அன்பார்ந்த உழைக்கும் மக்களே !
கடந்த நான்கு நாட்கள் முன்பு சென்னை சிவனாந்த சாலையில் 7 முதல் 25 ஆண்டுகள் தொகுப்பூதிய முறையில் குறைந்த கூலிக்கு பணியாற்றிவரும் 1500க்கும் மேற்பட்ட பணி நிரந்தரமற்ற மருத்துவ செவிலியர்கள் ” தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம்” என்ற சங்கத்தின் தலைமையின் கீழ் தங்களின் பல ஆண்டு கோரிக்கையான ” பணி நிரந்தரம் ” சமவேலைக்கு சம ஊதியம் ” மகப்பேறு காலங்களில் ஊதியத்துடன் விடுப்பு ” போன்ற முக்கிய கோரிக்கைகளை கொண்டு போராடிய செவிலியர்களை தமிழக அரசு ஒடுக்கும் விதமாக அவர்களை வலுக்கட்டயமாக கைது செய்து நள்ளிரவில் சென்னைக்கு வெளியே கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் இறக்கி விட்டு கலைந்து போகும்படி கட்டாயப்படுத்தியது. தமிழக அரசின் செயலும், “தமிழ்நாட்டின் சுகாதார துறை அமைச்சர் திரு. மா. சுப்பிரமணியம் – “தேர்தல் வாக்குறுதி கொடுத்தா நிறைவேத்தணுமா ” என்ற பெறுப்பற்ற திமிர்தன பதிலும் செவிலியர்களின் போராட்டத்தை மேலும் உறுதிப்படுத்தியது.
இதன் தொடர்ச்சியாக விடிய விடிய கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் போராடிய ஆயிரக்கணக்கான பெண் செவிலியர்களை மீண்டும் அடக்குமுறை செலுத்தி கைது செய்து ஊரப்பாக்கத்தில் உள்ள தனியார் திருமனமண்டபத்தில் அடைத்து வைக்கபட்டனர் அவர்களுக்கு போதுமான உணவு, தண்ணீர், கழிப்பிட வசதிகள் செய்து தரவில்லை. மேலும் தமிழக காவல்துறை, போராடும் செவிலியர்கள் மீது வழக்கு போடுவதாக கூறி மிரட்டப்பட்டனர்.
அவர்களின் உருகுலையாத மன உறுதிக்கொண்ட ஆயிக்கணக்கான பெண் செவிலியர்கள் தங்கள் போராட்டத்திலிருந்து சிறிதும் பின் வாங்காமல் தங்களின் போராட்டத்தை கூடுவாஞ்சேரியில் உள்ள அரசு பொது மருத்துவமனையில் வெளிபுறத்தில் உள்ள மரத்தடியில் இரவும் பகலும் கொட்டும் பனி என்றுபாராமல் தங்களின் கோரிக்கை நிறைவேறும் வரை சூழச்சி முறையில் போராடி வருகின்றனர் இது நமக்கு டெல்லியில் நடந்த மாபெரும் விவசாய போராட்ட வடிவத்தை நினையூட்டுகிறது.
மருத்துவத்துறையில் செவிலியர்களின் சேவை என்பது மிக முக்கிய பங்கு வகிக்கின்றது. அரசின் அனைத்து மருத்துவ திட்டங்களையும் நாட்டில் உள்ள கடைக்கோடி மக்கள் வரை கொண்டு செல்வதில், நாட்டு மக்களை நோய்களிருந்து பாதுக்காப்பதில் அவர்களின் தியாகம் எல்லையற்றது.
மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தின் ( The Medical Services Recruitment Board – MRB ) மூலம் தேர்வு எழுதி முறையாக பணியிடங்களுக்கு தேர்ச்சி பெற்ற பிறகும் பணி நியமனம் செய்யாமல் உழைப்பை சுரண்டும் நோக்கில் அன்று ஆட்சியில் இருந்த அதிமுக அரசு இரண்டு வருடம் தொகுப்பூதியத்தில் ( ஒப்பந்த முறை ) பணி செய்ய வேண்டும் எனவும் அதன் பின்னர் பணி நிரந்தரம் செய்யப்படும் என்று பணி நியமன ஆணை வழங்கியது. எந்த ஒரு மாநிலத்திலும் இல்லாத ஒரு விசித்தரம் மருத்துவ செவிலியர்கள் அரசு பணிக்கு வர வேண்டுமென்றால் தொகுப்பூதியம் எனும் உழைப்பு சுரண்டலை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
2015 ஆண்டு முன்னரே மருத்துவப்பணியாளர் தேர்வு வாரியத்தின் தேர்வு எழுதி தேர்ச்சி தொகுப்பூதிய மருத்துவ செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்ய கேட்டு கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக போராடி வருகிறனர். கடந்த ஆட்சி காலத்தில் நடத்திய போராட்டங்களுக்கெல்லாம் தற்போது ஆட்சியில் இருக்கும் திமுக அரசு ஆதரவு தந்தது. தேர்தல் காலத்தில் நாங்கள் ( திமுக ) ஆட்சியமைத்தால் அனைத்து தொகுப்பூதிய செவிலியர்களை பணி நிரந்தரம் செய்வோம் என்று தேர்தல் வாக்குறுதி ( வாக்குறுதி எண் – 356 ) கொடுத்தது. ஆனால் வாக்குகளை பெற்று ஆட்சி அமைத்த திமுக அரசு இன்று வரை இக்கோரிக்கைகளுக்கு செவி சாய்க்கவில்லை.
மருத்துவ பயனாளர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப தேசிய மருத்துவ ஆணையம் மற்றும் இந்திய பொது சுகாதார நிர்ணயங்களின் அடிப்படையில் அரசு மருத்துவமனைகளில் செவிலியர் மற்றும் மருத்துவர்கள் பணியிடங்கள் உருவாக்கபட வேண்டும் ஆனால் அவ்வாறு உருவாக்கப்படவில்லை.
இதனால் அரசு மருத்துவமனைகளை நாடி வரும் ஏழை, எளிய மக்களுக்கு தரமான சிகிச்சை வழங்குவதில் சிக்கல் ஏற்படுவதுடன் நான்கு நபர் பார்க்க வேண்டிய பணியை ஒரே நபர் செய்வதால் அதிகப்படியான பணிச்சுமை ஏற்பட்டு மன அழுத்தத்துடன் பலர் நோய்வாய்ப்பட்டுள்ளனர். ஆட்சிப்பொறுப்பேற்ற பின் புதிய பணியிடங்கள் ஏதும் உருவாக்காமல் புதிதாக தொடங்கப்பட்ட மருத்துவமனைகளான கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு பன்நோக்கு மருத்துவமனை, பெரியார் நகர் மருத்துவமனை மற்றும் இதர மாவட்ட மருத்துவமனைகளில் 10 முதல் 25 ஆண்டு காலம் வேலை செய்யும் 8000 செவிலியர்களை பணி நிரந்தரம் செய்யாமல் இருக்கும் செவிலியர்களை Redeployment என்ற பெயரில் பணியிட மாற்றம் செய்து மருத்துவமனைகளை நடத்தி வருகிறது. இது ஏற்கனவே இருக்கும் செவிலியர்கள் தட்டுப்பாட்டை இன்னும் அதிகரிக்க செய்கிறது.
அதே சமயத்தில் மருத்துவ துறை அமைச்சர் அவர்கள் தொடர்ச்சியாக ஊடகவியலாளர் சந்திப்புகளில் மருத்துவ துறையில் காலி பணியிடங்களே இல்லை பூஜ்யம் என்று கூறுவது அயோக்கிதனமானது.
“சம வேலைக்கு சம ஊதியம்” என்ற அடிப்படையில் தொகுப்பூதிய செவிலியர்களுக்கு நிரந்தர செவிலியர்களுக்கு இணையான ஊதியம் மற்றும் அனைத்து பலன்களும் வழங்க வேண்டுமென்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் ஆளும் திமுக அரசு நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. இந்த நடவடிக்கை என்பது அரசு துறையில் நிரந்தர பணி என்பதை ஒழித்துக்கட்ட பார்க்கிறது.
மறுபுறம், 150 நாட்களாக “பணி நிரந்தரம்” கேட்டு போராடிவரும் நாட்டை தூய்மையாக வைத்துக்கொள்ளும் தூய்மை பணியாளர்கள் கேள்விக்கு திமுக விடியல் அரசு அளித்த பதில் “நிரந்தர பணியால் அரசுக்கு செலவினங்கள் அதிகரிக்கிறது ஆகையால் அனைத்து துறைகளில் உள்ள பணிகளை அத்தக்கூலி ( ஒப்பந்த ) முறையில் விடுவது அதாவது தனியாருக்கு தாரைவார்ப்பது இதுதான் அரசின் கொள்கை” என்று ஆணிதனமாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வாதம் வைக்கப்பட்டது அதன்படி. நீதி மன்றமோ அரசின் கொள்கை முடிவுகளில் தலையிட முடியாது என்று வழக்கை தள்ளுபடி செய்தது.
ஆகையால் தோழர்களே !
மத்தியிலும், மாநிலத்திலும்
எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் தனியார்மயம், தாராளமயம், உலகமயத்தை அமல்படுத்தே தீரும். போலி வாக்குறிதிகளை அளிக்கும் ஓட்டுகட்சிகளை புறக்கணித்து,
ஆளும் அரசின் தனியார்மயக் கொள்கையை எதிர்க்காமல் நாம் எதையும் பெற்றுவிட முடியாது. எனவே, பரந்தப்பட்ட மக்களுடன் இணைந்து உறுதியான போராட்டங்களால் மட்டுமே நமது கோரிக்கையை வென்றெடுக்க முடியும் என்பது வரலாறுகள் நமக்கு கற்பித்த படிப்பினைகள் பின்பற்றுவோம்.
ஒன்றிணைந்து போராடுவோம்.
————–
தமிழக அரசே !
* தமிழ்நாடு அரசு மருத்துவத் துறையில் ஒப்பந்த முறை / அத்தக்கூலி முறையினை ரத்து செய் !
* 8000 மேற்ப்பட்ட தொகுப்பூதிய செவிலியர்களை பணி நிரந்தரமாக்கு !
* சமவேலைக்கு சம ஊதியம் என்ற நீதிமன்ற தீர்ப்பு எதிராக மேல்முறையீட்டை திரும்ப பெறு !
* மகப்பேறு விடுப்பு ஊதியத்துடன் வழங்கு !
உழைக்கும் தொழிலாளர்களே !
* அரசு மற்றும் தனியார் துறையில் ஒப்பந்த முறை / அத்தக்கூலி முறையினை ஒழித்திட போராடுவோம் !
* நிரந்தர பணியை ஒழிக்கும் தனியார்மயத்திற்கு எதிராக ஒன்றிணைவோம் ! போராடுவோம் !
———-
ஒப்பந்த தொழிலாளர் பாதுகாப்பு சங்கம்
தமிழ்நாடு.
தொடர்புக்கு – 8667262195
.
