NIOT National Institute of Ocean Technology ஆராய்ச்சி கூடத்தில் ஆராய்ச்சியாளராக நண்பர் வேலை செய்துகொண்டிருந்தார். சொல்லப்போனால் கடல்சாரி விஞ்ஞானி என்று சொல்லலாம். அவர் வேலை செய்த பத்து ஆண்டுகளில் அவர் எழுதிய பேப்பர் 18 முறை அறிவியல் இதழான elsevier இல் வந்துள்ளது. அதாவது இங்கு facebook இல் எழுதுவது போல ஆராய்ச்சியாளர்கள் போகிற போக்கில் எல்லாம் தரவுகள் இல்லாமல் அடித்துவிட முடியாது. நீங்கள் விஞ்ஞானி என்றால் இதைப்போன்ற அறிவியல் இதழ்களில் உங்கள் கட்டுரை பிரசுரம் ஆகியிருக்கவேண்டும். அங்கு scientific community அதை அங்கீகரித்திருக்க வேண்டும் , நாம் ஆராய்ச்சி செய்து ஒரு விடயத்தை வைக்கிறோமென்றால் , அதற்கு review செய்வது இன்னொரு scientist அதாவது விஞ்ஞானி. மற்றவர்களும் சரிபார்ப்பார்பார்கள், ஆராய்ச்சியில் தவறு இருந்தால் சுட்டிக்காட்டுவார்கள், ஒத்துக்கொள்ளமாட்டார்கள்.
நண்பரின் ஆராய்ச்சிகள் அதன் சார்ந்த வேலைகளும் 18 முறை முக்கிய இதழான elsevier இல் பதிவாகி இருக்கிறது. ஆனால் நண்பர் 10 வருடமாக வேலை நிரந்தரம் இல்லாமல் இருந்ததால் வெறுத்துப்போய்
நிறுவனத்தை விட்டு வெளியே வந்துள்ளார். ஆறு மாதம் இல்லை அதிகபட்சம் ஒரு வருடம் பயிற்சியாளராக இருக்கலாம், 10 வருடமா? இதெல்லாம் நியாயமா என்று கேட்க சட்டம் வேண்டுமல்லவா? சட்டமிருந்தாலே நாம் நீதிமன்றங்களை நாட மாட்டோம் , எதற்குப் பிரச்சினை என்று அப்படியே அமைதியாக இருப்போம். வழக்கு
நடத்த கூட இங்கு பொருளாதார பலம் வேண்டும், வழக்குரைஞர் பீஸ் கேட்கவில்லை என்றாலும் தினசரி வேலை செய்தால்தான் சம்பளம் என்னும் மக்களால் பெரிய நிறுவனங்களுக்கு எதிரான வழக்குக்களை எல்லாம் நடத்திவிட முடியுமா?
புதிய தொழிலாளர் சட்டம் என்ன சொல்கின்றன. மேலே சொன்ன விடயத்தை சட்டபூர்வமாகவே போராட முடியாத வண்ணம் சட்டங்கள் இயற்றப்படுகின்றன. தொழிலாளர்களை நிரந்தரமாக்காமல் பயிற்சியாளராகவோ இல்லை ஒப்பந்த ஊழியராகவே வைத்திருப்பதன் மூலம், வேலையை நிரந்தரத் தொழிலாளிக்கு சமமாக வாங்குவது ஊதியத்தை ஒப்பந்தத் தொழிலாளிக்கு கொடுப்பதைப் போல கொடுப்பது இதை புதிதாய் வந்த Labor Code செய்கிறது.
Fixed Term Employment அதாவது வேலைக்குச் சேரும் போது நீங்கள் மூன்று வருடமிருக்கலாம் இல்லை 10 வருடமிருக்கலாம் என்று சொல்லவிடுவார்கள், அதற்குப்பின் அந்த வேலை நிரந்தரமல்ல, ராணுவத்தில் அக்னி வீர் திட்டம் இப்படித்தான் செயல்படுகிறது. 30 வயதில் ஒரு நிறுவனத்தில் ஒருவர் வேலைக்குச் செல்கிறார் 10 வருடத்தில் அவருக்கு 40 வயதாகிவிடும், பின் அந்த நிறுவனத்திலிருந்து அவர் வெளியேற்றப்படுகிறார், வெளியில் வேலை இருக்குமா? இது பத்துவருடம் என்றில்லை மூன்று இரண்டு வருடமாகக் கூட இருக்கலாம்.
இது எவ்வளவு பெரிய மனச்சிதைவைக் கொடுக்கும், வேலை நிரந்தரமாக இருக்கும்போதே , வாழ்வு நிரந்தரமாக இருக்கும், இது gig economy அதாவது நமக்கு உதிரி மனப்பான்மையைக் கொடுக்கும். ஒரு இடத்தில் நிரந்தரமாக வேலை செய்யும்போதே organic ஆக நட்பு வட்டாரம் விரிவடையும், நம் பக்கத்தில் வேலை செய்யும் தோழனும் நாமும் நெருக்கமாவோம் , அங்கு சங்கம் வைத்திருந்தால் சங்கத்தில் சேருவோம். தொழிலாளருக்கு ஊதிய உயர்வென்றால் களத்தில் வந்து வேலை செய்வோம் . முதலாளித்துவம் இதை விரும்புவதில்லை வேலையே நிரந்தரமாக இல்லாதபோது சங்கம் எப்படி நிரந்தரமாக இருக்கும்.
இந்தத் திட்டம் நம்மை உதிரிகளாக மாற்றக்கூடிய திட்டமாகவே இருக்கிறது.
“தொழிலாளி ” என்ற வகைமாதிருக்குள் வந்தால் தானே தொழிலாளர் சட்டம் பொருந்தும். இந்த லேபர் கோட் 90 சதவிகித தொழிலாளிகளை தொழிலாளர் என்ற வகைமாதிருக்குள்ளிருந்து வெளியேற்றுகிறது. உதாரணமாக 100 பேர் இருக்கும் தொழிற்சாலைகளில் வருகைப்பதிவு மற்றும் கணக்குகள் எல்லாம் வைத்திருக்க வேண்டும். ஒரு தொழிலாளி தான் அதிகம் சுரண்டப்படுகிறோம் என்று சொன்னால் அதற்கு லேபர் கோர்ட் போனால் அவர் சுரண்டப்பட்டாரா இல்லையா என்பதைத் தெரிந்துகொள்ள அதற்கு ஆதாரங்கள் வேண்டுமல்லவா? அவருக்கு சம்பளம் ஒழுங்காக கொடுக்கப்படுகிறதா EPF, PF , ESI இதெல்லாம் ஒழுங்காகக் கொடுக்கப்படுகிறதா? என்பதற்குச் சான்றுகள் வேண்டும் தானே?
100 பேர் இருந்தால் கட்டாயம் சில விடயங்களை சில தரவுகளை வைத்திருக்கவேண்டும் என்ற சட்டம் இப்போதும் இருக்கிறது அதில் ஒரு சின்னத் திருத்தும் 100 என்பது 300 ஆக மாறிவிட்டது. 299 பேர் வேலை செய்தாலும் நீங்கள் எந்த விடயங்களையும் இந்தத் தரவுகளை எல்லாம் கட்டிக்காக்க அவசியமில்லை. அப்படியென்றால் என்ன அர்த்தம் இந்த 299 பேர் எப்படி வேண்டுமானாலும் சுரண்டப்படலாம் அவர்கள் சட்ட ரீதியாகக் கூட போராட முடியாது என்பதாக வருகிறது. கிட்டத்தட்ட 72 சதவிகித நிறுவனங்களில் வேலை செய்யும் தொழிலாளர்கள் இதைப் போன்ற நிறுவனங்களிலேயே வேலை செய்கிறார்கள் அவர்கள் எல்லாம் தொழிலாளியே இல்லை என்று சொல்வதைப்போல இந்தச் சட்டங்கள் இயற்றப்பட்டிருக்கிறது
மின்சக்தி மூலம் உற்பத்தி செய்கிற ஆலைகளில் 10 பேருக்கு கீழோ, மின்சக்தி இல்லாமல் உற்பத்தி செய்யும் ஆலைகளில் 20 பேருக்கு கீழோ இருந்தால் அந்தத் தொழிலாளர்கள் தொழிலாளாளர்கள் சட்ட வரம்பிற்குள் வர மாட்டார்கள். புதிதாக வந்த சட்ட திருத்தத்தில் 10 என்பது 20 ஆக மாறுகிறது , 20 என்பது 40 ஆக மாறுகிறது.
இந்தியா முழுவதும் இதைப்போன்ற சிறுசிறு நிறுவனங்களில் வேலை செய்யும் ஆட்கள் இப்போது தொழிலாளர்கள் வரம்பிற்குள் வரமாட்டார்கள். ஏற்கனவே இது அமலில் இருந்தாலும் எண்ணிக்கையைத் திருத்தும்போது, இன்னும் அதிகமான நிறுவனங்களில் “தொழிலாளர்களை ” உதிரியாக மாற்றுகிறது இந்தத் திருத்தும்.
அப்படியே இந்தத் திருத்தங்கள் எல்லாம் 90 சதவிகித தொழிலாளர்களை கொத்தடிமையாக்குகிறது. அங்கு வேலை நேரம் , நிரந்தரத் தன்மை, ஊதியம் எதையும் சட்டபூர்வமாகவேக் கேட்க முடியாது. சட்டபூர்வமாகவே அடிமையாக மாற்றுகிறது. ஒரு தொழிலாளி 18000 ஊதியத்துக்கு மேலே வாங்கினால் தொழிலாளி என்று வரையறைக்குள் வர மாட்டாராம், இன்றைய பொருளாதாரச் சூழலில் 18000 எல்லாம் வைத்துக்கொண்டு தமிழ்நாட்டில் எல்லாம் வாழமுடியாது, குறைந்தபட்சம் 25000 ஊதியமென்பது தமிழ்நாட்டில் சாதாரணமாகிவிட்டது என்னும்போது சட்டங்களை திருத்துவதன் மூலம் பெரும்பாலான ஆட்கள் தொழிலாளி என்ற வரையறைக்குள் வரப்போவதில்லை, பின் எப்படி சட்டரீதியாக போராட்டம் நடத்த முடியும்.
இந்த நிறுவனங்களில் layoff என்றால் கேட்க முடியுமா ? வரவேண்டிய பணம் வரவில்லை என்றால் கேட்க முடியுமா ? முடியாது சட்டரீதியாகவே அடிமைகளுக்கு சொல்லுங்க எஜமான் என்று சொல்லத்தான் உரிமை இருக்கிறதே தவிர போராட உரிமைகள் உண்டா. முன்பும் சுரண்டல் உண்டு தான் ஆனால் குறைந்தபட்சம் போராடக்கூடிய உரிமைகள் இருந்தது. சங்கம் வைக்க முடிந்தது, IT போன்ற துறைகளில் சங்களுக்குக் கூட வேலை இல்லை என்பது வேறு விடயம்.
இப்போது சங்கம் ஆரம்பிக்க வேண்டுமென்றால் 100 பேர் இருக்கவேண்டுமாமாம் அல்லது 10 சதவிகிதம் ஊழியர்கள் உங்களுக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டுமாம். இது ஒரு சங்கம் ஆரம்பிக்கும்போது எப்படிச் சாத்தியம்? இது சங்கத்தைத் தொடக்கத்திலேயே கிள்ளும் முயற்சி. மேலும் வேலை நிறுத்தம் செய்யவேண்டுமென்றால் இரண்டு மாதத்துக்கு முன்பே நோட்டீஸ் கொடுக்க வேண்டுமாம், அதன் பிறகு பேச்சு வார்த்தையின் போது வேலை நிறுத்தம் கூடாதாம், மொத்தத்தில் காக்கவைத்து போராட்டத்தை நீர்த்துப்போக செய்வதை சட்டங்கள் உறுதி செய்கின்றன.
ஒரு நாள் வேலை நிறுத்தமென்றால் எட்டு நாட்கள் ஊதியம் பிடிக்கப்படுமாம். சங்கம் வைக்கும் உரிமையை, சங்கமாய் சேரும் உரிமையை நீர்த்துபோகச்செய்கிறது. தொழிலாளிகளைத் தனித்தனியாகப் பிரிக்கிறது.
சங்கம் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் வருமென்பது போய், சங்கம் வைப்பதே பிரச்சினை என்பதை சாம்சங் தொழிலாளிகள் எதார்க்குபோராடினார்கள் சங்கம் வைக்கவே இங்கு போராடவேண்டியச் சூழல் உள்ளது.
தொழில்தகராறு சட்டத்தின்படி 100 பேருக்கு மேல் வேலை செய்யும் ஆலைகளில் பணிவிலக்கம் ஆலை மூடல் என்றால் மாநில அரசின் அனுமதி பெற வேண்டும். அதை 300 பேர் என்று இப்போது மாற்றிவிட்டார்கள்.
100 பேருக்கு மேல் வேலை நீக்கம் செய்யவேண்டுமென்றால் மாநில அரசின் அனுமதி வேண்டும், அது பின்பற்றப்படுகிறதா? 100 என்றாலும் 300 என்றாலும் பெருமுதலாளிகள் மதிக்கப்போவதில்லை.
TCS நிறுவனம் தெரிந்தே 12000 பேரை வேலையை விட்டு வெளியே அனுப்பியது. IT தொழிற்சங்கமான UNITE தோழர்களிடம் பேசினால் அகில இந்திய அளவில் ஒரு லட்சம் பேர் அனுப்பப்பட்டிருப்பார்கள் தோழர், அப்படிதான் தகவல்கள் வருகிறது என்கிறார்கள். பெரும்பாலும் நிறைய பேரை “paper” போடச்சொல்லி மிரட்டியிருக்கிறார்கள். அவர்களும் கொடுத்ததை வாங்கிக்கொண்டு ராஜினாமா செய்வதைப்போல ஆட்குறைப்பு நடக்கிறது. இது TCS என்றல்ல , உலகத்தில் google முதல் microsoft வரை இது தான் trend. Layoff
என்று அடித்துப்பாருங்கள் தினம் தினம் லட்சக்கணக்கான தொழிலாளிகள் கொத்துக்கொத்தாக வெளியேற்றப்படுகிறார்கள். முதலாளித்துவத்தின் சாதனை இதுதான்.
முதலாளிகள் சுமூகமாக வேலை செய்வதற்கும் சுரண்டலுக்கும் வழிவகுப்பதைப்போல சட்டங்கள் திருத்தப்படுகின்றன, சட்டங்கள் இருக்கிறது ஆனால் இவர்கள் தொழிலாளிகளே அல்ல என்று உருட்டுகிறார்கள். தொழிலாளி என்ற வர்க்கத்திலிருந்து வெளியேற்றி சட்டரீதியாகவே கொத்தடிமையாக மாற்றுகிறார்கள்.
Indian Labor Conference என்பது ஒன்றியத் தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்பு அமைச்சகத்தின் முத்தரப்பு ஆலோசனை குழுவாகும். ஒன்றிய மாநில தொழித்துறை அமைச்சர்கள் , முதலாளிகள் , தொழிலாளர் சங்கங்கள் இவர்களே முத்தரப்பு. அகில இந்திய அளவில் மாநாடுகள் நடத்துவார்கள் , அது தொழிலாளர் பாராளுமன்றம் என்று அழைக்கப்படும். தொழிலாளாளர்களுக்கான போடப்படும் சட்டங்கள் இங்கு விவாதிக்கப்படும், விவாதம் வரும். இப்போது லேபர் கோட் என்றால் அதை இந்த பாராளுமன்றம் அதாவது தொழிலாளர் பாராளுமன்றத்தில் விவாதித்து இருக்க வேண்டும். சுதந்திரம் பெற்ற இத்தனை ஆண்டுகளில் 47 முறை இது நடந்திருக்கிறது என்கிறார்கள்.
இந்தப் பாராளுமன்றத்தில் தொழிலாளர் பார்வையும் கணக்கில் எடுத்துக்கொள்ளப் படும். மன்மோகன் சிங் ஆட்சி காலகட்டத்தில் 10வருடத்தில் 7 முறை இந்த Indian labor conference நடந்திருக்கிறதாம், மோடி ஆட்சியில் ஒரே ஒரு முறை மட்டுமே இது நடந்திருக்கிறதாம். ஆம் தொழிலாளர்கள் சட்டம், தொழிலாளர்கள் அதன் பிரதிநிதிகள் வைத்துத்தானே இயற்றியிருக்க வேண்டும். இங்கு அப்படி நடப்பதில்லை, முதலாளிகளே தொழிலாளிகளுக்கு உண்டான சட்டத்தை இயற்றுகிறார்கள்.
அரசியலமைப்புச் சட்டத்தின் படியே சுரண்டலை அங்கீகரிக்கும் , கொத்தடிமைத்தனத்தை அங்கீகரிக்கும் சட்டமாகவே Labor Code உள்ளது. இது மிகுந்த ஆபத்தான சட்டமாக உள்ளது. நாட்டின் பெரும்பான்மை உழைக்கும் மக்களை கொத்தடிமையாக்கும் சட்டமாக உள்ளது. நம் பொதுச் சமூகமும் ஊடகமும் விஜய்க்கு செங்கோட்டையனுக்கு காட்டும் முக்கியத்துவத்தை ஒரு சதவிகிதமாவது இந்த labor code பற்றி பேச வேண்டும்.
நன்றி:தோழர் கார்த்திக் (White nights YouTube channel)
