
தொழிலாளி தூங்காமல் இருக்க முடியுமெனில் தூங்குவதற்கான இடைவேளைகூட இல்லாமல் அவர்களை முதலாளித்துவம் உழைக்கவைக்கும். முதலாளிகளுக்கு கெடு வாய்ப்பாக இயற்கை மனிதனை அவ்வாறு உருவாக்கிடவில்லை என்று இந்த முதலாளித்துவத்தின் கயமை நிறைந்த சுரண்டல் குறித்து அன்றே மார்க்ஸ் தெளிவாக கூறினார்.
முதலாளிகளின் ஒரே இலக்கு
லாபம்.. அதீத லாபம்.. என்பதுதான்
அதற்கான ஒரே வழி உழைப்புச் சுரண்டலே
வேலை நேரத்தை அதிகப்படுத்துவதும்
கூலியை குறைத்து வழங்குவதுமே உழைப்புச் சுரணடலுக்கான வழி. அதனால்தான் இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தி இந்தியாவை முன்னேற்ற அதிக நேரம் உழைக்க வேண்டும் என்கிறார். ஆனால் பாருங்கள், நாராயணமூர்த்தி தனது பேரக் குழந்தைக்கு சுமார் 280 கோடிக்கான பங்குகளை வழங்கியுள்ளார். இது இந்தியாவுக்கான முன்னேற்றமா அல்லது நாராயண மூர்த்தியின் முன்னேற்றமா. தொழிலாளர்கள் கூடுதல் நேரம் உழைத்தால் தனது பேரக் குழந்தைக்கு 500 கோடிக்கு பங்குகளை கொடுத்திருப்பார்.

எல் & டி தலைவரோ, வீட்டில் என்ன வேலை, வந்து இங்கு எங்களுக்கு உழைத்துக் கொட்டுங்கள் என்கிறார். (எஸ்.என்.சுப்பிரமணியத்தின் ஆண்டு ஊதியம் ₹ 51 கோடி. எல் & டி தொழிலாளர்களின் சராசரி சம்பளத்தை ஒப்பிடுகையில் 535 மடங்கு இவரது சம்பளம். தொழிலாளர் ஒரு நாளைக்கு 8 மணி நேரம் உழைத்தாலே இவருக்கு இவ்வளவு சம்பளம் கிடைக்கும் என்றால் 15 மணி நேரம் உழைத்தால் இவருக்கு எவ்வளவு கிடைக்கும்! – செ.வா)
ஓய்வு என்பது மனித உடலுக்கும் ஆரோக்கியமான சிந்தனைக்கும் எவ்வளவு அவசியம் என்பதை இவர்களில் கொஞ்சமும் புரிந்து கொள்ளமாட்டார்கள். ரத்தமும் சதையும் கொண்ட மனிதனை இயந்திரத்தின் ஒரு பகுதியாகவே முதலாளித்துவம் பார்க்கிறது என்பதை கம்யூனிஸ்ட் அறிக்கை 1848 லேயே அம்பலப்படுத்தியது.
ச.லெனின்