தொழிலாளர்களுக்கு ஒரு திறந்த மடல்

  முன் எப்போதும் இல்லாத அளவுக்கு தொழிலாளர்கள் மிக கொடூரமான முறையில் சுரண்டப்பட்டு வருகிறார்கள். இந்தியாவில் மேற்கத்திய ,ஐரோப்பிய நாடுகளின் பல பன்னாட்டு நிறுவனங்கள் பல முதலீடுகளை மேற்கொண்டு வருகின்றன.ஒரு பக்கம் வேலைவாய்ப்புகள் பெருகுவதாக கூறிக்கொண்டாலும் அத்தகைய வேலைவாய்ப்புகள் எவ்வாறு உள்ளது என பார்க்க வேண்டும். நவீன தொழில்நுட்ப காலத்திலும் நவீன முறையில் சுரண்டல்கள் நடந்த வருகின்றன.பல வல்லரசு நாடுகளின் சந்தை பொருளாதாரத்தின் மையமாக இந்தியா போன்ற பல்வேறு தேசிய இனங்கள் வாழும் நாடு விளங்குகிறது.

  உலகவங்கி,  உலகநிதியம்  மற்றும் பல்வேறு நாடுகளில் இந்தியா போன்ற வளரும் நாடுகள் வாங்கும் கடன்கள் அதற்காக போடப்படும் ஒப்பந்தங்கள் அதற்க்காக மாற்றப்படும் அல்லது புதிதாக இயற்றப்படும் சட்டங்கள் என இது சென்று கொண்டே இருக்கிறது.1990 ஆம் ஆண்டுகளுக்கு பிறகு அதாவது உலகமயமாக்களுக்கு பிறகு பல்வேறு மாற்றங்களை இந்திய தொழிலாளர் வர்க்கம் சந்தித்து வருகிறது. குறிப்பாக பன்னாட்டு நிறுவனங்களின் வருகை, பொதுத்துறை நிறுவனங்கள் தனியார் மையம் ஆகுவது போன்ற நிகழ்வுகள் தற்போது வேகமெடுத்து வருவதை நாம் பார்க்கிறோம். 

  சுதந்திரத்திற்க்கு பிறகு உள்நாட்டு கட்டமைப்பை வலுப்படுத்த துவங்கப்பட்ட பொதுத்துறை நிறுவனங்கள் தற்போது படிப்படியாக தனியார் நிறுவனங்களுக்கு  தாரைவார்க்கும் பணிகள் மிக தீவிரமாக நடந்து வருகிறது.1989 ஆம் ஆண்டுகளில் பொதுத்துறை நிறுவனங்களின் நிரந்தர தொழிலாளர்களின் எண்ணிக்கை 22 லட்சமாக இருந்தது. இன்றைக்கு பாதிக்கும் கீழ் குறைந்து விட்டது. துறைவாரியாக 31.12.2015 -ல் வங்கி, காப்பீடு,நிதித்துறையில் 10.83 லட்சம் நிரந்தர தொழிலாளர்களின் எண்ணிக்கை 31.12.2020-ல் 9.68 லட்சமாக குறைந்தது. ரயில்வே துறையில்1990-ல் 16.51 லட்சமாக இருந்த  நிரந்தர தொழிலாளர்கள் 2021-22 ல் 12.12லட்சமாக குறைந்தது.இறுதியாக தற்போது 8.41  லட்சமாக உள்ளது.Outsource முறையில் பல்வேறு அரசு பணிகள்  தனியார் நிறுவனங்களுக்கு வழங்கப்படுகிறது.மத்திய மாநில அரசுகள் இரண்டும் இதற்கு விதிவிலக்கல்ல. இதனால் வேலை உத்தரவாதம் இல்லை கண்ணியமான சம்பளம், பஞ்சப்படி,முறையான வேலைநேரம் ,மருத்துவ வசதி, பணிக்கொடை என  பல பணிபலன்கள் காணமல் ஆக்கப்பட்டுள்ளன அரசு நிறுவனங்களில் நிலை இதுவென்றால் தனியார் நிறுவனங்களில் நிலைமை இன்னும் மோசமாக இருக்கும்.

 அரசு என்பது எப்போதும் ஆளும் வர்க்க முதலாளிகளுக்கு சேவை செய்யும் நிறுவனம் என வரலாறு முழுக்க நாம் கற்றுவரும் பாடம் .அந்தவகையில் தற்போது தொழிலாளர் வர்க்கத்துக்கு எதிராகவும்,கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக இயற்றப்படும் சட்டங்கள் நமக்கும் அதையே கற்பிகின்றன.ஒன்றிய அரசால் 2020 பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தொழிலாளர் விரோத சட்ட தொகுப்பு (44சட்டங்களை நான்கு சட்ட தொகுப்புகளாக மாற்றியது).இதை பாஜக ஆளும் மாநிலங்கள் விரைவாக அதை நிறைவேற்றின.தமிழ்நாட்டில் 2023 ஏப்ரல் மாதம் 12ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட்ட வேலை நேரம் தொடர்பான சட்ட முன்வரைவு 65A(8மணி நேரத்தை 12மணி நேரமாக மாற்றுவது) ஏப்ரல் 20 ஆம் தேதியில் பல்வேறு கூட்டணி கட்சிகளின் எதிர்ப்பை மீறி திமுக அரசு சட்டத்தை நிறைவேற்றியது.இதற்கு அரசு கொடுத்த விளக்கம் வேலைவாய்ப்பும் முதலீடுகளும் பெருகும் எனவும் தொழிலாளர்களுக்கு மூன்று நாட்கள் விடுமுறை கிடைக்கும் என கூறியது .அதுவும் தொழிலாளர்களுக்கு விருப்பம் இருந்தால் மட்டுமே அந்த நிறுவனங்கள் செயல்படுத்த முடியும் என அமைசர்கள் பொய்யான வாதத்தை மக்கள் மத்தியில் பேசினார்கள் ஏதோ கார்ப்பரேட் நிறுவனங்கள் எல்லாம் ஜனநாயக தன்மையுடைதாக நினைக்கிறார்களா என தெரியவில்லை.அரசு உத்தரவுகளையும் நீதிமன்ற தீர்ப்புகளையும் மதிக்காத கார்ப்பரேட் நிறுவனங்கள் இருக்கும் போது இப்படியான உத்தரவு ஏமாற்றும் செயலே.பின்னர் பல்வேறு எதிர்ப்புகள்  கண்டனங்களுக்கு பிறகு இந்த சட்ட மசோதாவை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.ஆனால் ரத்து செய்யப்படவில்லை.

 நடைமுறையில் சில உண்மைகளை நாம் ஒப்புகொள்ள வேண்டும் தற்போதைய காலகட்டத்தில் தொழிலாளர் வர்க்கம் பலவீனமான நிலையிலயே உள்ளது. அதற்கான காரணங்களை ஆராய்ந்து சரிசெய்யாமல் விட்டால் இன்னும் மோசமான நிலைக்கு தள்ளப்படுவோம் தற்போது நடைமுறையில் இருக்கும்  8 மணிநேர வேலை என்பது கூட பல்வேறு காலகட்டங்களில் தொழிலாளர் வர்க்கம் போராடி பெற்றவையே .1880ஆம் ஆண்டுகளுக்கு முன்பு வரை 18மணி நேரமாக இருந்த வேலை நேரம்  இரத்தம் சிந்திய போராட்டக்களின் விளைவாக படிப்படியாக குறைக்கப்பட்டது.1886ல் அமெரிக்க சிகாகோவில் தொழிலாளர்கள் போராடி உயிர் தியாகம் செய்ததின் விளைவாக இந்த 8மணி நேர உரிமையை நாம் பெற்றோம். சிகாகோ போராட்டத்திற்க்கு முன்பாகவே இந்தியாவில்1862 ஆம் ஆண்டு ஏப்ரல் மே மாதங்களில் 1200 கல்கத்தா ரயில்வே தொழிலாளர்கள் 8மணி நேரத்திற்க்கு போராடிய பதிவுகள் உள்ளது.அக்காலத்தில் வங்கமொழியில் வெளியான வார இதழ் சோம் பிரகாஷ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.(குறிப்பு: சுகுமால் சென் எழுதிய இந்திய தொழிலாளர் வர்க்கம் என்ற நூல் ) இப்படியான பல்வேறு போராட்ட வரலாறுகள் இந்திய தொழிலாளர் வர்க்கத்திற்க்கு உண்டு.

     தொழிலாளர் வர்க்கத்தின் இந்த போராட்ட வரலாறுகளின் நீட்சி தற்போது நீர்த்துப்போயுள்ளது முதலாளித்துவத்தின் நுகர்வு காலச்சாரம் அதை சிறப்பாக செய்து வருகிறது.குறுகிய சிந்தனைகளை மக்கள் மத்தியில் விதைத்துள்ளது  தனக்கு ஆபத்து ஏற்படும்போது பார்த்துக்கொள்ளலாம் என்ற மனநிலையை உருவாக்கியுள்ளது.

     உதாரணமாக ஒரு தொழிற்சாலையை எடுத்துக்கொள்வோம் நிரந்தர தொழிலாளர்கள் ,ஒப்பந்த தொழிலாளர்கள் ,Neem ,FTA போன்ற நவீனகால பயிற்சித்தொழிலாளர்கள் பல வகைகளில் தொழிலாளர்கள் இருப்பார்கள். இதில் நிரந்தர தொழிலாளர்களுக்கு கிடைக்கும் பணி பலன்கள் மற்ற தொழிலாளர்களுக்கு இருக்காது பயிற்சி தொழிலாளர்களுக்கு இருக்கும் விடுமுறை நாட்களுகக்குகான ஊதியம் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு இருக்காது. பயிற்சி தொழிலாளர்களாக கல்வி நிறுவனங்களில் படித்து முடித்துவிட்டு வரும் இளைஞர்கள் சிறந்த வேலைவாய்ப்பு என அழைத்து வரப்படுபவர்களை எந்த நிறுவனமும் நிரந்தரம் செய்வதில்லை.வேலைவாய்ப்பு முகாம்களில் இதுபோன்ற வேலைகளே பொரும்பான்மையாக வழங்கப்படுகிறது எங்கும் நிரந்தர வேலைவாய்புகள் இல்லை.இவ்வாறாக தொழிலாளர்களை பல பிரிவுகளாக பிரித்து வைத்து இந்த முதலாளித்துவ சமூகம் தனது சுரண்டலை அதிகப்படுத்திகொண்டே செல்கிறது. அனைவரையும் ஒன்றினையவிடாமல் தடுக்க பல காரணிகளை உருவாக்கிகொண்டே வருகிறது.இது  சமூகத்திலும் எதிரொலிகிறது சமூகத்தில் நடக்கும் பல்வேறு பிரச்சினைகளுக்கும் குரல்கொடுக்காத அல்லது அதற்காக போராடாத தொழிலாளர் வர்க்கம் தனது ஊதிய உயர்வு அது சார்ந்த பிரச்சனைகளை மட்டுமே சிந்தித்து கொண்டு தொழிற்சங்க வாதத்திற்குள் மட்டும் இருப்பதால் சமூக பிரச்சனைகளுக்கு காரணமான அரசியல் தீர்வுகள் என்ன என்பதை அறியமுடியால் திசைதிருப்ப படுகிறார்கள் தனது ஊதிய உயர்வு போராட்டம் என்பது தற்காலிமானதுதான் சமூக மாற்றங்களை நோக்கி நகரும் போதுதான் அதற்கான முழு தீர்வும் கிடைக்கும் என்பதை அறிவதில்லை.எதிர்காலத்தில் வரும் நெருக்கடிகளை அரசியல் ரீதியாக எதிர்கொள்ளும் திறனற்றவர்களாக ஆலைத்தொழிலாளர்கள் உள்ளாக்படுகிறார்கள் .

     ஃபோர்ட் மோட்டார்ஸ் போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் ஆலையை மூடும் போது தொழிலாளர்கள் பெரிய அளவிலான போராட்டங்களை முன்னெடுத்த போதும் மக்கள் ஆதரவு இல்லாததால் இந்த மாதிரியான போராட்டங்கள் வலுவிழந்து போய்விடுகின்றன. ஃபோர்ட்  நிறுவனம் ஆலையை முடுவதற்கான சட்ட ரீதியான எந்தவொரு விண்ணப்பத்தையும் அரசிடம் வைக்கவில்லை சட்ட விரோதமாகவே ஆலையை முடியது. தொழிலாளர்கள் அரசுக்கு வைத்த கோரிக்கைகள் கண்டுகொள்ளப்படவில்லை 2022 ஆம் ஆண்டு மூடப்பட்ட ஃபோர்டு நிறுவனம் தற்போது மீண்டும் தனது உற்பத்தியை தொடங்க உள்ளதாக தெரிகிறது இதை தமிழ்நாடு அரசு பெரிய சாதனையாக கருதி வருகிறது நிரந்தர தொழிலாளர்களை அடியோடு நீக்கிவிட்டு புதிய சலுகைகளுடன் கொள்ளை லாபம் ஈட்டும் நடவடிக்கைதான் இது.கடந்த காலங்களில் நோக்கியா நிறுவனம் செய்த அதே வழிமுறை தான்  இதுதான் கார்ப்பரேட்டுக்கும் அரசுக்குமான உறவு.ஆலை தொழிலாளர்களில் அடிமட்டத்தில் இருக்கும் ஒப்பந்த தொழிலாளர்களை மட்டும் அதிக அளவில் வைத்து இயங்கும் தொழிற்சாலைகளில் தன்னெழுச்சியாக சில போராட்டங்கள் நடந்து வருகிறது. 

கடந்த 2021 ஆண்டு காஞ்சிபுர மாவட்டம் சுங்குவாசத்திரத்தில் இயங்கிவரும் ஃபாக்ஸ்கான் பெண் தொழிலாளர்கள் போராட்டம் தரமற்ற உணவு உட்கொண்டதால் பாதிக்கப்பட்ட சக தொழிலாளர்களுக்காகவும் அடிப்படை வசதிகள் செய்துதர கோரியும் திடீரென இரவு சலைமறியல் போராட்டத்தில் இறங்கினர் கிட்டத்தட்ட ஒருநாள் முழுவதும் சென்னை- பெங்களுர் தேசிய நெடுஞ்சாலை பெண் தொழிலாளர்கள் முடக்கினர்.இவர்களுக்கு ஆதரவாக மற்ற நிறுவன தொழிலாளர்களும் கலந்துகொண்டனர் தொடர்ச்சியான ஆதரவு இல்லாததால் இந்த போராட்டமும் கலைக்கப்பட்டது.இந்த சாலை மறியல் போராட்டத்தால் ஒரக்கடம் , இருங்காட்டுக்கோட்டை போன்ற நிறுவன போருந்துங்கள் தாமதமாக சென்றதால் மிகபெரிய உற்பத்தி இழப்பு ஏற்பட்டது இவ்வாறு அமைப்பாக்கபடதாத தொழிலாளர்களின் போராட்டங்களில் வலிகள் அதிகமாக இருந்தாலும் சுற்றுவட்டார பகுதியில் மிகபெரிய தாக்கத்தை பெண் தொழிலாளர்கள் ஏற்படுத்தினர்.இப்படியாக பாட்டாளி வர்க்கம் நிரந்தர தொழிலாளர்கள், ஒப்பந்த தொழிலாளர்கள் , பயிற்சி தொழிலாளர்கள் என உதிரி பாட்டாளி வர்க்கமாக செயல்பட்டு வருகிறோம்.

 அமைப்பாக்கபட்ட தொழிலாளர்கள் மத்தியில் தொழிற்சங்கப்போட்டிகளும் அதிகமாக நடந்து வருகிறது.இப்படியான பல்வேறு பின்னடைவு உள்ள தொழிலாளர்கள் மத்தியில் புதிய சட்டங்களை கொண்டுவருவதில் அரசுக்கு எந்தவொரு சிக்கலும் இல்லை. கார்ப்பரேட் நலனுக்கான சட்டம் என வெளிப்படையாக அறிவிக்க முடிகிறது. விவசாய திருத்தச்சட்டம் அமல்படுத்தபட்டபோது விவாசியிகளின் ஒருங்கிணைந்த தொடர்ச்சியான போராட்டத்தால் அச்சட்டம் திரும்பெறபட்டது.அதுமாதிரியான போராட்டங்களை ஆலை தொழிலாளர்களால் செய்ய முடியாத காரணங்களை ஆராய வேண்டும் தத்துவார்த்த ரீதியாகவும் ,அரசியல் நடைமுறை ரீதியாகவும் செயல்பட தொழிலாளர்கள் அணியமாக வேண்டும். தொழிற்சங்க வாதங்களை கடந்து சாமனிய மக்களின் பிரச்சினைகளை தொழிலாளர் வர்க்கம் கவனத்தில் கொள்ள வேண்டும். சமூகத்தில் நிலவும் சாதி, மத , வார்க்கம்,பாலினம் போன்ற பல்வேறு சமூக முரண்கள் குறித்து தொழிலாளர்கள் தெளிவு பெற வேண்டும். மேற்சொன்ன காரணங்களை வர்க்க அடிப்படையில் விவாதத்தை ஏற்ப்படுத்தவும் தொழிலாளர்களின் கருத்துக்கள் ,விமர்சனங்களை உள்வாங்கி கொண்டு பயணிக்கவும் தொழிலாளர் என்ற இந்த அரசியல் இணையதள பத்திரிகை முன்னோக்கி செல்ல முனைகிறது. தொழிலாளர்கள் இதில் பங்கேற்று தங்கள் கருத்துக்களை கூற அறைகூவல் விடுகிறது.

  – நன்றி..


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *