்களை படைத்த தொழிலாளர்களோ தங்களுடைய அன்றாட வாழ்வை செலவு எதிர்கொள்ள முடியாமல் வறுமையில் வாழ்கிறார்கள்.

அடிப்படைத் தேவைகள், அன்றாட குடும்பச் செலவு, கல்வி, மருத்துவம், உள்ளிட்ட செலவீனங்கள் நாள்தோறும் அதிகரித்து வரும் நிலையில் முதலாளிகளோ, தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய சட்டப்படியான கூலியை கூட வழங்க மறுக்கிறார்கள். தொழிற்சங்கங்கள் ஊதிய உயர்வு கோரிக்கை வைத்து போராடினால் பழிவாங்கும் நடவடிக்கை உள்ளக்கப்படுகிறார்கள்.

மற்றொருபுறம் ஒப்பந்த தொழிலாளர்களை நேரடி உற்பத்தியில் ஈடுபடுத்துவதன் மூலம் குறைவான கூலி கொடுத்து அவர்களை சுரண்டுகிறார்கள். அனைவருக்கும் அவருடைய சக்திக்கேற்ப வேலையையும் வேலைக்கேற்ப கூலியையும். உத்திரவாதப்படுத்த இந்த அரசு தயாராக இல்லை ஏனெனில் இவை அதானி, அம்பானிகளுக்காக செயல்படும் அரசாகும் அதற்காக தொழிலாளர்கள் போராடி பெற்ற ஜனநாயக உரிமைகளை இல்லாமல் செய்வதோடு தொழிலாளர் சட்டங்களையும் இந்த அரசு திருத்தம் செய்து தொழிலாளர் விரோத போக்கை கடைபிடித்து வருகிறது.

மேலும் வேலை நேரத்தை நீட்டிக்க வேண்டும் என்ற முதலாளிகளின் கோரிக்கையை ஆதரித்து நிற்கும் அரசுகளும், அதை உடனடியாக சட்டமாக்கிய அரசியல் வாதிகளையும் தான் நாம் பெற்று இருக்கிறோம். அதற்கு நியாய விளக்கம் எழுதும் கூலி எழுத்தாளர்களும் நிறைந்த நம் நாட்டில் பாட்டாளி வர்க்கத்தின் கோரிக்கைகள் குறித்து பேசினால் கூட கண்டு கொள்வார் யாருமிலர்.

பாட்டாளி வர்க்கம், விவசாய வர்க்கம், சுய வேலை செய்து பிழைத்து வரும் மக்கள் கூட்டம் என்ற பெரும் மக்கள் கூட்டத்தின் விடுதலைக்கு தலைமை தாங்க வேண்டிய பாட்டாளி வர்க்கம் சாதியாகவும், மதமாகவும் அடையாள அரசியலுக்குள் மூழ்கி உள்ளது பகுத்தறிவு சிந்தனை அற்று பழைய குப்பைகளான சாதி, மதம் எனும் முடை நாற்றம் எடுக்கும் மேடுகளின் மீது நின்று கொண்டு தனது அன்றாட வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து அக்கறை இல்லாமல் வாழ்ந்து வருகிறது…

இந்தியாவில் சுதந்திரத்திற்கு முன்பே வேலை நேரம் 8 மணி நேரம் என்று சட்டமானாலும் நடைமுறையில் கடந்த 80 ஆண்டுகளில் ஒரு சில நிறுவனங்கள் தாண்டி 8 மணி நேர வேலை நேரம் என்பது கடை பிடிக்கப்படவே இல்லை. குறிப்பாக சிறு குறு தொழில் நிறுவன உற்பத்தி முறையை அடித்தலமாக கொண்டிருக்கும் நமது நாட்டில் அத்தகைய தொழில் துறையில் 8 மணி நேர வேலை நேரம் என்பது இன்றளவும் கனவாகவே இருக்கிறது..

இது இப்படி இருக்க தற்போது தொழிற்சாலை சட்டங்கள் திருத்தப்பட்ட போது கூட இந்திய பாட்டாளி வர்க்கம் அதை எதிர்த்து போராட சக்தி அற்றதாக இருந்தது.

வேலை நேரத்தை குறைத்து மீதி நேரத்தை குடும்பத்தோடும், நண்பர்களோடும் செலவிட முடியாத ஒரு சமூகம் பன்பாட்டு கலாச்சாரம் சார்ந்து முன்னேரவே முடியாது என்பது என் கருத்து ஆகும். அதே போல அரசியலில் ஆர்வமற்று தான் தோன்றி தனமாக சுற்றி திரியும் பாட்டாளி வர்க்கம் எக்காலத்திலும் தனக்கான விடுதலை அடைய முடியாது என்பதும் என்னுடைய அசைக்க முடியாத நம்பிக்கை ஆகும்..

எனவே சாதி, மதம் உள்ளிட்ட எந்த அடையாள அரசியலுக்குள்ளும் சிக்கி கொள்ளாமல் பாட்டாளி வர்க்க அரசியலை உயர்த்தி பிடுக்க இந்த மே தினத்தில் உறுதி ஏற்போம்..

மே தினம் வாழியவே..

மே தின தியாகிகள் வாழியவே

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *