உற்பத்தி துறையும் தொழிற்சங்கமும்…. கட்டுரையாளர் : Sri haran venkateasn

நாம் அன்றாட வாழ்கையில் பல்வேறு பொருட்களை பயன்படுத்துகிறோம். காலையில் எழுந்து பல் துலக்கும் டூத்பிரஷ்-டூத்பேஸ்ட் முதல், இரவு படுக்க பயன்படுத்தப்படும் கொசுவர்த்தி சுருள் வரை, அந்த பொருட்கள் அனைத்துமே ஏதோவொரு ஆலையில் உற்பத்தி செய்யப்பட்டு – பல கைகள் அவைகளை மாற்றி, பல கைகள் மாறி, நம் கைகளை வந்து அடைந்திருக்கின்றன. இந்த ஆலைகளை நிறுவுவதற்கான முதலை போடுபவர் முதலாளி. அப்படியெனில் தொழிலாளி என்பவர் யார்? பொருள் வடிவமைப்பு(Product Development), தயாரிப்பு திட்டமிடல்(Production Planning), ஆராய்சி  மற்றும் மேம்பாடு(Research and Development) போன்ற பல துறைகள், ஒரு பொருளின் உற்பத்திக்கான திட்டமிடல் மற்றும் ஆரம்ப கட்ட பணிகளில் பங்காற்றினாலும், அந்த பொருள் முழுமை பெருவது என்பது உற்பத்தியின்(Production) போது தான். ஒரு பொருளின் மதிப்பு(value) என்பது உற்பத்தியின் போதுதான் உருவாகிறது. 

இங்கு தான் தொழிலாளர்களின் பங்கு பிரதானமாக ஆகிறது.

தொழிற்சாலை செயல்படும் விதம்:-

தொழிற்சங்கம் ஒரு தொழிற்சாலையில் ஏன் தேவை என்று தெரிந்துகொள்ள, முதலில் ஒரு தொழிற்சாலை எப்படி செயல்படுகிறது என்று தெரிந்து கொள்வது மிக அவசியம்.

ஒரு பொருளை உருவாக்க(உதாரணமாக ஒரு Car என்று வைத்துக்கொள்வோம்) பல பேரின் மூளை உழைப்பும் உடல் உழைப்பும் சேர்ந்த ‘கூட்டுழைப்பு’ தேவைப்படுகிறது. 19ஆம் நூற்றண்டின் இறுதி வரை உற்பத்தி எப்படி இருந்தது என்றால் ஒரு Carரின் Bodyயை நிறுத்தி வைத்து அதன் மேல் பல்வேறு தொழிலாளர்கள் தங்கள் உடலுழைப்பை செலுத்துவார்கள். Car நிற்கும், தேவைப்படும் தொழிலாளர்கள் வந்து அதன் மேல் உழைப்பை செலுத்தி, அவர்கள் செய்ய வேண்டிய உற்பத்தி processசை நிறைவு செய்த பின் அந்த இடத்தைவிட்டு நகருவார்கள். பிறகு அடுத்த தொழிலாளர்கள் வருவார்கள், அவர்களின் பணியை நிறைவு செய்வார்கள், நகருவார்கள். இப்படி அனைத்து processகளும் செய்து முடிக்கையில் car உருவாகிவிடும். சுறுங்கச் சொன்னால் car நிற்கும். தொழிலாளர்கள் நகருவார்கள். இந்த நடைமுறையால் உடலுழைப்பு இருக்கும். ஆனால் Fatigue(சோர்வு) தெரியாது. ஏனென்றால் தொழிலாளர்கள் நகர்ந்து கொண்டே இருக்கிறார்கள், சக தொழிலாளர்களிடம் ஏதாவது பேசவேண்டும் என்றால் பேச முடியும், கொஞ்சம் ஆசுவாசபடுத்திக்கொள்ள சற்று நேரம் எங்காவது அமர முடியும். ஆனால் இந்த நடைமுறையின் மூலம் அதிக அளவில் பொருட்களை உற்பத்தி செய்ய முடியவில்லை. அந்த சமயத்தில் தான் அமெரிக்காவின் ஹென்றி ஃபோர்டு என்ற பெருமுதலாளி Moving Assembly Line(நகரும் அசம்ப்ளி லைன்) என்கிற புதிய உற்பத்திமுறையை அறிமுகப்படுத்தினார். இந்த உற்பத்தி முறையில் தொழிலாளர்கள் ஒரிடத்தில் நின்று கொண்டு இருப்பார்கள். மாறாக உற்பத்திப்பொருள்(உதாரணத்துக்கு car என்றே வைத்துக்கொள்வோம்) ஒரு conveyor beltடில் நகர்ந்து கொண்டிருக்கும்.

கன்வேயர் பெல்டில் நகரும் Car, தொழிலாளியின் அருகில் வரும்போது, அத்தொழிலாளிக்கு கொடுக்கப்பட்ட processகளை, அவர் கன்வேயர் beltடில் நகர்ந்த படியே செய்து முடிக்க வேண்டும். அந்த carரின் வேலையை நிறைவு செய்தவுடன், பின்னால் வரும் carக்கு சென்று வேலை செய்ய வேண்டும். இவ்வாறு ஒரு shift முழுக்க(தேநீர், உணவு இடைவேலை போக) அத்தொழிலாளி செய்த வேலையையே திரும்ப திரும்ப செய்துக் கொண்டே இருக்க வேண்டும்.  இப்படி கன்வேயர் பெல்ட் மூலம் பொருட்களை நகர்த்தி உற்பத்தி செய்வது தான் ‘Mass Production’ என்று அழைக்கப்படுகிறது. Mass Production முறையில் முதல்முதலாக தயாரிக்கப்பட்டது ஃபோர்டு கம்பனியின் Model-T என்ற car தான். பிறகு பெரும்பாலான பொருட்களுக்கும், பண்டங்களுக்கும் இந்த mass production உற்பத்திமுறை பயன்படுத்தப்பட்டது.  பழைய உற்பத்தி முறைக்கும், இப்புதிய உற்பத்தி முறைக்கும் தொழிலாளர்கள் உடலளவிலும், மனதளவிலும் பல இண்ணல்களை கூடதலாக உணர்ந்தனர். முந்தைய உற்பத்தி முறையில் தொழிலாளர்களுக்கு இருந்த சிறிய அளவு ‘சுதந்திரம்’ கூட, ‘நவீன நகரும் assembly line’ உற்பத்தி முறையில் அவர்களிடமிருந்து பறிக்கப்பட்டது. தொழிலாளியின் வாழ்கை என்பது, நகரும் conveyorஉடன் பிண்ணி பிணைந்துவிட்டது. ஒரு தொழிலாளியின் பெரும்பாலான வாழ்க்கை கன்வேயர் பெல்டுடனே கட்டுண்டு கிடக்கும் சூழல் உருவாகி விட்டது. இப்படி செய்வதையே திரும்பத் திரும்ப செய்வதனால், அந்த தொழிலாளி தான் உற்பத்தி செய்யும் பொருருளிடமிருந்தும், தன் உழைப்பிடமிருந்துமே அந்நியப்பட்டு போகிறான். நவீன உற்பத்திமுறை என்ற பெயரில், முதலாளிகள் நடத்தும் சுரண்டலை வெகுஜன மக்களுக்கு புரியும் வண்ணம், நகைச்சுவை கலந்து ‘Modern Times’ என்ற படத்தை ‘மக்கள் கலைஞர்’ சார்லி சாப்ளின் எடுத்திருப்பார். அப்படம் வெளியாகி பல வருடங்கள் கடந்திருக்கலாம். ஆனால் அப்படத்தில் சித்தரிக்கப்பட்ட உற்பத்திமுறை, சாரத்தில் இன்னும் மாறவில்லை. ஆக எந்தவொரு பொருளை உற்பத்தி செய்யும் எந்தவொரு தொழிற்சாலையானாலும், முதல் போடும் முதலாளியும், உடலுழைப்பை செலுத்தும் தொழிலாளிகளும் இருப்பார்கள்.

இவர்கள் இருவருக்கும் இடையில் நிர்வாகிகள் இருப்பார்கள். நிர்வாகிகள் என்பவர்கள், முதலாளியின் வார்த்தைகளையும், சிந்தனைகளையும் கடைநிலை தொழிலாளி வரை கடத்தி முதலாளியின் சார்பாக தொழிலாளிகளை வேலை வாங்குபவர்கள். 

முதலாளியின் கொடூர கணக்கு:-

மேலே, கன்வேயர் பெல்டில் பொருட்கள் எப்படி தயாரிக்கப்படுகின்றன என்பதை ஒரு Carரின் உதாரணத்தை வைத்துப் பார்த்தோம்.

இப்போது சில அடிப்படை கணக்குகளைப் பார்ப்போம். ஒரு car கம்பனியின் முதலாளி ஒரு வருடத்துக்கு 6,00,000 கார்களை உற்பத்தி செய்ய வேண்டும் என்கிற  இலக்கை நிர்ணையிக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். கணக்கின் எளிமைக்காக அந்த கம்பனி ஒரே ஒரு ரக காரை மட்டும் தயாரிக்கிறது என்று வைத்துக்கொள்வோம். இப்போது இந்த 6,00,000 கார்கள் என்ற உற்பத்தி இலக்கை அடைய வேண்டும் என்றால் ஒரு மாதத்துக்கு 50,000 கார்கள் தயாரிக்கப்பட வேண்டும், ஒரு நாளைக்கு 1667 கார்கள் தயாரிக்கப்பட வேண்டும், ஒரு shiftடுக்கு 555 கார்கள் தயாரிக்கப்பட வேண்டும், ஒரு shiftடின் ஒரு மணி நேரத்துக்கு கிட்டத்தட்ட 70 கார்கள் தயாரிக்கப்பட வேண்டும். இதை தான் Units Per Hour(UPH) என்று சொல்கிறார்கள்.

அந்த தொழிற்சாலையில் இருக்கும் வளைந்து நெளிந்து செல்லும், கன்வேயர் பெல்டின் மொத்த நீளம் 500 மீட்டர் என்று வைத்துக் கொண்டால், அந்த 500 மீட்டர் நீளத்துக்குள்  carரை தயாரிப்பதற்கான அனைத்து processகளையும் முடிக்க வேண்டும். அதற்கேற்ப காரை உருவாக்கும் அனைத்து processகளையும் பிரித்து பகிர்ந்தளிக்க வேண்டும். இப்படி processகளை பிரித்து பகிர்ந்தளிப்பதற்கு ‘Line Balancing’ என்று பெயர். தோராயமாக அந்த 500மீட்டர் நீளம் கொண்ட அசம்ப்ளி லைனில் 100 workstation அமைக்கப்பட்டு processகள் பகிர்ந்தளிக்கப்பட்டால், ஒரு work stationனின் நீளம் 5மீட்டராக இருக்கும்.

ஒரு மணி நேரத்தில்(அதாவது 3600 வினாடிகளில்) 70 கார்கள் தயாரிக்க வேண்டும் என்றால், ஒவ்வொரு 52 வினாடிக்கும் ஒரு கார் அசம்ப்ளி லைனை விட்டு வெளியே வரவேண்டும். இதற்கு Takt time என்று பெயர். அப்படியெனில் 5மீட்டர் நீளம் கொண்ட ஒவ்வொரு workstationனையும் ஒரு car 52 வினாடிகளில் கடக்க வேண்டும். அந்த வேகத்தில் தான் conveyor belt இயக்கப்படும். அப்படியெனில் ஒவ்வொரு workstationனில் இருக்கும் தொழிலாளியும், 52 வினாடிக்குள் அவருக்கு அளிக்கப்பட்ட processகளை நிறைவு செய்து அடுத்த காருக்கு செல்ல வேண்டும்.

இப்படி தான் முதலாளித்துவ போட்டியில் ஒரு முதலாளி நிர்ணையிக்கும் இமாலய இலக்கு, கடைநிலை தொழிலாளியை வந்து அடைகிறது.

52 வினாடிகள் தான் ஒரு workstationனில் கார் பயணிக்கும் நேரம் என்றால், ஒரு 30 வினாடிக்கான processகளை அந்த stationனில் வேலை செய்யும் தொழிலாளிக்கு அளிக்கலாம். அப்படி அளித்தால் அவர் அந்த காருக்கான வேலையை முடித்துவிட்டு, ஆசுவாசமாக அடுத்த கார் வந்தவுடன் வேலை செய்யலாம். ஆனால் அப்படி செய்தால் workstationனின் எண்ணிக்கை கூடும். அப்படியெனில் அந்த workstationனில் பணிபுரிய தொழிலாளர்களை நியமிக்க வேண்டும். அவர்களுக்கு சம்பளம் கொடுக்க வேண்டும். இதை முதலாளிகள் விரும்புவதில்லை. அதனால் Takt time 52 வினாடிகள் என்றால், மனசாட்சியே இல்லாமல் கிட்டத்தட்ட 50 வினாடிகள் வேலை செய்யும் அளவுக்கு processகளை பிரித்து கொடுப்பார்கள். இதானால் 8மணி நேரமும் தொழிலாளி ஓடிக்கொண்டே இருப்பார். ஆனால் இதன் மூலம் தொழிலாளர்களின் எண்ணிக்கையை குறைக்கலாம், இருக்கும் தொழிலாளிகளை சக்கையாக பிழியலாம். இது தான் முதலாளியின் கொடூர கணக்கு. உற்பத்தி செய்யும் தொழிலாளி விரும்புவதோ அதிக எண்ணிகையிலான தொழிலாளிகள், குறைவான வேலைப் பளு. ஆனால் முதலாளி கொடுப்பதோ குறைந்த எண்ணிகையிலான தொழிலாளிகள், அதிகமான வேலைப்பளு. இது தான் முதலாளித்துவ உற்பத்தி முறையின் அடிநாதம்.

பலவிதமான தொழிலாளர்கள்:-

தற்போதைய சூழலில், MNC தொழிற்சாலைகளில் மூன்று விதமான தொழிலாளர்களை முதலாளிகள்

 நியமிக்கின்றனர்:-

i) Executives

ii) Junior Executives

iii) Non Executives

இதில் Non Executives மற்றும் Junior Executives ‘Blue Collar’ தொழிலாளர்கள். அதாவது Shop Floorரில்(உற்பத்தி ஆலையில்) நேரடியாக உற்பத்தியில்

 ஈடுபடுபவர்கள். 

Non-Executives கன்வேயர் Beltடில் நகரும் பொருட்களின் மீது தங்களின் உடலுழைப்பை நேரடியாக செலுத்துபவர்கள். 

Junior Executives என்பவர்கள் நேரடியாக உடலுழைப்பை செலுத்த வேண்டாம். ஆனால் ஒரு Assembly Lineனில் இருக்கும் Non Executivesசை Shop Floorரில் இருந்த படியே மேற்பார்வை செய்பவர்கள். Executives என்பவர்கள் ‘White Collar’ வேலை செய்பவர்கள். அதாவது அவர்கள் Shop Floorரில் உடலுழைப்பை செலுத்தும் Non Executivesசையும், அவர்களை மேற்பார்வை செய்யும் Junior Executivesசையும், அவர்களுக்கு கீழே இருக்கும் Executivesசையும்(யாரேனும் இருந்தால்) நிர்வகிப்பவர்கள். Executivesகளின் பதவிகள் Engineer, Senior Engineer என்று ஆரம்பித்து, Assistant Manager, Deputy Manager, Senior Manager, Assistant General Manager, Deputy General Manager, General Manager, Vice President, Director வரை நீள்பவை. இப்பதவிகளின் பெயர்கள் நிறுவனத்துக்கு நிறுவனம் சற்று மாறுபடலாம். ஆனால் இந்த ‘பிரமிட்’ போன்ற வடிவம் எல்லா நிறுவனங்களுக்கும் பொதுவானதாக இருக்கும்.

பொதுவாக பெரும்பான்மையான Junior Executivesசும், அனைத்து Executivesசும் Management சார்பாக நியமிக்கிப்படுபவர்கள். அப்படியெனில் அவர்கள் நிர்வாகத்தின்(Management) ஒரு பகுதி. 

Non-Executives என்பவர்கள் உடலுழைப்பை செலுத்துபவர்கள். Conveyor beltடில் நின்று வேலை செய்பவர்கள். நிர்வாகத்தால் நியமிக்கப்படுபவர்கள். ஆனால் அவர்கள் நிர்வாகத்தின் ஒரு பகுதி அல்ல. தங்களின் உடலுழைப்பை கட்டாயம் செலுத்தியே ஆக வேண்டும் என்கிற நிர்பந்தத்தில் இருக்கும் தொழிலாளர்கள்.

தொழிலாளர்களின் தற்காப்பு ஆயுதம்:-

உடலுழைப்பு என்பது இழிவானது என்றும், நிர்வகிப்பது(மூளை உழைப்பு) என்பது மேன்மையானது என்றும் ஒரு பொதுப்பார்வை முதலாளிகளால் பொதுபுத்தியில் திணிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் எதார்த்தமோ, உடலுழைப்பு இல்லாமல் பொருளுற்பத்தி சாத்தியமே இல்லை என்பது தான். ஒரு Factoryயின் Director ஒரு மாத காலம் factoryக்கு வரவில்லை என்றாலோ, Vice President ஒரு மாத காலம் Factoryக்கு வரவில்லை என்றாலோ, அல்லது ஒரு  Manager ஒரு மாத காலம் வரவில்லை என்றாலோ, Factoryயின் உற்பத்தி ஒன்றும் நின்று விடாது. Factoryயை எவ்வாறு வருங்காலத்தில் கொண்டு செல்வது என்ற திட்டமிடல் தடைபடலாமேயொழிய, அதன் அன்றாட உற்பத்தி தடைப்படாமல் வழக்கம்போல் நடந்து கொண்டு தான் இருக்கும்.

ஆனால் ஒரு shiftடில் வேலை செய்யும் Non-Executive தொழிலாளர்கள் ஒரே சமயத்தில் ஒரு 150 பேர் வரவில்லை என்றாலோ அல்லது வேலை செய்ய மறுத்தாளோ உற்பத்தியே நின்றுவிடும். மூளை உழைப்பு ஒதுக்கிதள்ளப்படவேண்டும் என்று நாம் சொல்லவில்லை. உற்பத்தியில் உடலுழைப்பு பிரதானம் என்பதே நம் வாதம். நிர்வாகிகளைப் போல் நிறைய வாய்ப்புகளோ, சொகுசான வாழ்கைமுறையோ, சமூக அந்தஸ்தோ, வேறு வேலைக்கு சுலபமாக மாறும் வாய்ப்போ, உடலுழைப்பு தொழிலாளர்களுக்கு(Non Executives) கிடைப்பதில்லை. அப்படியெனில் உடலுழைப்பை செலுத்தும் தொழிலாளர்கள் சேர்ந்து இருந்தால் தான் அவர்களுக்கு பலம் என்று தெளிவாக புரிகிறது. ஒரேயொரு தொழிலாளியால் உற்பத்தியை பாதிக்க முடியாது. அந்த ஒரு தொழிலாளியின் உடலுழைப்பை மீதம் இருக்கிற தொழிலாளர்களுக்கு பிரித்து அளித்து அந்த வேலையை முடிக்க முடியும். அந்த ஒரு தொழிலாளியை பணி நீக்கம் செய்ய முடியும். ஆனால் ஒரே சமயத்தில் பல தொழிலாளர்கள் உடலுழைப்பை செலுத்தவில்லையென்றால் உற்பத்தியையே பாதிக்கும். உற்பத்தி பாதித்தால், முதலாளியின் லாபத்துக்கு பிரச்சனை. இப்படி தொழிலாளர்கள் அமைப்பாக திரள்வது தான் ‘சங்கம்’ என்று அழைக்கப்படுகிறது. தொழிலாளிகள் கூட்டாக உற்பத்தியை நிறுத்தி முதலாளி/முதலாளி சார்பாக பேசுபவர்களிடம் பேசுவதுதான் ‘கூட்டு பேரம்’ என்று அழைக்கப்படுகிறது.

கான்ட்ராக்ட் தொழிலாளி vs நிரந்தர தொழிலாளி:-

Non-Executives தான் ஒரு உற்பத்தி companyயில் பெரும்பாலானவர்கள் என்று மேலே பார்த்தோம். இந்த non-executive தொழிலாளர்களை நிரந்தர தொழிலாளர்களாக பணியமர்த்தினால், அவர்களின் ‘கூட்டு பேர’ உரிமை வலுவானதாக இருக்கும், மேலும் அவர்களுக்கு அதிக சம்பளம் கொடுக்க வேண்டியதாக இருக்கும். அதை வலுவிழக்க செய்யும் பொருட்டு, முதலாளிகள் கையாளும் வழி தான் ‘contract’ தொழிலாளர்களை நியமிப்பது. Diploma முடித்த ஏழை எளிய இளைஞர்களை, Trainee, Apprentice, NEEM Trainee, Company Trainee என்று பல்வேறு பெயர்களில் நியமிக்கின்றனர். அவர்களின் பணிக்காலம் அந்த companyயில் 2-3 வருடங்கள் தான் என்று முன்கூட்டியே சொல்லியே அவர்களை எடுப்பார்கள். நன்றாக வேலை செய்தால், leaveகளே பெரும்பாலும் எடுக்கவில்லையென்றால் 2 அல்லது 3 வருடங்களின் முடிவில் ‘பணி நிரந்தரம்’ செய்யப்படுவார்கள் என்று ஆசை வார்த்தைகளை கூறி எடுப்பார்கள். ஆனால் அவர்கள் போடும் conditionகளை 1000 Trainee/Apprenticeகளில் ஓரிருவர் மட்டுமே தேருவார்கள். Apprentice/Trainee கள் பணியே 2-3 வருடங்கள் தான் என்பதை அறிந்தும், அவர்கள் நிரந்தர தொழிலாளர்கள் இல்லை என்பதை அறிந்தும், அவர்களுக்கு கொடுத்த வேலையை செய்து முடித்து தங்கள் பணி காலத்தை முழுவதும் முடித்தால் போதும் என்கிற மனநிலை அவர்களுக்கு வந்துவிடும். இதே மாதிரியான ஒரு contract வேலைத்திட்டத்தை தான் வலதுசாரி பா.ஜ.க. அரசு, தேச பாதுகாப்பை உறுதி செய்யும் ராணுவத்திலேயே ‘அக்னிவீர்’ என்ற பெயரில் கொண்டு வர முற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. சட்டரீதியாகவும், Contract தொழிலாளிகளுக்கு சங்கம் அமைப்பதிலோ, கூட்டு பேர நடவடிக்கைகளில் ஈடுபடுவதோ முடியாது.

Junior-Executives மற்றும் Executives நிர்வாகத்தின் ஒரு பகுதி என்பதால் அவர்கள் சங்கம் அமைப்பதோ, சங்கத்தில் சேருவதோ முடியாத ஒன்று என்பது சொல்லப்படாத விதி.

அப்படியெனில் சங்கம் அமைப்பதற்கோ, சங்கத்தில் சேருவதற்கோ, Non-Executivesசிலேயே நிரந்தர தொழிலாளர்களுக்கு(Permanent Employees)மட்டும் தான் சாத்தியக்கூறுகள் இருக்கிறது. அதுவும் அத்தொழிலாளர்கள் சங்கத்தில் சேருவதும் சேராமலிருப்பதும் அவர்களது தனிப்பட்ட விருப்பம்.

சங்கத்தால் என்ன பலன்? :-

தொழிலாளர்களை பல பிரிவுகளாக்கி எப்படியெல்லாம் முதலாளிகள் சங்கம் அமைப்பதை தடுத்து நிறுத்துகிறார்கள்/கடினப்படுத்துகிறார்கள் என்பதை மேலே பார்த்தோம். சங்கம் அமைப்பதால் நேரடி/கூடுதல் பயன் Permanent Employee(நிரந்தர தொழிலாளர்களாக) இருக்கும் Non-Executivesக்கு தான். Bonus, Increment, Facilities, Utilites, ஓய்வு நேரம், உணவு, Snacks, Tea போன்ற பல அத்தியாவசங்களை நிர்வாகத்திடம் பேச்சுவார்த்தை நடத்தி சங்கத்தால் கேட்டு வாங்க முடியும். Apprentice/Trainee மற்றும் Executivesசால் சங்கம் அமைக்கவோ, இல்லை நிரந்தர தொழிலாளர்கள் உருவாக்கிய சங்கத்தில் சேரவோ முடியாது.

அப்படியெனில் Apprentice/Trainee களுக்கும், கீழ் நிலையில் இருக்கும் white collar executive தொழிலாளிகளுக்கும் என்ன தீர்வு என்ற கேள்வி எழுகிறதல்லவா?

இப்போதைய நிலையில் அவர்களுக்கு நடைமுறையில் தெளிவான தீர்வு இல்லை என்பதே எதார்த்தம்.

ஆனால் ஒரு கம்பனியில் உடலுழைப்பை செலுத்தும் non-exective நிரந்தர தொழிலாளிகள் சங்கம் அமைக்கவில்லை என்றால், Apprentice/Traineeகளுக்கும், Executiveகளுக்கும் இன்னும் திண்டாட்டம் தான்.

பல சமயங்களில் Non-executivesக்காக நிர்வாகத்திடம் சங்கம் பேசி வாங்கும் Bonus அல்லது Increment போன்றன, Executiveகளுக்கும் கிடைக்கும் வாய்ப்பு அதிகம்.

Non-executives சங்கம் ஒரு தொழிற்சாலையில் இருந்தால், Apprentice/Trainee இளைஞர்களுக்கும் ஒரு morale boosterராக இருக்கும்.

அதே போல, உடலுழைப்பு தொழிலாளர்கள் மூன்று shiftகளிலும் மாறி மாறி சுழற்சியில் பணியாற்றவேண்டும். முதலாளி மற்றும் executives இரவு நேரத்தில் குழந்தை குட்டிகளுடன் நன்கு வீட்டில் தூங்கி கொண்டிருக்கும் சமயத்தில், தொழிலாளி இயற்கைக்கு மாறாக night shift பார்க்க வேண்டும். அதனால் பாதிக்கப்படும் உடல்நிலையை சரி செய்ய வேண்டும். அதற்கான தொகையை சம்பளத்தில் கேட்டு வாங்க வேண்டும்.

Provident Fund(பஞ்சப்படி), Night shift allowance, health allowance போன்ற பல உரிமைகளைக் கேட்டு பெற வேண்டும். அதற்கு சங்கம் வேண்டும்.

பெரும்பாலான தொழிற்பேட்டைகளும் உற்பத்தி தொழிற்சாலைகளும், ஊரை விட்டு வெகு தூரத்தில் தான் அமைக்கப்பட்டிருக்கும். அதற்கு Transportation கண்டிப்பாக தேவைப்படும். சில routeகளில் Transportation இல்லை என்றால் நிர்வாகத்திடம் கேட்க வேண்டும்.

தொழிற்சாலைகளில் சில சமயம், எதிர்ப்பாராத விபத்து ஏற்பட்டு காயமோ, உயிரிழப்போ ஏற்பட்டால், சங்கம் இருந்தால் தான் நிர்வாகத்திடம் நஷ்ட ஈட்டை கேட்டு பெற முடியும்.

இப்படி ஒரு தொழிற்சாலை ஒழுங்காக செயல்படுவதற்கே, சங்கம் இருந்தால் தான் அடிப்படை உரிமையையாவது கேட்டு பெற முடிகிறது.

அதே போல தொழிலாளிகள் தன்னெழுச்சியாக தொழிற்சங்கம் அமைக்கும் வரை முதலாளிகள் எவ்வளவு குடைச்சல் கொடுக்க முடியுமோ கொடுத்து பார்ப்பார்கள். அதையும் மீறி தொழிலாளிகள் சங்கம் அமைத்துவிட்டால், போட்டிச் சங்கம் உருவாக்கி விடுவார்கள்.

அப்போது தொழிலாளர்களின் நலன்களைப் பேசும் தொழிற்சங்கத்தை உயிர்ப்புடன் வைத்துக் கொள்வது அவசியமாகிவிடும்.

இவ்வளவு போராட்டம் நிறைந்தது தான் உற்பத்தி தொழிலாளிகளின் அன்றாட வாழ்கை. ‘தொழிற்சங்கம்’ தான் அவர்களை தற்காத்துக்கொள்ள ஒரே ஆயுதம்.

நன்றி தோழர்: Sri haran venkateasn( முகநூல் பதிவு

https://www.facebook.com/share/p/VtJQteQQQ5TeN3wV/?mibextid=oFDknk