கீழத்தஞ்சை விவசாயிகள் எழுச்சியின் முன்னோடி புரட்சியாளர் பிசீனிவாசராவை நினைவு கூர்வோம் !நிலப்பிரபுக்கள், கோவில்கள் , மடங்கள் ஆகியவற்றின் சர்வ ஆதிக்கம், சவுக்கடி & சாணிப்பால் அடக்குமுறை கீழ் வாழ்ந்த பண்ணையடிமைகள், உழைப்புக்கு ஏற்ற நியாயமான பங்கும், உரிமைகளும் இல்லாத குத்தகை விவசாயிகள் …எனத் தஞ்சை மண்ணில் நிலப்பிரபுத்துவம் கோலோச்சிக் கொண்டிருந்த காலகட்டத்தில், ஒடுக்கப்பட்ட விவசாய சமூகத்தின் விடுதலைக்காக பணியாற்றிய உன்னதமான கம்யூனிஸ்ட்களில் சிவப்பு நட்சத்திரமாக திகழ்கிறார், BSR என அழைக்கப்பட்ட தோழர். பி.சீனிவாசராவ்.

1961 செப்டம்பர் 30 அதிகாலை சுமார் 5 மணியளவில், தஞ்சாவூரில் தோழர்கள் உடன் இருக்க, மக்களுக்காக உழைத்து உடல்நலம் குறைந்து தனது 54 வது வயதில் இறந்தார். தஞ்சாவூர் துவங்கி திருத்துறைப்பூண்டி வரையிலான 50 கி.மீ க்கும் கூடுதலாக வழிநெடுக பல்லாயிரக் கணக்கில் விவசாயிகள், கூலி விவசாயத் தொழிலாளர்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.

திருத்துறைப்பூண்டியில் முள்ளியாறு ஆற்றங்கரையில் 25,000 க்கும் மேற்பட்டோர் அணிதிரண்டிருக்க இரவு 10.30 மணியளவில் அடக்கம் நடைபெற்றது. ஒன்றுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் அன்றைய தலைவர்கள் அனைவரும் (பி.ராமமூர்த்தி, உமாநாத், காத்தமுத்து, கே.டி.ராஜி, எம்.ஆர்.வெங்கட்ராமன்,வி.பி.சிந்தன், சங்கரய்யா, கல்யாணசுந்தரம், கே.டி.கே. தங்கமணி, கே.இரமணி, பார்வதி கிருஷ்ணன், இதற்காகவே பரோலில் வந்த மணலி கந்தசாமி, இன்னும் பலர்) அங்கிருந்தனர். அந்த மகத்தான தோழருக்கு செவ்வணக்கம் செலுத்தி நினைவு கூர்ந்தனர். இரங்கல் கூட்டம் இரவு 11.30 க்கு துவங்கி 1 மணிக்கு முடிந்தது.

கர்நாடக மாநிலத்தில் மங்களூரு அருகே வைதீகமான பார்ப்பன பின்னணியில் பிறந்து, வளர்ந்து, கம்யூனிஸ்ட் இயக்கத்தில் ஒரு ஊழியராக தன்னை இணைத்துக் கொண்டு, தஞ்சை மாவட்டத்தில் கட்சியின் பணிகள் ஆற்ற வந்த பி.எஸ்.ஆர், ஏன் இத்தகைய முக்கியமான இடத்தை பிடித்தார். அது தான் தோழர்.பி.எஸ்.ஆர் வரலாறும், கீழத்தஞ்சை விவசாயிகள் எழுச்சியும்.

மக்கள் மனதில் இடம் பிடித்தவர் பி.எஸ்.ஆர்!
*********************************
கீழத் தஞ்சையிலே விவசாயத் தொழிலாளர்கள் பாடி வந்த வயல் பாட்டு பின்வருமாறு இருந்தது.

“கட்டும் சேலையை
முட்டிவரை கட்டச் சொன்னது யாரய்யா
ஆண்டை, அய்யா என்று கூறய்யா…

கணுக்கால் வரை கட்டச் சொன்னது யாரய்யா
நம்ம சாமி பி.எஸ்.ஆர் என்று கூறய்யா…”

1947 ல், அவர் எழுதிய பிரசுரம் ” தஞ்சை ஜில்லாவில் நடப்பது என்ன? ” அது ஒரு ஆவணம், ஆய்வறிக்கை, விவசாயிகள் விடுதலை பற்றி காங்கிரஸ் கட்சியோடு நடத்திய கருத்துப் போர், செயல்திட்டம் எனலாம்.

அவருடைய வரிகளில் சிலவற்றை பார்ப்போம் :-

“கிராமம் கிராமமாக ரிசர்வ் போலீஸ் லாரிகள் வட்டமிட்டு வருகின்றன ….விவசாயிகளை அடக்க வேண்டும், விவசாயிகள் சங்கத்தை நசுக்க வேண்டுமெனத் துடித்துக் கொண்டிருக்கிற மிராசுதார்கள்..

செல்வ சீமான்கள் :-
வடபாதிமங்கலம் தியாகராஜ முதலியார் 15,000 ஏக்கர், குன்னியூர் சாம்பசிவ அய்யர் 6000 ஏக்கர், சாமியப்ப முதலியார் 2500 ஏக்கர், கேடிகே எஸ்டேட் 3000 ஏக்கர், கே.எம். தேசிகர் 1500 ஏக்கர், மூலங்குடி கோபாலகிருஷ்ண அய்யர் 2000 ஏக்கர்…

கோவில்களுக்கு சொந்தமான ஆயிரக்கணக்கான ஏக்ரா நிலங்களுக்கு டிரஸ்டிகளாக இருப்பவர்கள் இதே மிராஸ்தார்கள் தான் … பல்லாயிரக் கணக்கான ஏக்ரா நிலங்களுக்கு எஜமானர்களாக விளங்கும் மடங்கள் பல…சுருங்கச் சொன்னால், இந்த ஜில்லாவின் பொருளாதார வாழ்க்கையே இவர்களின் இரும்பு பிடிக்குள் அகப்பட்டு மூச்சடைத்து கிடக்கிறது. இடும் கட்டளைகளை உடனுக்குடன் நிறைவேற்ற ஜில்லா அதிகாரிகள் ….

பண்ணையாட்களின் கதி :-
உழைத்து உழைத்து ஓட்டாண்டிகளான பண்ணையாட்கள்,குத்தகைதார்கள்….

பண்ணையாட்களில் பெரும்பாலோர் ஆதி திராவிடர்களே… நாள் முழுக்க வேலை செய்தால் 1/2மரக்கால் … அதாவது பட்டணம்படியில் ஒரு படி நெல் தான் மிராசுதார் அளந்து கொடுப்பார்… வருசத்தில் மொத்த வரும்படி 160- 170 ரூபாய் தான்… மொத்த குடும்பம் உழைக்க வேண்டும்… 5 வயது கூட நிரம்பாத பச்சிளங் குழந்தைகள் மிராசுதாரர்களின் மாடுகளை மேய்க்க வேண்டும் …. தன்னுடைய குள்ளக் குடிசையை தாங்கிக் கொண்டிருக்கும் மனைக்கட்டு கூட பண்ணையாளுக்கு சொந்தமல்ல …. சிறு குற்றம் செய்தாலும்…பண்ணையாட்களின் முதுகு தோலை உறிப்பதற்கு என்றே பிரத்தியேகமான சவுக்குகளை வைத்திருக்கிறார்கள் …”

மிக நீளமான பிரசுரம் அது!

பொருளாதார சுரண்டல் & பண்பாட்டு ஆதிக்கத்திற்கு எதிரானப் போராட்டம் !
************************************
தானியத்தை அளக்க மிராசுதாரர்கள், நிலவுடமையாளர்கள் இருவகை ¶மரக்கால் படிகளைப் பயன்படுத்தினார்கள்.

குத்தகை விவசாயிகளிடமிருந்து குத்தகை/வாரம் பெற தானியங்கள் பெற, அதிக தானியம் பிடிக்கும் “தொம்பரை மரக்கால்”என்பதையும், கூலியாட்களுக்கு/பண்ணையாட்களுக்கு கூலி வழங்க குறைந்த அளவு தானியம் பிடிக்கும் “முக்கால் மரக்கால்” (கள்ள மரக்கால்) என்பதையும் பயன்படுத்தினார்கள்.

நிலப்பிரபுக்களுக்கு முன்னர் ஆண் கூலியாட்கள் வரும்போது, துண்டு தோளில் போடக் கூடாது ; இடுப்பில் கட்ட வேண்டும் எனவும், பெண்களைப் பொறுத்த வரையில், சேலையை கணுக்கால் வரை கட்டக்கூடாது, முட்டிவரை தான் அணிய வேண்டும் என கட்டுப்பாட்டுகளை விதித்தனர். மிராசுதார்கள் தவறு எனக் கருதுவதை செய்யும் பண்ணையாட்களுக்கு சவுக்கடியும், வாயில் சாணிப்பால் ஊற்றுவதும் தண்டனைகளாக திகழ்ந்தன. தாழ்வு மனப்பான்மையை உருவாக்குவதும், அச்சத்தை ஏற்படுத்துவதும், போராட்ட உணர்வை மழுங்கடிப்பதும் இதன் நோக்கமாகும்.

1943 ல், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தமிழக விவசாயிகள் சங்கம் கட்ட தீர்மானித்தது. இளம் தோழர். பி.சீனிவாசராவ் அவர்களை செயலாளராக கொண்டு சங்கம் உருவாக்கப்பட்டது. மன்னார்குடி அருகில் உள்ள தென்பரை கிராமத்தில் தான் சங்கம் உருவானது ; பி.எஸ்.ஆர் மற்றும் பல்வேறு தோழர்கள் தலைமையில் போராட்டங்கள் வெடித்து எழுந்தன.

அச்சத்திலிருந்து மக்களை விடுவிக்க வேண்டும். இடுப்பில் துண்டு கட்டிய மக்களைத் தோளில் சிவப்பு துண்டு போடச் சொல்லி எதிர்ப்புணர்வை ஊட்டினார்கள், கம்யூனிஸ்டுகள். பி.எஸ்.ஆர் கூலி உயர்வுக்கு எதிராக மட்டுமல்ல, சவுக்கடி சாணிப்பாலுக்கு முடிவு, தோளில் துண்டு, கணுக்கால் வரை சேலை எனப் பல்வேறு உரிமைகளுக்காகவும் செயல்பட்டார்.

பல்வேறு போராட்டங்கள், கலகங்களின் தொடர்ச்சியாக … விவசாயிகள் சங்கம் -நிலவுடமையாளர்கள்-அரசாங்கம் இடையே பேச்சுவார்த்தைகள் உருவானது.

1944ல், தஞ்சை ஏடிஎஸ்பி மகாதேவன் தலைமையில் களப்பால் ஒப்பந்தம் உருவானது.
¶சவுக்கடி_சாணிப்பால்_நிறுத்தவேண்டும் -என முடிவானது.

1944 டிசம்பரில் கலெக்டர் இஸ்மாயில் கான் தலைமையில், டிஎஸ்பி லாதம் முன்னிலையில் மன்னார்குடி ஒப்பந்தம் ஏற்பட்டது. ¶முத்திரை_மரக்கால்_அளவு -என முடிவானது.

இப்படியாக பி.எஸ்ஆர் தலைமையில் தமிழக விவசாயிகள் இயக்கம், பண்ணையடிமைகளாக இருந்த விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் சுரண்டப்பட்ட குத்தகை விவசாயிகள் வாழ்க்கையில் பெரும் மாற்றங்களை கொண்டு வந்தது.

நிலப்பிரபுக்களின் கொலை வெறி அச்சுறுத்தல்கள், வழக்குகள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மீதான தடையின் காரணமாக ஏற்பட்ட தலைமறைவு வாழ்க்கை என்பதன் ஊடாக பி.எஸ்.ஆர் என்ற கம்யூனிஸ்ட் முன்னோடியின் அரசியல் பயணம் இருந்தது.

அவரது குடும்பம், தனிப்பட்ட வாழ்க்கை பற்றி நினைவுகூர ஏராளமான விஷயம் இருக்கிறது.

பி.எஸ்.ஆர் பிறப்பிலான தனது சாதியை தூக்கியெறிந்து விட்டு, ஏழை மக்களோடு… அவர்கள் சாப்பிட்டு வந்த புழுத்த அரிசி, கஞ்சி, நண்டு, நத்தை என உண்டு அவர்களுடான வாழ்க்கையையே தனது குடும்ப வாழ்க்கையாக அமைத்துக் கொண்டார். தனிப்பட்ட சொந்த வாழ்க்கைக்கு முக்கியத்துவம் எதுவும் அவர் தரவில்லை.

சுயநலமற்ற தலைவர் பி.எஸ்.ஆர்!
************************************
தனிப்பட்ட வாழ்க்கை என்ற வகையில் சில வரிகள்….

கட்சி தொடர்பு மூலமாக நாச்சாரம்மாள் என்பவரை காதலித்து மணந்து கொண்டார். அவர் ஆசிரியராக பணிபுரிந்தார். அவருடைய சொந்த சம்பாதியத்தில் ஒரு காலி வீட்டு மனையை வாங்கினார். அதற்குப் பட்டா இல்லாததால் வீட்டுக் கடன் /லோன் கிடைக்கவில்லை.

பி.எஸ்.ஆர் மகள் பிரேமலதா கூறினார் :
…காமராஜரைப் பார்த்து பட்டாவுக்கு ஒரு கையெழுத்து வாங்குவோம் என தோழர்MK /கலியாண சுந்தரம் அப்பாவிடம் சொன்னார். “மக்கள் பிரச்சினைக்கு கையெழுத்துப் போடு என அதிகாரமாக முதல் மந்திரியை கேட்கலாம் தவிர, BSR வீடு கட்ட பட்டா வேண்டும், அதற்கு கையெழுத்து வேண்டும் என யாரிடமும் கேட்காதீர்கள் ” என்று சொல்லிவிட்டார். அவர் சொந்த வீட்டுக்கு என்று எதுவும் செய்யவில்லை என்ற வருத்தம் அம்மாவுக்கு இருந்தது. கடைசியில், அம்மா வேலை பார்த்த கார்ப்பரேஷனில் லோன் வாங்கி வீடு கட்டினோம்.”

¶தமிழகத்தில் ,தஞ்சை டெல்டா மண்டலத்தில் மட்டுமல்லாமல், பல்வேறு மாவட்டங்களில் தலித் குடும்பங்களில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் #சீனிவாசராவ் என்ற பெயரோடு இன்றைக்கு வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். தோழர்.பி.சீனிவாசராவ் ஒரு தலைசிறந்த கம்யூனிஸ்ட்டாக நிறைவான வாழ்க்கையை தான் வாழ்ந்து சென்றுள்ளார் என்பதற்கு வேறு என்ன சாட்சியம் வேண்டும்? !

¶செவ்வணக்கம்_தோழரே!
¶உங்களை_என்றும்_மறவோம்!
கட்டுரையாளர் : சந்திரமோகன்
[2017, செப்டம்பர் 30 ல் எழுதிய கட்டுரையின் மீள்_பதிவு ]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *