கட்டுரையாளர்: செல்வ புவியரசன்
  
மும்பையிலிருந்து செயல்படும் அரசியல் பொருளாதாரத்துக்கான ஆராய்ச்சி அலகு (ஆர்.யூ.இ ) என்ற ஆய்வு மையத்தின் சமீபத்திய வெளியீடு அலைகள் வெளயீட்டகத்தால் தமிழில் மொழியாக்கம் கண்டுள்ளது இந்நூலில் இடம்பெற்றுள்ள பத்து கட்டுரைகளும் ‘ ஆஸ்பெக்ட்ஸ் ஆஃப் இந்தியன் எகானமி” இதழில் 2018 ல் வெளிவந்தவை . கட்டுரைகள் கள ஆய்வுகளில் சேகரிக்கப்பட்ட தகவல்களைக் கொண்டு எழுதப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

இக்கட்டுரைகளில்  சில மகராஷ்டிரத்திலும் ஒடிசாவிலும் உள்ள செங்கல் சூளைகளில் தொழிலாளர்கள் வெந்தணலில் வேகும்  நிலையை எடுத்துக்காட்டுகின்றன. கான்பூர் தோல்பொருள்   தொழிலாளர்களை பற்றியும் ,குர்காணிலும் பெங்களூருவிலும்  உள்ள ஆயுத்த ஆடைத்  தயாரிப்புத் தொழிலாளர்களின் நிலையையும்  புள்ளி விவரங்களுடன் சில கட்டுரைகள் பேசுகின்றன. முறைசாராத்  தொழிலாளர்களை ஒருங்கிணைப்பதை தொழிற்சங்களின் முன்னால் உள்ள சவால். அதற்கான சில முயற்சிகள் வெற்றி பெற்றுள்ள அனுபவத்தை சுதா பாரத்வாஜ்  எழுதிய இறுதி கட்டுரை பகிர்ந்து கொள்கிறது.
  புத்தகத்தின் தலைப்பாக அமைந்துள்ள அறிமுக கட்டுரை உழைக்கும் வர்க்கம் குறித்து மார்க்சிய பார்வையிலிருந்து தொடங்குகிறது. “மூலதனம் ‘ நூலின் சாராம்சத்தை அறிமுகப்படுத்துகிறது வெளி முகமை வேலைகளின் மூலமாக , மூன்றாம் உலக நாடுகளின் தொழிலாளர்கள் சொற்பக்  கூலியையும் அந்நாடுகளின்  முதலாளிகள் சிறு லாபத்தையும்  பெறும் நிலையில், ஏகாதிபத்திய நாடுகளின்  பெருவணிகர்கள் சில்லறை வணிகத்தில் வழியாக உபரி மதிப்பை களவாடும் தற்போதைய உலகமயமாக சூழலைப்  புரிந்து கொள்வதற்கு இந்த அறிமுகம் உதவுகிறது.
   இந்தியாவில் ஒரு சில துறைகள் நீங்கலாக, அனைத்துத் தொழில் துறைகளுமே தொழிலாளர்களின் சராசரி ஊதியம்   அடிப்படை தேவைகளுக்கான குறைந்தபட்ச ஊதியத்தைக்  காட்டிலும் குறைவாகவே  இருக்கிறது  என்பதை பொருளாதார ஆய்வறிக்கைகளை  ஒப்பிட்டு இக்கட்டுரை எடுத்துக்காட்டுகிறது.
  தற்காலிக வேலைகளின் காரணமாக, விவசாயிகள் தொழில்துறையினிடமிருந்து பயனடையவில்லை.  மாறாக தொழிலாளிகள் தங்களது குறைவான ஊதியத்தை , விவசாயத்தில் இருந்து கிடைக்கும் சிறு  சிறு  வருமானங்களிலிருந்து  ஈட்டிக் கொள்கிறார்கள். ஒட்டுமொத்த விவசாயத் துறைமே இவ்வாறு தொழில்துறையின் கூலி  குறைப்புக்கும் உபரி மதிப்பு உயர்வுக்கு உதவியாக இருக்கிறது என்ற மாற்றுப்  பார்வை ஒன்றையும் இந்த அறிமுக கட்டுரை அளிக்கிறது.
  கட்டுமானப்  பணிகளிலும் செங்கல் சூளைகளிலும் வேலை பார்க்கும் தொழிலாளர்கள் பெரிதும் பட்டியலின,  பழங்குடியினராகவே உள்ளனர் . அமைப்பு சார் தொழிலாளர்களிலும் ஒப்பந்தத் தொழிலாளர்களே  மிகுந்துள்ளனர் . உயர்ந்து வரும் கொந்தளிப்பு ஒரு கட்டத்தில் போராட்டமாக வெடிப்பதையும் அவ்வப்போது  பார்க்க முடிகிறது.  தொழிற்சங்கங்கள் விலகி நின்று வேடிக்கை பார்க்க இப்ப போராட்டங்கள் தன்னெழுச்சியாக நடந்து முடிகின்றன.
  இந்தியாவில் தொழிலாளர்கள் என்பவர்கள் பெரிதும்  ‘அரை விவசாயிகள்” . ஆனால் தொழிற்சங்கங்கள் துண்டு துண்டாக சிதறிக் கிடக்கும்  இந்தத் தற்காலிக தொழிலாளர்களுடன்  இதுவரை எவ்வித நெருக்கத்தையும் உருவாகிக் கொள்ள தவற விட்டனர். ஐரோப்பாவின் உழைக்கும் வர்க்கம் தான் உலக அளவில் சமூகப் புரட்சியை முன்னெடுக்கும் என்ற மார்க்சிய தீர்க்கதரிசனத்தை தவிடுபொடியாக்கிவிட்டு,  ஏகபோகத்தின்  சிறுசிறு  பலன்களை அனுபவிக்க அங்கிருக்கும் தொழிற்சங்கங்கள்  தலைப்பட்டன.  நூற்றாண்டு வரலாறு கொண்ட இந்தியத் தொழிற்சங்கங்கள் அந்த வாய்ப்பைக் கூட சாத்தியப்படுத்த வில்லை.
  இதுவரை நடைமுறையில் இருந்து வந்த தொழிலாளர்  நலச் சட்டங்களுக்கு பதிலாக,  தொழிலாளர் நலச் சட்ட தொகுப்புகள் நான்கும் விரைவில் நடைமுறைப்படுத்தபட இருக்கின்றன. அமைப்புசாராத் தொழிலாளர்களைச்  சமூக பாதுகாப்புத்  திட்டங்களுக்குள் கொண்டு வருவதாக சொல்லும் இச்சட்டத் தொகுப்புகள்,அமைப்புசார் தொழிலாளர்களின் எண்ணிக்கையை உயர்த்தப் போவதில்லை என்பது மட்டும் உறுதி. எனில், இனிவரும் காலத்தில் தொழிற்சங்க இயக்கம் யாரரையெல்லாம்  எதிரே நிறுத்தி உரையாடப்போகிறது எதற்காக போராட போகிறது ?  தொழிற்சங்க பலத்தின் மீது எழுந்து நிற்கும் இடதுசாரிக்  கட்சிகள் இன்னும் அதற்கான விவாதங்களைத் தொடங்கவில்லை . இந்நிலையில், சித்தாந்த ரீதியில் தொழிலாளர் பிரச்சினைகளின்  இன்றைய பரிமாணங்களைப்  புரிந்து கொள்ளவும் தொழிற்சங்கங்களின் திசைவழிகளைத்  தீர்மானிக்கவும் இந்த நூல் ஒரு துணை  நூலாகக் கொள்ளத்தக்கது.

இந்திய உழைக்கும் வர்க்கமும் அதன் எதிர்காலமும்  ( அரசியல் பொருளாதாரத்திற்கான ஆராய்ச்சி அலகு. தமிழில் :  வான்முகிலன்
அலைகள் வெளியீட்டகம், சென்னை
விலை : ரூ 300
9841775112)

Leave a Reply

Your email address will not be published.