படப்பை அருகே உள்ள கொருக்கந்தாங்கல் கிராமத்தின் மேய்ச்சல் நிலங்களை பாதுகாக்க போராடும் காஞ்சிபுரம் மாவட்ட சிறு குறு விவசாயிகள் நலச்சங்கம்
காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் வட்டத்திற்கு உட்பட்ட ஆரம்பாக்கம் ,ஒரத்தூர் கிராமங்களில் உள்ள ஏரிக்களை இணைத்து புதிய நீர்தேக்க பணிகளை அரசு செய்து வருகிறது இதற்காக ஆரம்பாக்கம் (07.85.00 ஹெக்டேர் பரப்பளவில்)மற்றும் ஒரத்தூர் (30.62.92 ஹெக்டேர் பரப்பளவில் ) கிராமங்களின் பட்டா நிலங்கள் மற்றும் புறம்போக்கு நிலங்கள் கையகப்படுத்த இருப்பதாக அரசாணை எண் 571(23.11.2022) மூலமாக அறிவித்தது . இவ்விரு கிராமங்களின் பட்டா நில உரிமையாளர்களுக்கு மாற்று இடமாக கொருக்கந்தாங்கல் மேய்க்கால் நிலம் சர்வே எண் 25 , ஒரத்தூர் மேய்க்கால் நிலம் சர்வே 109/1 மற்றும் அம்மணம் பாக்கம் கிராமத்தில் உள்ள தரிசு மற்றும் புறம்போக்கு நிலங்கள் குடியிருப்பு நிலங்களாக வகைப்பாடு மாற்றம் செய்து அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசின் எந்தவொரு திட்டங்களுக்கும் மேய்க்கால் நிலம் மற்றும் மந்தைவெளி நிலங்களின் வகைபாடுகள் மாற்றம் செய்யப்படகூடாது என வழக்கு தீர்ப்பு எண் W.P.No.19286 of 2021 – ல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவுகள் எதையும் அரசு அதிகாரிகள் பின்பற்றாமல் இது போன்ற திட்டங்களை செயல்படுத்தி வருகின்றனர். கொருக்கந்தாங்கல் மற்றும் ஒரத்தூர் மேய்க்கால் நிலங்களுக்கு மாற்று இடமாக காஞ்சிபுரம் மற்றும் உத்திரமேரூர் வட்டத்திற்கு உட்பட்ட வெகுதொலைவில் உள்ள (விஷார்,கீழம்பி ,முத்துவேடு பிச்சாவாடி ,மேலம்பி,மேல் ஒட்டிவாக்கம் ,சிறு பினாயூர் ) என ஏழு கிராமங்களில் பிரித்து அளிக்கப்படுவதாக அரசாணையில் தெரிவித்துள்ளது
மேய்க்கால் நிலம் என்பது ஆடு , மாடு போன்ற கால்நடைகளின் மேய்ச்சலுக்கு பயன்படும் நிலம் என்பதும் அனைவரும் அறிந்தது. இதன் மூலம் பல விவசாயிகள் பயன்பெற்று வருகிறார்கள். இந்த இடத்திற்கு பதில் வேறு இடம் என அரசு தெரிவிப்பதால் பிரச்சினை தீர்ந்து விடுமா? இங்கிருந்து வெகு தொலைவில் உள்ள கிராமங்களுக்கு ஆடு, மாடுகளை மேய்க்க கொண்டு செல்ல முடியுமா ?என நடைமுறை சாத்தியங்களை கணக்கில் கொள்ளாமல், அரசு எளிய மக்களின் வாழ்வாதாரங்களை கேள்விகுறியாக்கும் பணிகளை தொடர்ந்து செய்து வருகிறது. மேற்குறிப்பிட்ட தகவல்கள் அரசாணை எண் 571 -ல் உள்ளது. அதுவும் கூட பொதுவெளியில் அரசு வைக்கவில்லை. RTI -ல் இரண்டாம் மேல்முறையீட்டு சென்றும் தகவல்கள் கிடைக்கவில்லை பல முறை நேரில் சென்று கொடுத்த அழுத்தத்தினால் அதிகாரிகள் அரசாணை (571) தகவல்களை வழங்கினர் . மேய்க்கால் நிலங்களை பாதுக்காக்க பல்வேறு துறைகளுக்கு கடிதம் அனுப்பப்பட்டது. அதிலும் எந்த பயனும் இல்லை தொடர்ந்து நிலத்தை அளவீடு செய்யும் பணிகள் நடந்துவந்தது.
தற்போது காஞ்சிபுர மாவட்ட சிறு குறு விவசாயிகள் நலச்சங்கம் சென்னை உயர்நீதிமன்றம் மன்றத்தில் வழக்கு தொடுத்தது.வழக்கின் இடைக்கால உத்தரவாக எட்டு வாரங்களுக்கு மேய்க்கால் நிலத்தில் பணிகளை நிறுத்தி வைத்தும் சம்பந்தப்பட்ட துறைசார்ந்த அதிகாரிகள் பதிலளிக்கவும் உத்தரவிட்டுள்ளது.
அரசின் திட்டங்களாக இருந்தாலும் சரி கார்ப்பரேட் திட்டங்களாக இருந்தாலும் சரி முதலில் எளிய உழைக்கும் மக்களின் நிலங்கள் தான் கை வைக்கப்படுகிறது . பெரும் முதலாளிகள் கார்ப்பரேட் கட்டுமான நிறுவனங்கள் நீர்நிலைகளைஆக்கிரமிப்பு செய்திருந்தாலும், பஞ்சமி நிலங்களை ஆக்கிரமிப்பு செய்திருந்தாலும் அரசு அது குறித்து எந்தவொரு ஆய்வும் செய்யாது . 1972ஆம் ஆண்டிற்கு பிறகு தமிழ்நாட்டில் நில உச்ச வரம்புகள் மறு வரையறை செய்யப்படவில்லை. மீண்டும் மறு வரையறை செய்யப்பட்டால்தான் அதிகப்படியான நிலங்களை பல்வேறு திட்டங்களும் நிலமற்ற உழைக்கும் மக்களுக்கு கிடைக்க வழிவகை செய்ய முடியும் இதை அரசு தானாகவே செய்யும் என்று எதிர்பார்க்க முடியாது. மக்கள் மத்தியில் இதுவொரு அரசியல் கோரிக்கையாக வலுப்பெற்று முன்னேறும் போதே இது சாத்தியமாகும். நிலம்தான் அனைத்திற்கும் அடிப்படையான மூலதனமாக உள்ளது. உழைப்பு மட்டுமே மூலதனமாக கொண்ட உழைக்கும் மக்கள் அதற்காக தங்களின் போராட்டத்தை தொடர வேண்டியுள்ளது..
நே . ராம்பிரபு
Leave a Reply