
2019 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளில் மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தால் நான்கு புதிய தொழிலாளர் குறியீடுகள் நாடாளுமன்றத்தின் மூலம் இயற்றப்பட்டன.
சோவியத் ஒன்றியம் உருவாக்கபட்ட பிறகு அதாவது உலக வரலாற்றில் முதல்முறையாக புரட்சி மூலம் பாட்டாளி வர்க்கம் அதிகாரத்தை கைப்பற்றிய பிறகு ,அதுவரை உலகில் அடிமைப்பட்டுகிடந்த பாட்டாளி வர்க்திற்கு ரஷ்யா புரட்சி புத்துணர்ச்சி ஊட்டியது . அதன்பிறகுகான காலகட்டத்தில் உலகின் பல்வேறு நாடுகளில் தொழிலாளர் வர்க்கம் கிளர்ச்சியில் ஈடுபட்டது. இந்தியா தொழிலாளர் வர்க்கமும் அதனுடாக பல்வேறு வீரஞ்செறிந்த போராட்டங்களை ஆரம்பித்தது ரயில்வே, கப்பல் போக்குவரத்து தொழிலாளர்கள், பஞ்சாலை மில் தொழிலாளர்கள் போராட்டம் என பல உதாரணங்களை வரலாறு முழுவதும் பார்கலாம் அதன் காரணமாக இந்திய ஒன்றியம் பிரிட்டிஷ் காலானிய ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெறுவதற்கு முன்னரே இந்தியாவில் தொழிற்சங்க சட்டங்கள் கொண்டுவரப்பட்டன 1926.
இந்தியத் தொழிலாளி வர்க்கம் போராடிப் பெற்ற உரிமைகளைப் பறிக்கும் வகையில், நடைமுறையில் உள்ள 29 தொழிலாளர் நலச் சட்டங்களை வெட்டிச் சுருக்கி, தொழில்துறை உறவுகள் சட்டத்தொகுப்பு, பணியிடப் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் பணி நிலைமைகள் சட்டத்தொகுப்பு, சமூகப் பாதுகாப்புச் சட்டத்தொகுப்பு, ஊதியங்கள் சட்டத்தொகுப்பு என்ற 4 வகை தொழிலாளர் சட்டத்தொகுப்புகளாக மாற்றியுள்ளது. வெகு விரைவில் அமலுக்கு வரவுள்ள இந்தச் சட்டத்தொகுப்புகளை எதிர்த்து நாட்டின் பாட்டாளி வர்க்கம் மீண்டும் வீரம் செறிந்த போராட்டங்களை எதிர்கொள்ள உள்ளது.
நடைமுறையில் இருக்கும் சட்டங்களில் இருந்து இந்தப் புதிய சட்டத்தொகுப்புகள் எந்தெந்த வகைகளில் வேறுபடுகின்றன? அவை எவ்வாறு தொழிலாளர்களின் உரிமைகளைப் பறிக்கின்றன? என்பது பற்றிய சுருக்கமான விவரங்கள்:
*நாடு முழுவதும் உள்ள சுமார் 50 கோடி தொழிலாளர்கள் இந்தச் சட்டத்தொகுப்பிற்குள் வருவார்கள் என்று அரசு தெரிவிக்கிறது. ஆனால், பிரிவு 2(ZR)(iv)-இன் படி, 18,000 ரூபாய்க்கு அதிகமாக ஊதியம் பெற்று, மேற்பார்வையாளர் என்ற பெயரில் பணிபுரியும் எவரும் ‘தொழிலாளர்’ என்ற வரையறைக்குள் வர மாட்டார்கள் என்று தெரிவிக்கின்றது. எனில், பெரிய தொழில் நிறுவனங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் திறன்சாரா தொழிலாளர்கள் கூட இந்த வரையறைக்குள் பொருந்த மாட்டார்கள்.
*பிரிவு 2(O), காலமுறை வேலைவாய்ப்பு (Fixed Term Employment) முறையைச் சட்டப்பூர்வமாக்குகிறது. இதன்படி, நிறுவனங்கள் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டும் ஒப்பந்தம் போட்டு தொழிலாளர்களைப் பணிக்கு அமர்த்திக்கொண்டு, அந்தக் காலம் முடிந்த பிறகு அவர்களை வேலையில் இருந்து நீக்கிவிட முடியும். இதன் மூலம் படிப்படியாக நிரந்தரப் பணி என்ற ஒன்றையே இல்லாமல் செய்து, தொழிற்சங்கங்கள் அற்ற, அதிதீவிர சுரண்டல் முறையைத் தொழிலாளர்கள் மீது திணிப்பதே இதன் நோக்கமாக இருக்க முடியும்.
*பிரிவு X, 300 தொழிலாளர்களுக்கு மேல் பணிபுரியும் ஒரு நிறுவனம், தனது நிறுவனத்தை மூடுவதாகவோ, தொழிலாளர்களின் எண்ணிக்கையைப் பெரிய அளவில் குறைப்பதாகவோ முடிவு செய்தால், அரசிடம் முன் அனுமதி பெற வேண்டியது அவசியம் என்கிறது. மேலும், இந்த எண்ணிக்கையை 300-க்கு மேலாக உயர்த்த விரும்பினால், அந்தந்த மாநில அரசுகள் ஓர் அறிவிப்பை வெளியிட்டு உயர்த்திக்கொள்ளலாம் என்றும் சொல்கிறது.
தற்போது அமலில் இருக்கும் பழைய சட்டப்படி, இந்த எண்ணிக்கை 100 என்பதாக இருந்தது. இதன் மூலம், இனி 300 பேருக்குக் குறைவாகப் பணிபுரியும் எந்தவொரு நிறுவனமும் எப்போது வேண்டுமானாலும் அரசின் முன் அனுமதியின்றித் தனது நிறுவனத்தை மூடவோ, தொழிலாளர் குறைப்பை நிகழ்த்தவோ முடியும். நமது நாட்டில் உள்ள தொழில் நிறுவனங்களில் சுமார் 70 சதவீத நிறுவனங்கள் 300 பேருக்கும் குறைவான தொழிலாளர்களைக் கொண்டு செயல்படுகின்றன என்பதைத் தெரிந்துகொண்டால், இதன் பாதிப்பை அறிந்துகொள்ளலாம்.
மேலும் இதுபோன்ற நிறுவனங்கள் 299 தொழிலாளர்களை கொண்டு ஆலையை இயக்கவும் பெரும்பாலும் வாய்ப்பிருக்கிறது.
*தற்போது அமலில் இருக்கும் தொழில் தகராறு சட்டத்தின்படி செயல்படும் தொழிலாளர் ஆணையம், தொழிலாளர் நீதிமன்றங்கள் போன்ற, தொழிலாளர்களுக்குச் சட்டப் பாதுகாப்பை வழங்கும் அமைப்புகள் புதிய சட்டத்தொகுப்பில் நீக்கப்பட்டுள்ளன.
அதேபோல, தொழில் தகராறு சட்டப்படி, பொதுப் பயன்பாட்டுச் சேவைகளை வழங்கும் நிறுவனங்கள் மட்டுமே 14 நாட்களுக்கு முன்னர் வேலைநிறுத்த அறிவிப்பு வழங்கி, அதன்பிறகு வேலைநிறுத்தத்திற்குச் செல்ல வேண்டும் என்ற விதி உள்ளது. மற்ற நிறுவனங்களுக்கு அத்தகைய கட்டுப்பாடுகள் எதுவும் இல்லை. ஆனால், புதிய சட்டத்தொகுப்பின் பிரிவு 62(1)(b), அனைத்து விதமான நிறுவனங்களைச் சேர்ந்த தொழிலாளர்களும் இத்தகைய 14 நாள் காலக்கெடுவை வழங்க வேண்டும் என்று கட்டாயப்படுத்துகிறது.
கூடுதலாக, பிரிவு 62(1)(a), 60 நாட்களுக்கு முன்னரே வேலைநிறுத்த அறிவிப்பு கொடுக்கப்பட வேண்டும் என்று சொல்கிறது. இவ்வாறு ஒன்றுக்கொன்று முரணான இந்த இரண்டு பிரிவுகளையும், நிறுவனம் மற்றும் அரசு தங்களுக்குச் சாதகமாக மாற்றிக்கொண்டு, போராடும் தொழிலாளர்களைப் பழிவாங்கப் பயன்படுத்திக்கொள்ளும் வாய்ப்புகள் மிக அதிகமாகவே உள்ளன.
தொழில் தகராறு சட்டப்படி, தொழிலாளர் ஆணையம் தொழிற்சங்கத்தோடு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருக்கும் சமயத்தில், பொதுப் பயன்பாட்டுச் சேவைகளை வழங்கும் நிறுவனங்கள் வேலைநிறுத்தம் செய்வதற்கு அனுமதி இல்லை. ஆனால், இப்போதைய புதிய சட்டத்தொகுப்பின்படி, எந்தவொரு நிறுவனத்தைச் சேர்ந்த தொழிற்சங்கமும் பேச்சுவார்த்தை நடைபெற்றுக்கொண்டிருக்கும்போது வேலைநிறுத்தம் செய்ய இயலாது. மேலும், இந்தப் பேச்சுவார்த்தையானது, வேலைநிறுத்த அறிவிப்பு நாளுக்கு 2 நாட்கள் முன்னர் தொடங்கி 60 நாட்கள் வரை நீடிக்கலாம் என்றும் இந்தச் சட்டத்தொகுப்பு சொல்கிறது. இதனை நிர்வாகங்கள் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு, பேச்சுவார்த்தையை 60 நாட்கள் வரை இழுத்தடித்து, அதன் வீரியத்தைப் பெருமளவில் நீர்த்துப் போகச் செய்ய முடியும்.
இந்தக் கொடிய கட்டுப்பாடுகளை மீறி வேலைநிறுத்தம் மேற்கொள்பவர்கள் மீது அதிகபட்ச அபராதம், சிறைத் தண்டனை போன்ற கடுமையான தண்டனைகள் விதிக்கப்படும். அதேபோல, இத்தகைய வேலைநிறுத்தத்தைத் தூண்டியவர் அல்லது ஆதரவு கொடுத்தவர் என்று குற்றம் சாட்டப்படும் எவர் மீதும் இதே தண்டனைகளை விதிக்க முடியும் என்று சொல்கிறது இந்தப் புதிய சட்டத்தொகுப்பு.
ஒப்பந்தத் தொழிலாளர் சட்டத்தின்படி, 20 தொழிலாளர்களுக்கு மேல் பணியமர்த்தித் தொழில் நடத்தும் ஒப்பந்த நிறுவனம், அரசால் அங்கீகரிக்கப்பட்ட உரிமம் பெற்றிருக்க வேண்டும் என்ற விதிமுறை அமலில் இருந்து வருகிறது. ஆனால், புதிதாக வரவிருக்கும் தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதாரச் சட்டத்தொகுப்பின்படி, இந்த எண்ணிக்கை 50 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதன்மூலம், 50 பேருக்கும் குறைவான தொழிலாளர்களைக் கொண்ட ஒப்பந்த நிறுவனங்கள் உரிமம் எதையும் பெறத் தேவையில்லை. நாட்டில் உள்ள சுமார் 90 சதவீத நிறுவனங்கள் இந்த வரையறைக்குள் வந்துவிடுகிறது.
ஒப்பந்தத் தொழிலாளர்களின் பிரச்சினைகள் குறித்து முத்தரப்புப் பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வு காணும் மத்திய ஒப்பந்தத் தொழிலாளர் அமைப்பு, புதிய சட்டத்தொகுப்பில் நீக்கப்பட்டுள்ளது.
நாட்டின் மிகப்பெரிய மற்றும் மிக முக்கியமான முத்தரப்பு ஆலோசனை மன்றம் இந்திய தொழிலாளர் மாநாடு (ILC). 2015 வரை ஒவ்வொரு மாற்று ஆண்டிலும் ILC கூட்டப்பட்டது – பின்னர் அது முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. தொழிலாளர் குறியீடுகள் போன்ற முக்கியமான சட்டங்களை பற்றி விவாதிக்க அல்லது அங்கீகரிக்க 2015 முதல் ILC கூட்டப்படவில்லை என்பது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. மேலும், இந்த குறியீடுகள் பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் போதுமான அளவு விவாதிக்கப்படவில்லை. தொழிலாளர் குறியீடுகளுக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தை ஒன்றிணைக்கவும், இந்த விஷயத்தில் ILC ஐ கூட்டுமாறு அரசாங்கத்தை கட்டாயப்படுத்தவும் தொழிற்சங்கங்களும் தவறிவிட்டன.
500 தொழிலாளர்களுக்குக் குறைவாக உள்ள தொழிற்சாலைகளில் பாதுகாப்பு அதிகாரி நியமிக்கப்பட வேண்டிய அவசியம் இல்லை.
250 தொழிலாளர்களுக்குக் குறைவாக உள்ள தொழிற்சாலைகளில் சுகாதார அதிகாரி நியமிக்கப்பட வேண்டிய அவசியம் இல்லை.
100 தொழிலாளர்களுக்குக் குறைவாக உள்ள தொழிற்சாலைகளில் உணவக (Canteen) வசதி செய்யப்பட வேண்டிய அவசியம் இல்லை.
50 பெண் தொழிலாளர்களுக்குக் குறைவாக உள்ள தொழிற்சாலைகளில் குழந்தைகள் காப்பக (Crèche) வசதி செய்யப்பட வேண்டிய அவசியம் இல்லை.
50 தொழிலாளர்களுக்குக் குறைவாக உள்ள தொழிற்சாலைகளில் கழிவறை வசதி செய்யப்பட வேண்டிய அவசியம் இல்லை.
தற்போது நடைமுறையில் உள்ள 12 சதவீதமாக இருந்த வருங்கால வைப்பு நிதிப் பங்களிப்பை 10 சதவீதமாகக் குறைத்துள்ள புதிய தொழில் சட்டத்தொகுப்பு, பிரிவு 16(1)-இன் படி, தேவைக்கு ஏற்ப இதன் பங்கை மேலும் குறைத்துக்கொள்ள அனுமதி வழங்குகிறது

இதுபோன்ற மேலும் பல தொழிலாளர் நலன் சார்ந்த சட்டங்களை நீக்கி தொகுப்பு சட்டமாக மாற்றி தொழிலாளர் உரிமைகளை பறிக்கும் இந்த புதிய தொழிலாளர் சட்டங்கள் குறித்து எந்தவித பெரிய போராட்டங்களையும் நடத்தாமல் தொழிலாளர் வர்க்கம் அமைதிகாத்து வருகிறது. புதிய விவசாயா சட்டங்கள் வந்தபோது ஒட்டுமொத்த விவாசாய இயக்கங்களும் ஒருங்கிணைந்து போராடியதால் மத்திய அரசு பின்வாங்கி சட்டத்தை திரும்ப பெற்றுக்கொண்டது .தொழிலாளர் வர்க்கமும் இதுபோன்ற போராட்டத்தை நடத்தவேண்டிய தேவையிருந்தும் தொழிலாளர் அமைப்புகள் தேக்கமடைந்து உள்ளன.
ஆலை தொழிலாளர்களில் நிரந்தரமற்ற தொழிலாளர்கள் பெரும்பான்மையாக தொழிற்சங்க அமைப்புக்குள் வாராமல் இருகிறார்கள். நிரந்தர தொழிலாளர்கள் தங்களது பொருளாதார கோரிக்கைகளுக்கான போராட்டங்களுடன் நின்று விடுவது தங்களுக்கிடையேயான தொழிற்சங்கப் போட்டிகளில் கவனம் செலுத்துவது போன்ற தேக்க நிலைகள் தொழிலாளர் வர்க்கத்திடம் உள்ளது .அமைப்புசாரா தொழிலாளர்களின் நிலை இதுபோன்ற சட்ட வரம்புக்குள் வராமால் பெரும்பான்மையாக உள்ளனர் . தொழிலாளர் வர்க்கம் அடையாளப் போராட்டங்களுடன் நின்றுவிடாமல் ஒருங்கிணைந்த பெரும் அரசியல் போராட்டமாக வளர்த்தெடுக்க வேண்டிய கடமை நமக்கு உள்ளது.அகில இந்திய அளவில் ஜுலை 9 இல் நடக்கும் பொதுவேலைநிறுத்த போராட்டங்களில் சங்க வேற்றுமைகளை கடந்து தொழிலாளர்கள் கலந்துகொள்ள வேண்டும்.
-தோழர் ப.ஜவகர்
நன்றி:புதிய தொழிலாளர் சட்டம் தரவுகள் “மாற்று இணையதளம் ” தோழர் சிவசங்கர் கட்டுரை படிக்க..https://maattru.in/2025/06/new-labour-codes/