இந்தியத் தொழிலாளி வர்க்கம் உருவாகி வளர்ந்த வரலாறு பகுதி -8

இந்தியாவில் கொள்ளையடிக்கப்பட்ட செல்வத்தை இங்கிலாந்திற்கு அதன் தொழிற்புரட்சியை மேம்படுத்துவதற்காக ஏற்றுமதி செய்ததோடு மட்டுமின்றி ,இங்கிலாந்தில் தொழில் உற்பத்தி பொருட்களை இந்தியாவில் விற்பதற்கான அவசியத்தை இங்கிலாந்து முதலாளிகள் உணரத் தலைப்பட்டனர். வேறு வார்தைகளில் கூறுவதானால் வரியேதுமற்ற சுதந்திரமான வர்த்தகம் என கூறலாம்.

1757ஆம் ஆண்டின் பிளாஸி யுத்தத்திலிருந்து இந்தியாவுடனான வர்த்தகத்தில் கிழக்கிந்திய கம்பெனி கொண்டிருந்த ஏகபோக உரிமை என்பது ஒட்டுமொத்த பிரிட்டிஷ் முதலாளித்துவ வர்க்கத்தின் சுதந்திர வர்க்க நலனை பாதுகாப்பதாக அமையவில்லை .புதிய சந்தைகளை தேட வேண்டிய கட்டாயத்தில் இருந்த ஆங்கிலேய முதலாளித்துவ வர்க்கமானது கிழக்கிந்திய கம்பெனிக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பான உரிமைகளை நீக்க வேண்டும் என்ற பிரச்சாரம் பெருமளவில் செய்யப்பட்டது. இந்தியாவுடனான கிழக்கிந்திய கம்பெனிக்கு இருந்துவந்த ஏகபோக உரிமை 1813ஆம் ஆண்டில் ரத்து செய்யப்பட்டது.இதன் மூலம் ஆங்கிலேய முதலாளிகளுக்கு இந்தியாவுடன் சுதந்திரமான வர்த்தகம் செய்வதற்கான கதவுகள் திறக்கப்பட்டன.

உண்மையில் இந்தியாவை புதிய வகையில் சுரண்டுவதற்கான காலகட்டத்தில் அடியெடுத்து வைத்தது.இந்தியாவின் பட்டு, மஸ்லின் மற்றும் இதர ஆடம்பரப் பொருட்களை இங்கிலாந்திற்கு ஏற்றுமதி செய்வதன் மூலம் லாபம் ஈட்டி வந்தது.1813ஆம் ஆண்டிற்கு பிறகு பிரிட்டிஷ் தொழிற் பொருட்களுக்கு இந்திய சந்தை முழுவதுமாக திறந்துவிடப்பட்டது.இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்யும் பிரிட்டிஷ் பொருட்களின் அளவு வேகமாக அதிகரித்தது. 1814 இல் ஏற்றுமதி 1,60,000பிரிட்டிஷ் பவுண்டாக இருந்தது.1828இல் 58,00,000 பவுண்டாக உயர்ந்தது.

ரயில்வே சேவையை இந்தியாவில் அறிமுகப்படுத்தியதன் மூலம் வணிக மையங்கள் துறைமுகங்களுடன் இணைக்கபட்டு ஏற்றுமதி மேலும் அதிகரிக்கப்பட்டன பிரிட்டிஷ் பொருட்கள் இந்தியாவிற்கு தங்கு தடையின்றி ஏற்றுமதி செய்யப்பட்ட அதே நேரத்தில் இங்கிலாந்திற்கு ஏற்றுமதி செய்யப்பட்ட இந்திய பொருட்களுக்கு 70 முதல் 80 சதவீதம் வரை இறக்குமதி வரி விதிக்கப்பட்டது.இதன் மூலம் இந்தியாவின் உள்நாட்டுத் தொழிலை நிர்மூலமாக்கி தங்களது சொந்த நாட்டின் தொழில் வளர்ச்சியை மேலும் முன்னுக்கு கொண்டு சென்றார்கள். இந்தியாவின் நெசவு தொழில்மட்டுமல்லாது உலோகம் மற்றும் பிற தொழில்களுக்கும் இந்த நிலை ஏற்பட்டது.

இந்தியாவிலிருந்து விவசாய மற்றும் உலோக மூலப்பொருட்கள் இங்கிலாந்தில் குவிக்கப்பட்டு அங்கிருந்து உற்பத்தி செய்யும் பொருட்கள் இந்தியாவிலும் குவிக்கப்பட்டன.ஏகாதிபத்திவாதிகளால் உருவாக்கப்படட இந்தப் படுமோசமான வர்த்தக கொள்கையானது இந்தியாவை முதலாளித்துவ பிரிட்டனின் விவசாய மற்றும் மூலப் பொருட்களுக்கான வழங்குதளமாக மாற்றியது.அதே நேரத்தில் நிலப்பிரபுத்துவ முறையிலான சுரண்டலையும் இது தொடர்ந்து காப்பாற்றி வந்தது.

இந்த செயல்முறையானது தாங்கள் காலங்காலமாகச் செய்து வந்த வேலைகளிலிருந்து இந்தியக் கைவினைஞர்களை கட்டாயமாக வெளியேற்றியது.இந்த அம்சமானது இந்திய உழைக்கு மக்களின் துயரத்தை மேலும் தீவிரப்படுத்தியது. இந்திய கிராமப் புறப் பொருளாதாரமும், அதன் விளைவான சீரழிவும் இன்றும்கூட இந்தி மக்களில் பெரும்பகுதியினரை பாதித்து வருகிறது. இதன் தோற்றுவாய் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியவாதிகளின் மிகக் கொடுமையான வகையில் காலனிய சுரண்டலுக்கு ஆட்படுத்தியது.

நவீன இந்திய தொழிற்துறையின் வளர்ச்சி, இந்திய தொழிலாளி வர்க்கத்தின் தோற்றம் அதை தொடர்ந்த அதன் வளர்ச்சி மற்றும் அதனோடு தொடர்புடைய மிகவும் சிக்கலான பிரச்சினைகள் ஆகிய அனைத்துமே இந்திய கிராமப்புறப் பொருளாதாரத்தின் மீது செலுத்தப்பட்ட பிரம்மாண்டமான நெருக்கடி என்ற வரலாற்றுக் கண்ணோட்த்தில்தான் காணப்பட வேண்டும்.

-தொடரும்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *