ஆகஸ்ட் 21 கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் மறைந்த ப.ஜீவானந்தம் அவர்களின் பிறந்த நாள். அவரைப் பற்றிய ஒரு நினைவு குறிப்பு:

சென்னை தாம்பரம் பேருந்து நிலையம் அருகில் ஒரு பூங்கா இருக்கிறது. அதற்கு ஜீவா என்று பெயரிட்டுள்ளார்கள் அந்த பகுதி மக்கள். பலமுறை தாம்பரம் போயிருந்தாலும் மறைந்த தோழர் ஜீவாவுக்கும் இந்த பகுதிக்கும் என்ன உறவு? என்று ஆராயத் தொடங்கினேன். கிடைத்த தகவல்களை அப்படியே தருகிறேன்.

இன்றைக்கு அறுபது எழுபது வருடங்களுக்கு முன்பு, தாம்பரத்தில் கல் உடைக்கும் தொழிலாளர்கள் ஏராளமாய் வசித்து வந்தனர். அவர்களெல்லாம் வெளியூர் மக்கள். எனவே, கிடைத்த இடங்களில் சிறுசிறு குடிசைகள் போட்டு அரசு பறம்போக்கு நிலத்தில் வாழ்ந்தனர்.

அரசு அதிகாரிகள் பார்த்தார்கள். உடனே இடத்தை காலி செய்யுமாறு உத்திரவு போட்டனர். அந்த ஏழைகளுக்கு அப்போதைய நினைவில் வந்தது தோழர் ஜீவாதான். அவரிடம் போய் சொன்னால் நிச்சயம் நமக்கு தலைமையேற்றுப் போராட வருவார் என்று முடிவு செய்தனர்.

சென்னை சென்று தோழரை சந்தித்தனர். இத்தனைக்கும் தோழர் ஜீவா வண்ணாரப்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தான். தாம்பரத்திற்கும் அவருக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை. மக்கள் போராட அழைக்கும் போது எந்த பகுதியாக இருந்தால்தான் என்ன? ஜீவா தாம்பரம் புறப்பட்டார்.

கல்லுடைக்கும் மக்களின் குடிசைகளை அகற்றக் கூடாது என்று பல வழிகளில் போராட்டத்தை முன்னெடுத்தார். அப்போதைய தமிழக முதல்வர் காமராசர். அவருக்கு இந்த விஷயம் தெரிவிக்கப்பட்டது.
உடனே, அதிகாரிகள் மூலமாக ஜீவாவை பேச்சுவார்த்தைக்கு அழைத்தார்.

முதலில், ஜீவாவின் கோரிக்கையை காமராசர் ஏற்கவில்லை. ஆனால், ஜீவாவின் பிடிவாதம் அவரை ஒத்துக் கொள்ள வைத்தது. அந்த ஏழைகளுக்கு பட்டாவுக்கும் ஜீவாவே ஏற்பாடு செய்தார். இதன் பிறகு, தன் பணி முடிந்ததென சென்னைக்கு புறப்பட்ட அவரை அந்த பகுதி மக்கள் விடவில்லை.

ஜீவாவுக்கு அங்கேயே குடிசை போட்டு கொடுத்து எங்களுடனே குடும்பத்துடன் இருங்கள் என்று சொல்லி விட்டார்கள். இந்த சூழ்நிலையில் தான் அந்த கல்லுடைக்கும் மக்களின் குழந்தைகள் படிக்க வழியில்லாமல் இருந்ததை ஜீவா பார்த்தார். அரசுக்கு உடனே விண்ணப்பித்து இலவச பாடசாலைக்கு ஏற்பாடு செய்தார். இதுதான் தாம்பரம் மக்கள் மனதில் தோழர் ஜீவா இடம் பிடிக்க காரணம்.

இதன் பின்னால், இன்னொரு சுவையான சம்பவமும் உண்டு.

அந்த பள்ளிக்கூடத்தை திறந்து வைக்க ஜீவா காமராசரை அழைத்தார். அவரும் சம்மதித்து குறிப்பிட்ட நாளில் வந்து விட, ஜீவாவை விழாவுக்கு அழைத்துச் செல்ல காமராசரே நேரில் அந்த குடிசை வீட்டுக்கு சென்றார். ஆனால், ஜீவாவோ நீங்கள் முன்னே செல்லுங்கள். இதோ வந்து விடுகிறேன் என்று தாமதமாக போய் சேர, அதற்கான காரணத்தை காமராசர் கேட்கும் போது தான் தெரிந்தது. ஜீவாவிடம் இருந்த இரண்டொரு வேட்டிகளும் அழுக்காக இருந்ததால் துவைத்து காய வைத்து அணிந்து வந்திருக்கிறார் என்று.

அதற்கு பின் ஜீவாவுக்கே தெரியாமல் காமராசர் அவர் மனைவிக்கு டீச்சர் வேலை போட்டுக் கொடுத்து உதவியது தனிக் கதை.
– தோழர் பாரதிநாதன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *