
ஆசிய ஆப்பிரிக்க லத்தீன் அமெரிக்கா போன்ற மூன்றாம் உலகம் என்று அழைக்கப்படும் நாடுகளில் ஆளும் வர்க்கத்தை தூக்கி எறிய அவர் உருவாக்கிய புதிய ஜனநாயகம் என்ற கோட்பாடு மார்க்சியத்திற்கு மிக முக்கியமான கொடை.
மார்க்சிய ஆசான்கள் மீது பலரும் கூறுகின்ற குற்றச்சாட்டு அவர்கள் அரசியலை மட்டுமே பேசினார்கள். கலை இலக்கியம் குறித்து பேசவில்லை என்பதே. ஆனால் தோழர் மாவோ ‘கலை இலக்கியம் இல்லாத மக்கள் படை மந்த புத்தி படை’ என்று சொன்னார். மேலும் அவர் எழுதிய கலை இலக்கியம் பற்றி என்ற நூல் மார்க்சிய எழுத்தாளர்களின் கையேடு என்று சொன்னால் மிகையில்லை.
‘பட்டைத் தீட்டப்படாத வைரங்கள் போல மக்களிடையே சுரங்க மலையாய் கலை இலக்கியம் கொட்டிக் கிடக்கிறது. அவர்களிடம் செல்லுங்கள். உங்களுக்கு அரிய நவரத்தினங்கள் கிட்டும்’ என்று கூறியவர் அவரே.
மாபெரும் வல்லரசாக தன்னை காட்டிக் கொள்ளும் அமெரிக்காவை ‘காகிதப் புலி’ என கேலி செய்தார். அமெரிக்கா உலகத்தை அச்சுறுத்த அணு ஆயுதங்கள் தயாரித்தது. ஜப்பான் மீது அதை பிரயோகித்து லட்சக்கணக்கான மக்களை கொன்று குவித்த நேரத்தில் செஞ்சீனம் அணுகுண்டு தயாரித்தது. அதை பலரும் விமர்சித்தனர்.
நாங்கள் எந்த நாட்டின் மீதும் முதலில் அணு ஆயுதங்கள் பிரயோகிக்க மாட்டோம். ஏகாதிபத்தியங்கள் குறிப்பாக அமெரிக்கா அணுகுண்டு வீசினால் என்ன நடக்கும் என்பதை உணர்த்தவே அணுகுண்டு தயாரித்தோம் என்று எச்சரித்தார்.
மாவோ மீது விமர்சனம் உண்டு. அதையும் மீறி கலாச்சார புரட்சியின் நாயகன் அவர். கட்சியில் சந்தர்ப்பவாதிகள் தலையெடுத்த சமயத்தில் ‘தரங்கெட்ட தலைமையகத்தை தகர்த்தெறியுங்கள்’ என்று அறைகூவல் விடுத்தார்.
அவரது நினைவு நாளான இன்று கம்யூனிஸ்ட் கட்சிகளில் உள்ள சந்தர்ப்பவாத குறுங்குழு வாதிகளை தகர்த்து பாட்டாளி வர்க்க கொள்கைகளை உயர்த்திப் பிடிப்போம்.
‘மக்களுக்காக வாழ்ந்து மடிவது மலையை விட கனமானது’ தோழர் மாவோ நினைவு நீடுழி வாழ்க.