முதலாளித்துவ சுரண்டல்களிலிருந்து
பாட்டாளி வர்க்கம் விடுதலைப் பெற வேண்டி,
பேசும்போதெல்லாம்,எழுதும்போதெல்லாம்….
பொதுவுடைமையை பேசாமல் கடக்க முடியாது.
பொதுவுடைமை பேசும்போதெல்லாம் கம்யூனிச தத்துவத்தை பேசாமல் கடக்க முடியாது.
கம்யூனிச தத்துவத்தை பேசும்போதெல்லாம்
மார்க்சை பேசாமல் கடக்க முடியாது
மார்க்சை பேசும்போதெல்லாம்
எங்கல்சை பேசாமல் கடக்க முடியாது.
கார்ல் மார்க்ஸ் அவர்களால் “இன்னொரு நான்” என்று அடையாளப் படுத்தப்பட்ட
உலகம் போற்றும் மேதை ஃபிரட்ரிக் எங்கல்ஸ் இந்த நாளில்தான்(28.11.1820) பிறந்தார்.
ஜெர்மனியிலும்,இங்கிலாந்திலும் விரிவுபடுத்திய பெரும் பருத்தி ஆலை முதலாளியின் மகன்தான் ஃபிரட்ரிக் எங்கல்ஸ்.
தனது 17 வயதிலேயே தத்துவ அறிஞர் ஹெகலின் சீடரானார்.
22 ஆவது வயதில் தன்னை விட இரண்டு வயது மூத்தவரான கார்ல் மார்க்சை (ஹெகல் முன்னாள் சீடர்) சந்திக்கிறார்.
விவாதிக்கிறார்.
முரண்படுகிறார்.
மீண்டும் சந்திக்கிறார். பிறகு இருவரும்
நெருக்கமாகிறார்கள்.
மார்க்ஸ் என்ற மேதைக்காக தன்னையே அர்ப்பணிக்கிறார்.
தனக்கான தனது குடும்ப சொத்துக்களை மேதை மார்க்சின் குடும்பத்திற்காக செலவழிக்கிறார்.
தனது அறிவை முன்னிலைப்படுத்தாமல்
மார்க்சின் சிந்தனைகளை முன்னிலைப்படுத்துகிறார் 24 மொழிகளை கற்றறிந்த மேதை எங்கல்ஸ் !
மார்க்சின் இறப்பிற்கு பிறகு அவரது சிந்தனைகளுக்கு மார்க்சிய தத்துவம், மார்க்சியம் என்று அறிவித்தவர் மேதை எங்கல்ஸ்.
மார்க்சுடன் இணைந்து கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை,
குடும்பம்,தனிச்சொத்து,அரசு,ஆகியவற்றின் தோற்றம்,
மனித குரங்கிலிருந்து மனிதனாக மாறிய இடைநிலைப்படியில் உழைப்பின் பாத்திரம்,
கம்யூனிச கோட்பாடுகள்,
மூலதனம் தொகுப்பு,
ஆகியவைகள் எழுதியவர் எங்கல்ஸ்!
“எங்கெல்லாம் புரட்சிகர குமுறல்கள் இருக்கிறதோ,அங்கெல்லாம் பின்னணியில் சமுதாய தேவை இருந்தே தீரும்.
சகல செல்வத்தையுடைய தோற்றுவாயும் உழைப்பே.
உழைப்புதான் மனிதனையே உருவாக்கியது.
மனிதன் இயற்கையின் மீது ஆதிக்கம் செலுத்தி அதை மாற்றி அமைக்க முயற்சிக்கும்போது மனிதனை இயற்கை திருப்பி அடிக்கிறது.
தத்துவார்த்த சிந்தனை,திறமைகளை வளர்த்துக்கொள்ள முந்தைய தத்துவ இயலைப்படித்து ஆராய்வதை தவிர வேறு விதமான வழிகள் இல்லை.
உயிரினங்களின் வளர்ச்சி விதியை டார்வின் கண்டறிந்ததை போல மனித சமூக வரலாற்றின் வளர்ச்சிவிதியை மார்க்சு கண்டறிந்தார்.
இயக்கம் இல்லாத பொருள் எங்குமே ஒருபோதும் இருப்பதில்லை.அப்படி இருக்கவும் முடியாது.
முரண்பாடு எப்போது முடிவுக்கு வருகிறதோ;அப்போது உயிர்ப்பு முடிந்து மறைவு நிகழ்கிறது.”
என்று எழுதியவர் எங்கல்ஸ்.
மார்க்சியத்திற்குள் எங்கல்சியம் ஆழப்பொதிந்திருக்கிறது.
மாமேதைகள் மார்க்சு-எங்கல்ஸ் சிந்தனைகளே மார்க்சியம்.
மார்க்சை பிரித்த எங்கல்சும்
எங்கல்சை பிரித்த மார்க்சும்
வெற்று காகிதமே….!
முதலாளித்துவத்திற்கு முடிவுரை எழுத
பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை முன்மொழிந்த
“உலக தொழிலாளர்களே ஒன்று சேருங்கள்” என்ற முழக்கத்தை முன் வைத்த
உலகைக் குலுக்கிய இரண்டு நண்பர்கள்,
மார்க்ஸ் – எங்கல்ஸ் சிந்தனைகளை
உழைக்கும் மக்கள் வென்றெடுக்க வேண்டும்.
வெல்க மார்க்சியம்!
வாழ்க
மார்க்ஸ் – எங்கல்ஸ்….!
தோழர் இரா.திருநாவுக்கரசு
Leave a Reply