இந்திய தொழிலாளர் வர்க்கம் வளர்ந்து வந்த வரலாறு பகுதி-3

ராபர்ட் ஓவனின் கூட்டுறவு தத்துவம் சரிவுக்கு பிறகு தொழிலாளர்கள் அதுவரையில் அடைந்திருந்த அனுபவமானது பொருளாதார கோரிக்கைகளை மட்டுமே கொண்ட நடவடிக்கைகளின் மூலம் முன்னேற்றம் அடைய முடியாது என்பதை படிப்படியாக புரிந்து கொள்ள வழிவகுத்தது.

மக்கள் சாசனம்:

இங்கிலாந்து தொழிலாளி வர்க்கத்தின் அடுத்த கட்டத்தில் வாக்குரிமை என்பது பிரதான அம்சமாக மாறியது .1836 ஆம் ஆண்டில் லண்டன் நகர உழைக்கும் ஆண்களின் கழகம் என்ற அமைப்பு நிறுவப்பட்டது. அடுத்த ஆண்டில் வில்லியம் லோவெட் மற்றும் பலரின் முன்முயற்சியின் விளைவாக இக்கழகம் மக்கள் சாசனம் என்ற ஆவணத்தை உருவாக்கி அரசுக்கு கோரிக்கை வைத்தது. இந்த சாசனம் ஆறு கோரிக்கைகளை உள்ளடக்கியது.
1. 21 வயதானவர்களுக்கு வாக்குரிமை

2. ரகசிய வாக்கெடுப்பு.

3. நாடாளுமன்ற உறுப்பினராக ஆவதற்கு சொத்துள்ளவர்களாக இருக்க வேண்டும் என்ற நிபந்தனை இல்லாமல் இருப்பது.

4. நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஊதியம்.

5.சமநிலையான தொகுதிகள்

6. ஆண்டுதோறும் நாடாளுமன்ற கூடுவது.

1838 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் பர்மிங்ஹாம் நகரில் நடந்த மாபெரும் கூட்டத்தில் பல்வேறு குழுக்களை சேர்ந்த தலைவர்கள் ஒன்று மக்கள் சாசன இயக்கத்தில் தங்களது இயக்கங்களை இணைத்து கொண்டனர். மோசமான பொருளாதார நெருக்கடிகள் மற்றும் பெருமளவிலான வேலையின்மை ஆகியவை நிலவி வந்த காலத்தில் மக்கள் சாசன இயக்கத்தின் கோரிக்கைகள் இங்கிலாந்து தொழிலாளி வர்க்கத்தை பெரிதும் கவர்ந்தது .இந்த கோரிக்கைகளை ஆதரித்து 30 லட்சம் கையெழுத்து வாங்கப்பட்டது.

சாசனவாதிகளின் போராட்டமும் இயக்கத்தில் ஏற்பட்ட முரண்பாடுகளும்:

சாசனவாதிகளின் வெகுஜனக் கோரிக்கைகளை பிற்போக்கு வாத நாடாளுமன்றம் வெறுப்புடன் மறுதலித்த நிலையில் வெகுஜன வேலை நிறுத்தம், கலகம் போன்ற வடிவங்களில் கிளர்ச்சிகள் வெடிக்கத் துவங்கியது. அமைப்புகுள் “நியாய சக்தி” மற்றும் “உடல் வலிமை சக்தி ” என இரண்டு குழுக்கள் உருவாகின.”நியாய சக்தி ” கட்சியானது முதலாளித்துவ தாரளாவாதிகளுடன் கூட்டணி சேர்ந்து நீண்ட காலம் போராட வேண்டும் எனவும் “உடல் வலிமை சக்தி ” கட்சியானது வெகுஜன வேலை நிறுத்தமே தீர்மானகரமான ஆயுதம் என கூறின. இந்த முரண்பாடுகள் தொழிலாளர்களின் ஒன்றுபட்ட நடவடிக்கையில் சற்றே பின்னடைவை ஏற்படுத்தியபோதிலும் இந்த இயக்கத்தின் வீச்சும் வலிமையும் சமூக ரீதியான சில சலுகைகளை வழங்க வேண்டிய நிர்ப்பந்தத்தை பாராளுமன்றத்திற்கு ஏற்படுத்தியது.

கிளர்ச்சிகள் ஒடுக்கப்படுதல்:

இந்த இயக்கம் 10 ஆண்டு காலத்திற்கு தொடர்ந்தது .எனினும் ஒரு அமைப்பு ,கட்சி என்பதை கொண்டு செல்வதற்கான தொழிலாளி வர்க்கத்திற்கு இருந்த அனுபவமின்மையின் விளைவாக அடிப்படைக் கோரிக்கைகளைப் பொறுத்தவரையில் இந்த இயக்கத்தை வெற்றிகரமானதொரு முடிவுக்கு கொண்டு வரத் தவறியது.1848 ஆம் ஆண்டில் சாசனவாதிகள் நடத்திய தொடர்ச்சியான மாபெரும் கிளர்ச்சிகள் ஆர்பாட்டங்கள் தோல்வியில் முடிந்தது. அதே ஆண்டில் ஐரோப்பிய கண்டத்தில் எழுந்த புரட்சிகளும் தோற்கடிக்கப்பட்டன.இது சாசன இயக்கத்தின் தோல்வியை குறிப்பதாக அமைந்தது.

பட்டவர்த்தனமாகத் தென்பட்ட பலவீனங்கள் இருந்தபோதிலும்கூட சாசன இயக்கமானது இங்கிலாந்து தொழிலாளி வர்க்கம் முழுவதையும் தீவிரப்படுத்துவதில் வெற்றியடைந்தது என்பதோடு மட்டுமின்றி உலக தொழிலாளி வர்க்கத்தின் பாதைக்கு ஆழ்ந்த முக்கியதுவமிக்க ஒன்றாக விளங்கியது.எனினும் ஒரு தலைமுறைக்குள்ளாகவே சாசன இயக்கத்தின் புகழ்பெற்ற ஆறு கோரிக்கைகள் அனைத்துமே கிட்டத்தட்ட சட்ட வடிவில் செயல்படுத்தப் படுவதை இங்கிலாந்து தொழிலாளி வர்க்கத்தால் காண முடிந்தது.

தொடரும்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *