குஜராத் ஃபோர்ட் ஆலை தொழிலாளர்களின் போராட்டம் வெல்லட்டும்!

குஜராத் மாநிலம் சனாந்தில் 972 நிரந்தரத் தொழிலாளர்கள் வேலை செய்து வந்த ஃபோர்ட் வாகன அசெம்ப்ளி தொழிற்சாலை உள்ளது. இந்தத் தொழிற்சாலையை டாடா நிறுவனத்துக்கு விற்பதாக ஃபோர்ட் நிர்வாகம் சென்ற ஆண்டு ஆகஸ்ட் மாதம் 8-ம் தேதி முடிவு செய்தது. இது தொடர்பாக கர்ணாவதி காம்தார் ஏக்தா சங் என்ற தொழிலாளர்களின் தொழிற்சங்கத்துடன் சென்ற ஆண்டு ஜூலை 26-ம் தேதி புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டுக் கொண்டதாக நிர்வாகம் கூறுகிறது.

தொழிலாளர்கள் அனைவரும் நிர்வாகம் தீர்மானித்த நிபந்தனைகளே ஏற்றுக் கொண்டு ஃபோர்ட் உடனான பணி நியமன ஒப்பந்தத்தை டாடாவுக்கு மாற்றிக் கொள்ள வேண்டும் என்று அறிவித்தது. இதை எதிர்த்து தொழிற்சங்கம் தொழிலாளர்கள் தரப்பில் கோரிக்கைகளை முன்வைத்தது. இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த முன்வராத நிர்வாகம் தனது நிபந்தனைகளை ஏற்றுக் கொண்டு டாடா நிர்வாகத்துக்கு மாறிவிடும்படி தொழிலாளர்களை தொடர்ந்து மிரட்டியுள்ளது.

கடந்த ஜனவரி மாதம் வரை 617 தொழிலாளர்கள் பணிமாற்று ஒப்பந்தத்தில் கையொப்பம் இட்டாலும் 355 தொழிலாளர்கள் அதை ஏற்க மறுத்து உறுதியாக போராடி வருகின்றனர். அதைத் தொடர்ந்து அவர்களது பணி வாழ்வு முடிவுக்கு வந்து விட்டதாக ஃபோர்ட் தன்னிச்சையாக அறிவித்துள்ளது. அதற்கு ஒரு மாதம் அறிவிப்பு காலமும் (நோட்டிஸ் பீரியட்), ஒவ்வொரு ஆண்டு பணிக்காலத்துக்கும் 15 நாட்கள் சம்பளம் என செட்டில்மென்ட் தொகையும் வழங்கப்படும் என்று ஒருசார்பாக முடிவெடுத்துள்ளது.

அவர்கள் சார்பில் அகமதாபாத் தொழிலாளர் துணை ஆணையர் அலுவலகத்தில், இந்த ஆண்டு ஜனவரி 25-ம் தேதி அனுப்பிய புகாரின் அடிப்படையில் ஃபோர்ட் நிர்வாகத்துக்கு

  1. தொழிலாளர்களை பணிநீக்கம் செய்வதற்கு முன் தொடர்புடைய அரசு அலுவலகத்திடம் (தொழிலாளர் ஆணையம்) முறையாக அனுமதி வாங்காதது
  2. பணிநீக்கத்துக்கு முன்னர் 3 மாத நோட்டிஸ் கொடுக்காதது

மூலம் தொழில் தகராறு சட்டம் பிரிவு 25(ff), 25(n) ஐ மீறியதாக விளக்கம் கேட்கும் ஆணை (ஷோ காஸ் நோட்டிஸ்) சென்ற ஜூன் மாதம் 22-ம் தேதி அனுப்பப்பட்டது. இதற்கு, ஜூலை 5-ம் தேதி ஃபோர்ட் நிர்வாகம் கொடுத்த விளக்கத்தை தொழிலாளர் துணை ஆணையர் நிராகரித்துள்ளார். 355 தொழிலாளர்களும் தொடர்ந்து ஃபோர்ட் நிர்வாகத்தின் கீழ் பணியில் இருப்பதாக அறிவித்துள்ளார். அவர்களது பணிமாற்றத்தை உறுதி செய்யாமல், வேலையிலிருந்து நீக்குவதாக அறிவித்திருப்பது சட்டத்துக்குப் புறம்பானது என்று சுட்டிக் காட்டியுள்ளார்.

இதிலிருந்து

  1. நிர்வாகம் தன்னிச்சையாக பணி நிபந்தனைகளை மாற்றுவது சட்டத்துக்குப் புறம்பானது.
  2. தொழிலாளர்களை பணிநீக்கம் செய்வதற்கு தொழிலாளர் துறையிடம் முறையான அனுமதி பெறுவதும் 3 மாத நோட்டிஸ் காலம் தருவதும் சட்டப்படி கட்டாயமானது.
  3. தொழிற்சங்கத்தின் மூலம் பிரதிநிதித்துவப்படுத்தப்படும் தொழிலாளர்களின் உரிமைகளை உறுதியான போராட்டம் மூலமும் சட்டபூர்வமான நடவடிக்கைகள் மூலமும் பாதுகாத்துக் கொள்வது சாத்தியம்

தொழிலாளர் ஒற்றுமை ஓங்குக!

Gujarat #ford #ShowCauseNotice #LabourDepartment #retrenchment #ahmedabad #workersrights

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *