தொகுப்பு : எஸ்பிஆர்.
ஆங்கிலேயர் ஆட்சிக்காலம் தொடங்கி, சுதந்திர இந்தியாவில் போராடிப் பெறப்பட்ட 44 மத்திய தொழிலாளர் சட்டங்களை ரத்து செய்துவிட்டு, வெறும் 4 சட்டத் தொகுப்புகளாக மத்திய அரசு மாற்றியிருக்கிறது. இது‘தொழிலாளர் சீர்திருத்தம்’ என்ற பெயரில் கார்ப்பரேட் நிறுவனங்களுக்குச் சேவகம் செய்யும் செயலாகும்.
I. தொழிலுறவுச் சட்டத் தொகுப்பு The Code on Industrial Relations – IR Code
1. ‘தொழிலாளி’ என்பதன் வரையறை சுருக்கம் Attack on Definition புதிய சட்டத்தின்படி, ஒரு நிறுவனத்தில் மேற்பார்வை (Supervisory) பணியில் இருப்பவர் மாதம் ரூ.18,000-க்கு மேல் ஊதியம் பெற்றால், அவர் ‘தொழிலாளி’ என்ற வரையறைக்குள் வரமாட்டார். இன்றைய பொருளாதாரச் சூழலில் ரூ.18,000 என்பது மிகக் குறைந்த ஊதியம். இதன் மூலம் அனுபவம் வாய்ந்த சீனியர் தொழிலாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்கள் தொழிற்சங்கப் பாதுகாப்பிலிருந்து வெளியேற்றப்படுகிறார்கள். அவர்கள் நிர்வாகத்தின் ஏஜெண்டுகளாக மாற்றப்பட வேண்டிய கட்டாயம் உருவாகிறது.
2. தற்காலிக வேலையை சட்டப்பூர்வமாக்குதல் Legalising Fixed Term Employment நிரந்தர வேலைவாய்ப்பு (Permanent Job) என்ற கோட்பாடே இனி இருக்காது. எந்தவொரு வேலையையும், அது நிரந்தரத் தன்மை வாய்ந்ததாக இருந்தாலும், குறிப்பிட்ட காலம் மட்டுமே ஒப்பந்த அடிப்படையில் (Fixed Term) தொழிலாளர்களை நியமிக்க சட்டம் அனுமதிக்கிறது. ஒப்பந்த காலம் முடிந்தவுடன், எவ்வித முன்னறிவிப்பும் இன்றி, இழப்பீடும் இன்றி தொழிலாளி வெளியேற்றப்படுவார். சங்கம் அமைத்தாலோ, உரிமை கேட்டாலோ அடுத்த முறை ஒப்பந்தம் புதுப்பிக்கப்படாது. இது தொழிலாளர்களை நிரந்தர அச்சத்தில் வைக்கும் உத்தியாகும்.
3. ‘அமர்த்து; துரத்து!’ (Hire and Fire) – தாராளமாக! முன்பு 100 தொழிலாளர்களுக்கு மேல் உள்ள ஆலைகளில் ஆட்குறைப்பு செய்ய அரசின் அனுமதி தேவைப்பட்டது. இப்போது அந்த வரம்பு 300 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள 90% தொழிற்சாலைகள் 300-க்கும் குறைவான தொழிலாளர்களைக் கொண்டவையே. இனி முதலாளிகள் நினைத்த நேரத்தில் கதவை மூடலாம்; தொழிலாளர்களை வீட்டுக்கு அனுப்பலாம். அரசு அனுமதியோ, விசாரணையோ தேவையில்லை.
4. தொழிற்சங்கப் பதிவில் கடும் நிபந்தனைகள் ஒரு புதிய தொழிற்சங்கத்தைப் பதிவு செய்ய வேண்டுமானால், அந்த நிறுவனத்தில் உள்ள மொத்த தொழிலாளர்களில் குறைந்தது 10% பேர் அல்லது 100 தொழிலாளர்கள் (எது குறைவோ அது) உறுப்பினராக இருக்க வேண்டும் என்று புதிய சட்டம் கூறுகிறது. ஒரு பெரிய ஆலையில் சங்கம் தொடங்கும் முன்பே 10% தொழிலாளர்களைத் திரட்டுவது என்பது நிர்வாகத்தின் பழிவாங்கும் நடவடிக்கைக்கு வழிவகுக்கும். இது தொழிற்சங்கங்கள் முளைப்பதையே தடுக்கும் சதி.
5. ஜனநாயக உரிமைகள் மற்றும் வெளியாட்கள் (Outsiders) தடை தொழிற்சங்கத் தலைவர்களாக, அந்நிறுவனத்தில் பணிபுரியாத முழுநேர ஊழியர்கள் (Outsiders) இருப்பது மூன்றில் ஒரு பங்காக அல்லது அதிகபட்சம் 5 நபர்களாகக் குறைக்கப்பட்டுள்ளது. வேலை செய்யும் தொழிலாளர்கள் நிர்வாகத்தால் பழிவாங்கப்படுவார்கள் என்பதால் தான், முழுநேர ஊழியர்கள் சங்கத்திற்குத் தலைமை தாங்குகிறார்கள். இந்தத் தலைவர்களைக் குறைப்பதன் மூலம் சங்கத்தின் பேரம் பேசும் சக்தியை (Bargaining Power) இந்தச் சட்டம் அழிக்கிறது.
6. அங்கீகாரத்தில் குளறுபடி (Recognition of Trade Unions) நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தும் அங்கீகரிக்கப்பட்ட சங்கமாக மாற 51% தொழிலாளர்களின் ஆதரவு தேவை. ஆனால், இந்த ஆதரவை நிரூபிக்க ‘ரகசிய வாக்கெடுப்பு’ (Secret Ballot) முறை கட்டாயமாக்கப்படவில்லை. உறுப்பினர்களின் எண்ணிக்கையை சரிபார்க்கும் அதிகாரம் அரசிடமே உள்ளது. இது ஆளுங்கட்சி சார்ந்த அல்லது நிர்வாகத்திற்கு வேண்டப்பட்ட சங்கங்களுக்கு மட்டுமே அங்கீகாரம் கிடைக்க வழிவகுக்கும்.
7. தொழிலாளர் நீதிமன்றங்கள் ஒழிப்பு புதிய சட்டப்படி தொழிலாளர் நீதிமன்றங்கள் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டுவிட்டன. அதற்குப் பதிலாக அமைக்கப்படும் தீர்ப்பாயங்களில் (Tribunals) நீதித்துறை சாராத நிர்வாக அதிகாரிகளும் இடம்பெறலாம். மேலும், தகராறு எழுப்புவதற்கான காலக்கெடு 3 ஆண்டுகளிலிருந்து 2 ஆண்டுகளாகக் குறைக்கப்பட்டுள்ளது. இது நீதியை மறுக்கும் செயலாகும்.
8. வேலைநிறுத்த உரிமைப் பறிப்பு – 1 வேலைநிறுத்தம் செய்வதற்கு 60 நாட்களுக்கு முன்பு நோட்டீஸ் கொடுக்க வேண்டும் என்கிறது ஒரு பிரிவு. மற்றொரு பிரிவு 14 நாட்கள் என்கிறது. இந்தத் திட்டமிட்ட குழப்பத்தைப் பயன்படுத்தி, எந்த ஒரு வேலைநிறுத்தத்தையும் “சட்டவிரோதமானது” என்று அறிவிக்க முடியும்.
9. வேலைநிறுத்த உரிமைப்பறிப்பு- 2 சமரசப் பேச்சுவார்த்தை (Conciliation) நடந்து கொண்டிருக்கும் போதும், அது முடிந்து 7 நாட்கள் வரையும் வேலைநிறுத்தம் செய்யக்கூடாது. தீர்ப்பாயத்தில் வழக்கு நடந்தால், தீர்ப்பு வந்து 60 நாட்கள் வரை ஸ்ட்ரைக் செய்யக்கூடாது. அரசுத் துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தையை முடிவின்றி இழுத்தடிப்பதன் மூலம், தொழிலாளர்கள் வேலைநிறுத்தமே செய்ய முடியாத நிலையை உருவாக்குவார்கள். மீறிச் செய்தால் சிறைத்தண்டனையும், அபராதமும் விதிக்கப்படும்.
II. சமூகப் பாதுகாப்புச் சட்டத் தொகுப்பு The Social Security Code
இது தொழிலாளர்களின் சேமிப்பு மற்றும் எதிர்கால பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்குகிறது
10. அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு ஏமாற்றம் நாட்டின் பெரும்பான்மையான உழைக்கும் வர்க்கமான அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு, இந்தச் சட்டத்தில் உறுதியான நலத்திட்டங்களோ, அதற்கான நிரந்தர நிதி ஒதுக்கீடோ (Budgetary Allocation) இல்லை. எல்லாம் அரசின் விருப்பத்திற்கு (May notify) விடப்பட்டுள்ளது.
11. பி.எஃப் (PF) மீதான தாக்குதல் தொழிலாளர் மற்றும் நிர்வாகம் செலுத்த வேண்டிய வருங்கால வைப்பு நிதி (EPF) பங்களிப்பு விகிதம் 12%-லிருந்து 10%-ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, ‘ஊதியம்’ என்பதன் வரையறை மாற்றப்பட்டுள்ளதால், பி.எஃப் கணக்கிடப்படும் அடிப்படைத் தொகையே குறையும். இதனால் ஓய்வுக்காலத்தில் தொழிலாளிக்குக் கிடைக்க வேண்டிய பெரும் தொகை முதலாளிகளின் லாபத்திற்காகப் பறிக்கப்படுகிறது.
12. இ.எஸ்.ஐ (ESI) நீர்த்துப்போகச் செய்தல் இஎஸ்ஐ சட்டத்தை மீறும் நிறுவனங்கள் மீது விதிக்கப்படும் அபராதங்கள் மற்றும் தண்டனைகள் குறைக்கப்பட்டுள்ளன. தொழிலாளர்களின் சுகாதார வசதிகளை மேம்படுத்துவதற்குப் பதிலாக, நிதியை வேறு திசையில் திருப்புவதற்கே இந்தச் சட்டம் முன்னுரிமை அளிக்கிறது.
III. ஊதியச் சட்டத் தொகுப்பு (Code on Wages)
ஊதியம் என்பது உரிமை என்பதை மாற்றி, அதுமுதலாளியின் கருணை என்று மாற்றுகிறது
13. சொற்களில் மோசடி (Worker vs Employee) சட்டத்தின் பல இடங்களில் ‘தொழிலாளி’ (Worker) மற்றும் ‘ஊழியர்’ (Employee) என்ற சொற்கள் குழப்பமாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்தத் தெளிவின்மை நீதிமன்றங்களில் முதலாளிகளுக்குச் சாதகமாகப் பயன்படுத்தப்படும்.
14. ‘ஊதியம்’ (Wages) புதிய வரையறை புதிய வரையறையின்படி, அடிப்படைச் சம்பளம் (Basic) மற்றும் பஞ்சப்படி (DA) மட்டுமே ஊதியமாகக் கருதப்படும். வீட்டு வாடகைப்படி, ஓவர் டைம், போனஸ், பயணப்படி போன்றவை ‘ஊதிய’ வரையறையிலிருந்து நீக்கப்பட்டுள்ளன. ஊதியம் வழங்கப்படாதது தொடர்பான வழக்குகளில், தொழிலாளிக்கு அடிப்படைச் சம்பளம் மட்டும் கிடைக்குமே தவிர, இதர படிகள் சட்டப்பூர்வ உரிமையாகக் கிடைக்காது.
15. குறைந்த பட்ச ஊதியம் – வெறும் பரிந்துரை மட்டுமே குறைந்தபட்ச ஊதிய ஆலோசனைக் குழுவின் பரிந்துரைகள் அரசை எவ்விதத்திலும் கட்டுப்படுத்தாது. மேலும், தேசிய அளவிலான அடிப்படைச் சம்பளம் (National Floor Level Wage) என்பது சட்டப்பூர்வமான கட்டாயமல்ல. இதனால் மாநில அரசுகள் குறைவான ஊதியத்தை நிர்ணயிக்க வாய்ப்புள்ளது.
16. நிறுவனத்தின் கணக்குகளை ஆராயத் தடை போனஸ் கணக்கீட்டிற்காக, ஒரு நிறுவனம் லாபத்தில் இயங்குகிறதா என்பதை அறிய, அதன் தணிக்கை செய்யப்பட்ட கணக்குகளை (Audited Accounts) தொழிற்சங்கங்கள் சரிபார்க்கும் உரிமை இருந்தது. அந்த உரிமை இப்போது பறிக்கப்பட்டுள்ளது. முதலாளி சொல்வதுதான் கணக்கு.
17. ஆய்வாளர்கள் இனி ‘கண்காணிப்பாளர்கள்’ அல்ல தொழிலாளர் துறை ஆய்வாளர்கள் (Inspectors) இனி “ஆய்வாளர்-மற்றும்-மேம்பாட்டாளர்கள்” (Inspectors-cum-Facilitators) என்று அழைக்கப்படுவார்கள். இவர்கள் திடீர் ஆய்வு மேற்கொள்ள முடியாது; புகார் வந்தாலும் அரசின் முன் அனுமதி பெற்றே செல்ல வேண்டும். இது சட்ட அமலாக்கத்தைத் தடுக்கும் முயற்சி.
IV. பணிப்பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் பணிச்சூழல் சட்டத் தொகுப்பு (OSHWC Code)
தொழிலாளர்களின் உயிருக்கும், உடலுக்கும் உத்தரவாதம் இல்லாத நிலை
18. ‘தொழிற்சாலை’ வரையறையில் மாற்றம் மின்சாரம் பயன்படுத்தும் இடங்களில் 20 தொழிலாளர்கள் (முன்பு 10), மின்சாரம் இல்லாத இடங்களில் 40 தொழிலாளர்கள் (முன்பு 20) இருந்தால்தான் அது ‘தொழிற்சாலை’ சட்டத்தின் கீழ் வரும். இதன் மூலம் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களில் (MSME) வேலை செய்யும் கோடிக்கணக்கான தொழி லாளர்கள் பாதுகாப்புச் சட்டங்களிலிருந்து வெளி யேற்றப்படுகிறார்கள். அங்கு விபத்து நடந்தால் கூட கேள்வி கேட்க சட்டத்தில் இடமில்லை.
19. ஒப்பந்தத் தொழிலாளர் முறைக்கு ஊக்கம் ஒப்பந்தத் தொழிலாளர் சட்டத்தின் கீழ் உரிமம் பெற, முன்பு 20 தொழிலாளர்கள் இருந்தாலே போதும். இப்போது அது 50 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 50-க்கும் குறைவான தொழிலாளர்களை வைத்து வேலை வாங்கும் ஒப்பந்ததாரர்களுக்கு எந்தக் கட்டுப்பாடும், உரிமமும் தேவையில்லை. இது ஒப்பந்தத் தொழிலாளர் முறையை நிரந்தரமாக்குவதோடு, அவர்களைக் கொத்தடிமைகளாக மாற்றும்.
20. முதன்மை முதலாளி தப்பித்தல் முன்பு ஒப்பந்ததாரர் ஊதியம் கொடுக்கவில்லை என்றால், முதன்மை முதலாளி (Principal Employer) தான் பொறுப்பு. புதிய சட்டத்தில், ‘Core Activity’ (முக்கியப் பணிகள்) எவை என்பதை அரசே தீர்மானிக்கும். இதன் மூலம் முதன்மை முதலாளி தனது பொறுப்புகளிலிருந்து நழுவிக் கொள்ள வழி செய்யப்பட்டுள்ளது.
21. புலம்பெயர் தொழிலாளர்கள் (Migrant Workers) புலம்பெயர் தொழிலாளர் சட்டத்திற்கான வரம்பு 5-லிருந்து 10-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. கொரோனா காலத்தில் நடந்த துயரங்களுக்குப் பிறகும், புலம்பெயர் தொழிலாளர்களின் தரவுகளைப் பராமரிப்பது, அவர்களுக்கு பயணப்படி கொடுப்பது போன்ற சட்டப் பாதுகாப்புகள் தளர்த்தப்பட்டுள்ளன.
22. 8 மணி நேர வேலை – ஒரு கனவு சட்டத்தில் 8 மணி நேர வேலை என்று இருந்தாலும், ‘பரவல் நேரம்’ (Spread over time) என்பதை 12 மணி நேரம் வரை நிர்ணயிக்க அரசுக்கு அதிகாரம் உள்ளது. அதாவது, ஒரு தொழிலாளியை காலை வரவழைத்து, நடுவில் கூடுதல் இடைவேளை கொடுத்து, இரவு வரை பணியில் வைத்திருக்க முடியும்.
23. ஓவர் டைம் (Overtime) விதியில் மாற்றம் ஓவர் டைம் பார்ப்பதற்கான கால வரம்பை சட்டத்தில் குறிப்பிடாமல், விதிகளில் (Rules) மாற்றிக்கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது. வரைவு விதிகளின்படி ஒரு காலாண்டிற்கு 125 மணி நேரம் ஓவர் டைம் பார்க்க வேண்டும். இதில் தொழிலாளியின் சம்மதம் (Consent) என்ற பேச்சுக்கே இடமில்லை.
24. வார விடுமுறை ரத்துசாத்தியம் வாரத்திற்கு ஒரு நாள் விடுமுறை கட்டாயம் என்று சட்டம் சொன்னாலும், அடுத்த வரியிலேயே “அரசு நினைத்தால் இதில் விலக்கு அளிக்கலாம்” என்று கூறப்பட்டுள்ளது. இது தொழிலாளர்களின் ஓய்வு உரிமையைப் பறிக்கும் செயல்.
25. துறைசார் பாதுகாப்புச் சட்டங்கள் ரத்து சினிமாத் துறை, பீடித் தொழில், துறைமுகம் போன்ற 13 வகையான துறைசார் பாதுகாப்புச் சட்டங்கள் ரத்து செய்யப்பட்டு, பொதுவான விதிகளாக மாற்றப்பட்டுள்ளன. அந்தந்தத் துறைக்குத் தேவையான பிரத்யேகப் பாதுகாப்பு அம்சங்கள் காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளன. மேலும், பாதுகாப்புத் தர நிலைகளை (Safety Standards) நாடாளுமன்றம் முடிவு செய்யாமல், அதிகாரிகளின் முடிவுக்கு விட்டுவிடுகிறது இந்தச்சட்டம்.
இந்த 25 காரணங்களும் உணர்த்துவது ஒன்றே ஒன்றுதான். இந்த 4 சட்டத் தொகுப்புகளும் “தொழில் செய்வதை எளிதாக்குதல்” (Ease of Doing Business) என்ற பெயரில், “தொழிலாளர்களைச் சுரண்டுவதை எளிதாக்குதல்” (Ease of Exploitation) என்பதையே நோக்கமாகக் கொண்டுள்ளன. இது தொழிலாளர் வர்க்கத்தின் மீது தொடுக்கப்பட்டுள்ள போர். இதனை எதிர்த்து முறியடிப்பது ஒவ்வொரு தொழிற்சங்கத்தின், ஒவ்வொரு தொழிலாளியின் கடமையாகும்.
நன்றி: தீக்கதிர்
