இந்தியத் தொழிலாளி வர்க்கம் உருவாகி வளர்ந்த வரலாறு பகுதி -7

ஏகாதிபத்தியத்திற்கு சேவை செய்யும் புதிய நிலப்பிரபுத்துவ அமைப்பு:

காலனியாட்சியும்,பிரிட்டிஷ் ஏகாதிபத்தியவாதிகளின் சுரண்டலும் இந்தப் பாரம்பரியமான மற்றும் சுயதேவையை பூர்த்தி செய்து கொள்ளும் சமூகங்களின் உற்பத்தி முறையினை முற்றிலுமாக நிர்மூலம் செய்தன.

“18ஆம் நூற்றாண்டு முழுவதிலும் இந்தியாவிலிருந்து இங்கிலாந்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட செல்வங்கள் அனைத்துமே பெருமளவிற்கு அந்த நாட்டை நேரடியாகச் சுரண்டுவதால் பெற்றதே தவிர ,வணிகத்தினால் பெற்ற செல்வம் என்பது ஒப்பளவில் மிகக் குறைவானதே ஆகும். அங்கு கிடைத்த மாபெரும் செல்வங்கள் அனைத்தும் இங்கிலாந்திற்கு ஏற்றுமதி செய்யப்பட்டன.

இந்தியாவின் செல்வத்தை சுரண்டி இங்கிலாந்திற்கு அனுப்புவதற்கானதொரு கருவியாகவே கிழக்கிந்திய கம்பெனி செயல்பட்டது.இந்திய உழைக்கும் மக்களின் வியர்வையும் ரத்தமும் பணமாக்கப்பட்டு இங்கிலாந்தில் மூலதனத்தை சேகரிக்கும் முக்கிய ஆதாரமாக மாறியது.1757ஆம் ஆண்டிற்கும் 1812ஆம் ஆண்டிற்கும் இடைப்பட்ட 55ஆண்டுகாலப் பகுதியில் பிரிட்டிஷ் காலனியாதிக்கவாதிகள் இந்தியாவிலிருந்து பெற்ற நேரடி வருமானம் என்பது 10கோடி பிரிட்டிஷ் பவுண்டிற்கும் அதிகமாகவே இருந்தது.”-( கார்ல் மார்க்ஸ் கிழக்கிந்திய கம்பெனி அதன் வரலாறும் விளைவுகளும் கார்ல் மார்க்ஸ் மற்றும் எங்கெல்ஸ் எழுதிய காலனியாதிக்கம் பற்றி என்ற நூலில் அடங்கியது )

ஜமீன்தாரி மற்றும் ரயத்துவாரி முறைகள்:

சதிச் செயல்களின் மூலமாக கொள்ளையடிப்பது என்ற முறைக்கு பதிலாக சுரண்டலானது முறைப்படுத்தப்பட்டது.நிலையான வருமானத்திற்கும் நிலையான ஆட்சிக்கும் வேண்டிய வழிகளை காலனியாதிக்கவாதிகள் உருவாக்கினர் அதற்காக நிர்வாக முறைகளிலும் நில அமைப்பிலும் ஒரு சில மாற்றங்களை அறிமுகப்படுத்தினர்.

1793ஆம் ஆண்டில் கார்ன்வாலிஸ் பிரபு வைஸ்ராய் ஆக இருந்தகாலத்தில் நிரந்தர குடியேற்றத்திற்கான சட்டம் ஒன்றை பிரிட்டிஷ் காலனியாதிக்கவாதிகள் நிறைவேற்றினர்.இதன் மூலம் கிழக்கு இந்தியாவில் இருந்த ஜமீன்தார்களிடமிருந்து பெறப்பட வேண்டிய நிலையான வரிவிகிதம் நிர்ணயிக்கப்பட்டது.1793ஆம் ஆண்டின் சட்டம் அதைத் தொடர்ந்து நிறைவேற்றப்பட்ட சட்டங்கள் மூலமாக நிலத்தின் மீதான உரிமையானது ஜமீன்தாரிகளுக்கு மட்டும் உரியதாக மாற்றபட்டது .இதில் மக்களிடம் இருந்த நிலங்கள் பறிக்கப்பட்டு ஜமீன்தாரிகளுக்கு வழங்கப்பட்டது. நிர்ணயிக்கப்பட்ட வரி தொகையை ஜமீன்தாரிகள் செலுத்த தவறும் பட்சத்தில் வெறொருவருக்கு அந்த நிலங்கள் மாற்றப்பட்டன .அதனால் ஜமீன்தாரிகள் தங்களது சொந்த நலனை காப்பாற்றிகொள்ள விவசாயிகள் மீதான சுரண்டலை மேலும் தீவிரப்படுத்தினர். பெரும்பாலான நேரங்களில் இந்த சுரண்டல் மனிதத் தன்மையற்றதொரு நிலைக்கு உயர்ந்தது. வரியை உயர்த்தும் அதிகாரமும் ஜமீன்தாரிகள் பெற்றிருந்தனர்.

இந்தியாவின் தென்பகுதியில் விவசாயிகளை சுரண்டுவதற்கு காலனியாதிக்கவாதிகள் ரயத்துவாரி முறையை அறிமுகம் செய்தனர்.இதன் மூலம் விவசாயிகள் அந்த நிலப்பகுதியின் நிரந்தர குத்தகையாளனாக மாறியதோடு நிறைவேற்றப்பட வேண்டிய கடமைகளுடன் நிலத்தோடு அடிமையாக்கப்பட்டனர்.இவ்வாறு ஜமீன்தாரி மற்றும் ரயத்துவாரி முறைகள் என்பவை விவசாயிகளை சுரண்டுவதற்காக மாற்றியமைக்கப்பட்ட நிலப்பிரபுத்துவ முறைகளின் இரு முக்கிய வழிகளாக அமைந்தன.இந்த முறைகள் காலனியாதிக்கவாதிகளின் நலன்களுக்கு முழுமையாக சேவை செய்பவையாகவும் விவசாயிகளை அரைகுறை அடிமைகள் என்ற நிலைக்குத் தள்ளுவதற்கான கருவியாகவும் அமைந்தன.

– தொடரும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *