போராட்டத்தில் கைது செய்யப்பட்ட பாக்ஸ்கான் தொழிலாளர்கள் விடுவிக்கப்பட்டனர் வழக்குகள் எதுவும் திரும்பபெறப்படவில்லை முழு விபரங்கள் நேற்றைய நிலவரம்:

பாக்ஸ்கான் பெண் தொழிலாளர்கள் 67 பேர் மற்றும் தன்னார்வலர் தோழர் வைஷ்ணவி விடுதலைக்கு, கம்யூனிஸ்ட் கட்சி-(CP), இடது தொழிற்சங்க மய்யம்-(LTUC), ஜனநாயக வழக்கறிஞர்கள் சங்கம்-(DAA) தோழர்களின் கடுமையான முயற்சி!
++++++++++++++++++++++++++++

நேற்று 19/12/2021 காலை 10 மணிக்கு திருப்பெரும்புதூரில் ஒருமைப்பாடு மன்றத்தால் திட்டமிடப்பட்டிருந்த ‘படிப்பு வட்டம்’ நிகழ்ச்சிக்கு அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகள், தொழிலாளர்கள் கூடியிருந்த நிலையில், நஞ்சேரிய உணவு உட்கொண்டு பாதிக்கப்பட்ட பெண் தொழிலாளர்களுக்கு, நீதி கேட்டுப் போராடிய 67 பெண் தொழிலாளர்கள் மற்றும் தன்னார்வலர் வைஷ்ணவி 18/12/2021 அன்று மாலை கைது செய்யப்பட்டு, வல்லக்கோட்டை ஆர்.எம்.மஹாலில் சட்டத்துக்கு புறம்பாக இரவு முழுவதும் அடைத்து வைக்கப்பட்டு விடுவிக்க படாததால், படிப்பு வட்டம் கூட்டத்தை வேறோரு நாளுக்கு தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்துவிட்டு, பாக்ஸ்கான் பெண் தொழிலாளர்களின் விடுதலைக்கான நடவடிக்கையில் ஈடுபடுவது என கூட்டத்தில் முடிவெடுத்து கம்யூனிஸ்ட் கட்சி-(CP), இடது தொழிற்சங்க மய்யம்-(LTUC), ஜனநாயக வழக்கறிஞர்கள் சங்கம்-(DAA) தோழர்கள் செயல்பட்டனர்.

கம்யூனிஸ்ட் கட்சி ஆலோசனை குழு தலைவர் தோழர் எஸ்.குமாரசாமி, இடது தொழிற்சங்க மய்யத்தின் மாநிலத் தலைவர் தோழர் எஸ்.குமார், சிறப்பு தலைவர் தோழர் புவனேஸ்வரி, ஜனநாயக வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் தோழர் கு.பாரதி, பொதுச் செயலாளர் தோழர் சுரேஷ், இடது தொழிற்சங்க மய்யத்தின் மாநில நிர்வாகிகள் மற்றும் பல்வேறு தொழிற்சாலை தொழிற்சங்க நிர்வாகிகள், தொழிலாளர்கள் வல்லக்கோட்டை சென்றனர்.

காவல் துறை கட்டுப்பாட்டிலுள்ள பாக்ஸ்கான் நிறுவன பெண் தொழிலாளர்களை சந்திக்க தலைவர்களுக்கு, வழக்கறிஞர்களுக்கு காவல்துறையினரால் அனுமதி மறுக்கப்பட்டது.

சிறிது நேரத்திற்குப் பின் அங்கு வந்த காவல்துறை டிஜிபி அவர்களை நேரில் சந்தித்து, தோழர் குமாரசாமி மற்றும் தோழர்கள் பாரதி, சுரேஷ், ராஜகுரு ஆகியோர் பெண் தொழிலாளர்களை விடுதலை செய்யுமாறு கேட்டுக்கொண்டனர்.

பெண் தொழிலாளர்கள் மற்றும் தோழர் வைஷ்ணவி மீது 143, 353, 270 IPC.r/w 51(J) DM Act ஆகிய சட்டப் பிரிவுகளில் ஒரக்கடம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, நீண்ட நேரத்திற்குப் பின் மாலை 5 மணிக்கு பகுதி, பகுதியாக தொழிலாளர்கள் விடுவிக்கப்பட்டு, அவர்கள் தங்கியிருந்த விடுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

ஆனால் தன்னார்வலர் தோழர் வைஷ்ணவி அவர்களை மட்டும் விடுதலை செய்யாமல் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி ரிமாண்ட் செய்ய வலியுறுத்தப்போவதாக காவல்துறையினர் கூறியதை தொடர்ந்து, கம்யூனிஸ்ட் கட்சியின் ஆலோசனை குழு தலைவர் தோழர் எஸ்.குமாரசாமி அவர்களின் ஆலோசனைப்படி, ஜனநாயக வழக்கறிஞர்கள் சங்கத்தைச் சார்ந்த தோழர்கள் பாரதி, சுரேஷ், மோகன்ராஜ், புவனேஸ்வரி, சீதா, தினகரன் ஆகியோர் நீதிபதி முன்பு இடைக்கால மனு தாக்கல் செய்ய தயாரான பின்னணியில் காவல் நிலைய பிணையில் விடுவிப்பதாக காவல்துறையினர் கூறினர்.

தோழர் பாரதி பிணை மனுவை தாக்கல் செய்தார். தோழர் வைஷ்ணவி இரவு சுமார் எட்டு மணிக்கு ஒரகடம் காவல்துறையினரால் விடுவிக்கப்பட்டார்.

  • கம்யூனிஸ்ட் கட்சி(CP)
  • இடது தொழிற்சங்க மய்யம்(LTUC)
  • ஜனநாயக வழக்கறிஞர்கள் சங்கம்(DAA)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *