அரசு என்பது எல்லோருக்கும் பொதுவானது; தொழிலாளர்கள், விவசாயிகள், வணிகர்கள், முதலாளிகள், அரசு ஊழியர்கள் இவர்கள் எல்லோருக்கும் மேலானது; அந்தந்த நாட்டின் அரசுகள் தான் எல்லாவற்றையும், எல்லோரையும் கட்டுப்படுத்தி எதுவும் வரம்பு மீறாமல் சமூகத்தை இயல்பு நிலையில் வழி நடத்துகின்றது; வெளியிலிருந்து வரும் பொருட்களையும், மூலதனத்தையும் நிர்வகித்துச் சொந்த நாட்டு இறையாண்மையைப் பேணுகிறது. இதற்காகவே இறக்குமதி, ஏற்றுமதித் தீர்வைகள் மூலம் உள்நாட்டு உற்பத்தி, வினியோகத்தில் சமன்பாட்டை உருவாக்குகிறது; நாடுகளுக்கிடையேயான உறவைப் பேணி ஒத்திசைவான சூழலை உருவாக்குகிறது; இயற்கை வளங்களையும், சுற்றுச்சூழலையும் நெறியாள்கை செய்து சமூகப் பாதுகாப்புக்கு அரணாக நிற்கிறது; அரசு நிர்வகிக்கும் அனைத்துத் துறைகளின் சொத்துக்களும் மக்கள் அனைவரின் உடைமை எனும் பொருளில் பொதுச் சொத்துக்கள் எனப்படுகிறது.மேற்குறிப்பிட்ட கருத்துக்கள் அனைத்தும் மக்களின் பொதுப்புத்தியில் உறைந்துபோன கருத்துக்கள். உண்மையில் அரசு இப்படித்தான் இருக்கிறதா? எல்லோருக்குமாகத் தான் அரசு இயங்குகிறதா? அரசின் நீதி, நிர்வாகத் துறைகள் சுயேச்சையான நிறுவனங்களா? பொதுச் சொத்துக்கள் உண்மையில் மக்கள் உடைமைகள் தானா?அரசு பொதுவானதென்றால் விஜய் மல்லையா, நீரவ் மோடி போன்ற பொருளாதார குற்றவாளிகள் வெளிநாடுகளுக்குத் தப்பிச் சென்றது எப்படி?

எளிய மக்களின் கல்வி, சிறுதொழில், விவசாயக் கடன்களை அடித்துப்பிடித்துத் தண்டல் செய்யும் சட்டங்கள் நீதிமன்றங்கள் இவர்கள் பக்கம் திரும்பவில்லையே ஏன்?

கொரோனா காலத்தில் புலம் பெயர் தொழிலாளர்கள் நாட்டின் குறுக்கும் நெடுக்குமாகப் பல்லாயிரம் மைல்களை நடந்தே கடந்ததையும், அவர்களில் பலர் பசி பட்டினியிலும், நோயிலும் இறந்ததையும் வேடிக்கை மட்டுமே பார்த்த அரசுகள், பொதுமுடக்கம் காரணமாகப் பெரும்தொழில்கள் பாதித்துவிடக்கூடாது என்று பரிதவித்துப் பல லட்சம் கோடிகளை பெருநிறுவனங்களுக்கு அதேகாலத்தில் வாரி வழங்கினவே ஏன்?மரம் நடச் சொல்வதும், விவசாயம்தான் நமக்கு உயிரென்று சொல்வதும் அரசுதான். ஆனாலும் சாலை அமைக்கிறேன் என்று சொல்லி உயிர் மரங்களை வெட்டி வீழ்த்தி விவசாய நிலங்களை அழித்து அதன் வழியே சாலை அமைப்பதும் அரசுகள் தானே? அப்படி அமைந்த நெடுஞ்சாலைகளில் சுங்கச்சாவடிகள் அமைத்து பயணிகளிடம் பல்லாண்டுகளாக கட்டணம் வசூலிக்கும் ஒப்பந்ததாரர்களின் வரவு செலவுக் கணக்கிற்கு ஏதேனும் வெளிப்படைத்தன்மையில் விளக்கம் உண்டா? நீதிமன்ற வழக்கில் செலவுக்கு மீறிய வரவு காரணமாக சுங்கச்சாவடிகளை ரத்து செய்யும் அதிரடித் தீர்ப்பிற்கு பிறகு அதை அனுமதித்தது யார்? அதற்கென்ன தண்டனை? ஏதேனும் விளக்கமுண்டா? மக்களுக்கு அரசுகள் செய்து தர வேண்டிய சாலை வசதியைத் தனியாருக்குத் தாரை வார்த்து மக்கள்மேல் சுமை ஏற்றுவது ஏன்? எந்த நீதி மன்றமாவது கேட்பதுண்டா?தற்போது நிலத்தடி நீரின் பயன்பாட்டிற்கும் கட்டண வசூலில் இறங்கியிருக்கும் அரசு மக்களுக்குச் செய்து தரவேண்டிய அடிப்படை வசதிகளிலிருந்து தன்னை விலக்கிக்கொள்வது ஏன்? நிலத்தடிநீரை அபரிமிதமாக உறிஞ்சும் பன்னாட்டு நிறுவனங்களை அனுமதித்து அவற்றுக்கு வரிச்சலுகைகளும், வசதிகளும் அரசு செய்வதன் காரணம் என்ன? காடுகளைக் காப்பாற்றுவதாகச் சொல்கிற அரசு இதுநாள்வரை அவற்றைக் காப்பாற்றி வந்த வனவாசிகளை அங்கிருந்து அப்புறப்படுத்தி விட்டு வனங்களையும் அவற்றின் விளைபொருட்கள், தாதுக்களை பேப்பர் ஆலை முதலாளிகளுக்கும் கார்ப்பரேட்களுக்கும் கையளிப்பது ஏன்?பின்தங்கிய நாடுகளில் பெரும் பெரும் ஆலைகளைத் துவங்கி இயற்கை வளங்களைச் சூறையாடும் பன்னாட்டு கார்ப்பரேட் கம்பெனிகளை அனுமதித்து வளர்ந்த நாடுகளின் நீர்வளத்தை பாதுகாக்கும் தேசபக்தியில்[!] திளைக்கின்றவைதானே இங்குள்ள அரசுகள்?

அதற்கான மறைநீர் முழுக்க அன்னியனுக்கு ஈகம் செய்துவிட்டு சொந்த நாட்டு மக்கள் குடிநீருக்கும் அலைந்து திரிந்து, அதற்கு விலை கொடுக்கும் அவலத்தை அரங்கேற்றியது யார்?இயற்கையின் கொடையாகக் கிடைத்திருக்கிற நாட்டின் சுரங்க வளங்களை, மலைகளைக் குளோபல் டெண்டரில் அடிமாட்டு விலைக்கு, ஆகக் குறைவான குத்தகைக்கு கொடுத்துக் கார்ப்பரேட்டுக்கள் கொள்ளை லாபம் அடிக்க அரசு அக்கறை கொள்வதன் காரணம் என்ன?கல்வி, சுகாதாரம் இவற்றை மக்கள் எல்லோருக்குக்குமான அடிப்படை உரிமை என்று பிரகடனப்படுத்தி விட்டு அவற்றை பெயரளவுக்கு தன் கைகளில் வைத்துக் கொண்டு பெரும்பங்கை தனியாரிடம் வியாபாரம் பண்ணிக்கொள்ள அனுமதித்து மக்களைக் கொள்ளையிட அரசு பார்த்துக் கொண்டிருப்பது ஏன்?பொதுச்சொத்துக்கள் தொழிலாளர் உழைப்பில் உருவான சமூக உடைமைகள். இவற்றை தனியாருக்குச் சலுகை விலையில் விற்கிற அரசுகள் மக்கள் கருத்தைக் கேட்டார்களா? படிப்பின் தேர்ச்சிக்கென்று ஒரு தேர்வும், வேலைக்கென்று தனித்தேர்வும் வைத்து கோடிக்கணக்கான இளைஞர்கள் வேலை வாய்ப்பின்றி விரக்தியில் ஆழ்த்துகிறதே அரசு, இது என்னவிதமான நியாயம்?அரசு பொதுவானதென்றால் பல தலைமுறைகளுக்கு சொத்துக்களைக் குவித்து வைத்திருக்கும் சிறுகூட்டத்தையும், ஒவ்வொருநாளும் ஒருவேளை உணவுக்குக்கூட வழியின்றித் தவிக்கும் கோடிக்கணக்கான பெருங்கூட்டத்தையும் வாளாயிருந்து வெறுமனே வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது எப்படி?அரசு பொதுவானதென்று எண்ணுகிற பொதுப்புத்தியினரில் அறிவார்ந்த ஒரு சிறு பிரிவினரின் சந்தேகங்களும், கேள்விகளும் தான் மேற்கண்டவை.

மக்களாட்சியின் மாண்பு, எல்லோரும் இந்நாட்டு மன்னர் என்று சொல்கிறார்களே, ஒரு மன்னர் செரிக்க முடியாத அளவுக்கு ஆடம்பரமான உணவு வகைகளைத் தின்னும்போது, இன்னொரு மன்னருக்கு பசியும், பட்டினியும்தான் வாழ்க்கையாயிருக்கிறதே ஏன்? பிச்சை எடுப்பவரும் மன்னர்; பிச்சை கொடுப்பவரும் மன்னரா? என்ன வேடிக்கை? வாழ்க்கையின் விசித்திரம் இல்லையா இது? உன் ஒரு வாக்குதான் உனது வாழ்க்கையைத் தீர்மானிக்கிறது என்றீர்களே, பின் ஏன் பல்லாயிரக்கணக்கானவர்களின் வாழ்க்கை துன்பகரமானதாக உள்ளது?வாங்கும் பொருட்கள் அனைத்துக்கும் வரிகள் என்று வைத்து எந்த பொருளையும் வாங்க முடியாத உச்சத்தில் வைத்திருக்கிறதே அதுவா எல்லோருக்குமான அரசு? ஒரே நாடு ஒரே ரேசன் என்று சொல்கிற அரசால் எல்லோரும் ஒரே நாடு எல்லோருக்கும் ஒரே வாழ்க்கை என்று ஏன் சொல்ல முடியவில்லை? எது தடுக்கிறது? மக்களவை, பேரவை என்று அனைத்தும் அன்னிய முதலீட்டுக்கு, அன்னிய பெருநிறுவனங்களுக்கு ஆதரவான சட்டங்களை இயற்றி மக்களிடம் கொள்ளையிடும் வரி வருவாயை அவற்றுக்கு வாரி வழங்குவது சரியா? இதை எந்த மக்கள் பிரதிநிதியாவது எதிர்த்துக் கேட்டதுண்டா? பிறகென்ன அவர் மக்களின் பிரதிநிதி?மக்களுக்குப் பணியாற்றாமல் மூலதனத்துக்குப் பணிந்து கிடப்பது ஏன்? அதற்கென்று மாத வருமானம், பல்வேறு வாழ்க்கை வசதிகள், சொகுசு பங்களாக்கள், வெளிநாட்டுப் பயணங்கள் இவையெல்லாம் மக்கள் வரிப் பணத்தில் அனுபவித்துக் கொண்டு மக்களைச் சுரண்டிக் கொழுப்பவர்களை மென்மேலும் வளர்த்து விடுவது ஏன்? எல்லா எம்.எல்.ஏ; எம்.பி.க்களும், உள்ளாட்சிப் பிரதிநிதிகளும் அரசியல் கட்சிகளுக்குக் கட்டுப்பட்டவர்கள்; அனைத்து அரசியல் கட்சிகளும் ஆளும் வர்க்கத்துக்குக் கட்டுப்பட்டவை. இதுதான் தேர்தல் ஜனநாயகத்தின் அப்பட்டமான உண்மை.உண்மையில் ஒரு நாட்டின் பொருளாதாரமே அரசை வழி நடத்துகிறது; அரசின் பின்னே ஒளிந்திருக்கிற ஆளும் வர்க்கமே அரசை நடத்துகிறது. மக்கள் இதைப் புரிந்துகொண்டு போராடும்போது இந்த உண்மை வெளிப்படுகிறது. மக்கள் வரிப்பணம் போதவில்லை; இயற்கை வளங்கள் விற்பனையும் ம்ஹூம். போதவில்லை. பொதுத்துறையைச் சூறையிட்டும் போதாமை, வங்கிகளின் மக்கள் சேமிப்பை தொழிற்கடன் எனும் பெயரில் ஏப்பம் விட்டும் பற்றாக்குறை, (வங்கிகளின் தொழிற் கடனை செயல்படாத சொத்து என்று சொத்தாக பாவித்து பின்னர் தள்ளுபடியும் செய்தாயிற்று), சிறுதொழில், குறுந்தொழில்களையும், சில்லறை விற்பனைகளையும் அவற்றோடு நடுத்தரவர்க்கத்தின் மேல்தட்டு மற்றும் சிறுவியாபாரிகளின் சொத்துக்களை மறைமுகமாக பறிமுதல் செய்தும் பசி தீரவில்லை. இன்னமும் ஆளும்வர்க்கத்தின் பகாசுரப் பசி தொடர்கிறது.இப்போது பசுத்தோல் விலகி புலி, தன்னைத்தானே அம்பலப்படுத்திக் கொண்டு விட்டது.

அரசு முழுக்க முழுக்க ஆளும் வர்க்கத்தின் கையாள் என்பதை மக்கள் புரிந்து கொண்டார்கள். வேசம் விலகி வேட்டைக்கு வந்து விட்ட புலியைக்கூட வெளிப்படையாக புலி என்று சொன்னால் அதன் பாசிசம் நம்மை வெருட்டுகிறது. மக்களாட்சி, ஜனநாயகம், அடிப்படை உரிமைகள், ஊடக சுதந்திரம் என்றெல்லாம் முழங்கிய அரசு இப்போது மக்களின் பேச்சு, எழுத்து, எதிர்ப்பு அனைத்தையும் முடக்கி துப்பாக்கி, சிறை, சட்டங்கள் என்று பாசிச முகத்தை காட்டுகிறது. பாராளுமன்றத்தில் அம்பலப்படுத்தும் சொற்களை அவைக் குறிப்பின் நீக்கம் செய்யப்பட்ட சொற்கள் (Unparlimentary Words) என்று அறிவிக்கிறது. இதுவும் அரசின் தனிப்பட்ட முகமல்ல; ஆளும் வர்க்கத்தின் முகம் தான்; முகமூடிதான் அரசுடையது.மத நிறுவனங்களும் வலதுசாரிகளும், அரசு மக்களுக்கானது; எல்லோருக்கும் பொதுவானது என்ற பிம்பத்தைக் கட்டமைத்துக் காப்பாற்றி வருகின்றனர். ஆளும் வர்க்கத்தை ஆதரித்து அதன் நிழலில் வாழ்ந்து அதில் பிழைப்பு நடத்துகிறவர்கள், அந்தக் கூடாரத்தில் இருந்து கொண்டே சிலர் முற்போக்கு பேச முற்படுவதும், முழக்கங்கள் எழுப்புவதும் உண்டு. ஆனால் அவர்களின் பேச்சு பேச்சாகத் தான் இருக்கும்.இடதுசாரிகள் என்று அறியப்பட்டோரும் ஜனநாயகம், பிரதிநிதித்துவ அரசியல், தேர்தல், பாராளுமன்றம் இவற்றால் மக்களுக்கு விடிவு கிடைக்கும் என்று அதில் ஈடுபட்டு அரசுக்கு எதிரான வெற்று அடையாளப் போராட்டங்களால், பெயரில் மட்டும் இடதுசாரிகளாகி மக்களைக் குழப்பத்தில் ஆழ்த்தி வருகின்றனர். ஆளும் வர்க்கத்துக்கு எதிரான போராட்டங்கள் என்று சொன்னால் அது மூலதனத்துக்கு எதிரான போராட்டமாகி தங்கள் இருப்புக்கே ஆபத்தாகி விடும் என்பதால் இன்னமும் அவர்கள் அரசிடம் (ஆளும் வர்க்கத்திடம்) கோரிக்கைப் போராட்டத்தை நடத்தி ஜனநாயகத்தை காப்பாற்றும் வேலையை கண்ணும் கருத்துமாக செய்து கொண்டிருக்கிறார்கள். பண்பியல் ரீதியில், முரண்பாட்டுத் தளத்தில் ஆளும் வர்க்கத்தின் எதிர்முனை செயற்பாட்டாளர்களாகத் தன்னை முன்னிறுத்திக் கொண்டிருக்க வேண்டிய இவர்கள் வர்க்கப் பார்வை இல்லாமல் போனதால் புரட்சிகரக் கொள்கையிலிருந்து பின்வாங்கிப் போலியாக மாறி மற்ற முதலாளித்துவக் கட்சிகளின் போட்டியாளர்களாக அவதாரம் எடுத்துவிட்டனர்.ஆளும் வர்க்கத்தின் கருவிகளான முதலாளித்துவக் கட்சிகளே ஜனநாயகத்தைக் குப்பைக் கூடைக்குள் கொட்டிவிட்ட பிறகு அதைக் காப்பாற்றி இவர்கள் என்ன செய்யப் போகிறார்கள்? இதனால் ஆளும் வர்க்கத்துக்குள் இவர்களும் அணி சேர்ந்துக் கொண்டதை அறிவித்துக் கொண்டார்கள். அதை மக்களும் புரிந்துக் கொண்டதால் தான் மக்கள் போராட்டங்கள் இவர்களைத் தள்ளி வைத்து விட்டு தன்னெழுச்சிப் போராட்டங்களாக உருக்கொண்டு விட்டன.மேற்குலகம் உட்பட அனைத்து அரசுகளும் தடுமாறிக் கொண்டிருக்கின்றன. மக்களின் மீது வரிமேல் வரிபோடுவதும், நிர்வாகத்தை மையப்படுத்துவதும், ஊதியக் குறைப்பு, பணி நேர நீட்டிப்பு, வீட்டிலிருந்து பணி, பென்சன் ரத்து, என்று பொறுப்புக்களைத் துறந்தோடுவதுமாகத் தள்ளாடுகிறது அரசு. சுகாதாரம், கல்வி, மருத்துவம் அனைத்தும் அரசிடமிருந்து விலக்கி வைக்கும் நாள் விரைந்து கொண்டிருக்கிறது.

ஆளும் வர்க்கத்தின் தொழிற்சாலைகளையும் நில உடைமைகளையும் காப்பாற்றும் இராணுவத்தினருக்குக் கூட கண்ணியமான வாழ்க்கையையையும் ஒய்வூதியத்தையும் வழங்கும் பொறுப்பைத் தட்டிக் கழித்து விட்டு, அவர்களை ஒப்பந்தக் கூலிகளாக மாற்றி வருகிறது; ஆணையிடும் அதிகாரிகளுக்கு மட்டும் சுகபோக வாழ்க்கையை உறுதிப்படுத்தி வருகிறது.முதலாளிய வர்க்கத்தைத் தவிர தொழிலாளர்கள், விவசாயிகள், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், வழக்குரைஞர்கள், தலித்துகள், மீனவர்கள், பழங்குடிகள் என அனைத்து மக்களையும் இந்த அரசு அடக்கியும் ஒடுக்கியும் வருவதைத் தங்கள் அன்றாட வாழ்வில் மக்கள் கூர்ந்து கவனித்துப் புரிந்து கொண்டு வருகின்றனர். இந்த அரசின் பிம்பம் இன்று உடைபட்டு வருகின்றது. அரசு என்பது அனைவருக்கும் பொதுவானது என்ற பிம்பம் இன்று மக்கள் மத்தியில் உடைபட்டு வருகின்றது. மக்கள் தங்களுடைய வாழ்வுக்கான போராட்டங்கள் மூலமும் அனுபவங்கள் மூலமும் இந்த அரசு அனைவருக்கும் பொதுவானதல்ல என்பதையும், சுரண்டல் பேர் வழிகளுக்கும், ஒடுக்குபவர்களுக்குமான அரசு இது என்பதையும் புரிந்து வருகின்றனர்.ஆளும் வர்க்கத்தின் அரசைப் பற்றிய இந்த பிம்பம் மக்கள் மத்தியில் முழுவதுமாக உடைபடும் போது, பாட்டாளி வர்க்கம் அவர்களுக்கு தலைமைத் தாங்கி வழிநடத்தும் பொழுது சுரண்டல் வர்க்கத்தினரையும், ஒடுக்குமுறையாளர்களையும் வீழ்த்தி உழைக்கும் மக்களின் அரசைப் படைப்பார்கள். தொழிற்சாலைகளும் நிலமும் சமூகத்திற்குச் சொந்தமாக்கப்படும். நாட்டின் அனைத்து வளங்களும் மக்களுக்குச் சொந்தமாக்கப்படும். சோசலிச சமூகம் படைக்கப்படும். அது அரசே இல்லாத, வர்க்கங்களற்ற சமத்துவ சமூகமான கம்யூனிச சமூகத்திற்கு இட்டுச் செல்லும்.

-பாவெல் சூரியன்(சோசலிசத் தொழிலாளர் இயக்கத்தின் இதழ் “செந்தழல்” மின் இதழில் வந்த கட்டுரை)

Leave a Reply

Your email address will not be published.