மாருதி வழக்கில் கைதாகி சிறையிலடைக்கப்பட்ட 13 தொழிலாளர்களில் ஒருவரான தோழர் ராம்பிலாஸ் அவர்களுக்கு ஜாமின் வழங்கப்பட்டுள்ளது. சுமார் 9 வருடங்கள் சிறையில் இருந்த பின்னர் நவம்பர் 24 அன்று சன்டீகர் உயர்நீதி மன்றம் ராம்பிலாஸிற்கு ஜாமின் வழங்கியது.

2012 ஆம் ஆண்டில் மாருதி ஆலையில் நிரந்தரத் தொழிலாளர்கள் மற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்களை ஒருங்கிணைத்து மாருதி தொழிற்சங்கம் எழுச்சிமிக்க போராட்டம் ஒன்றை நடத்தி வந்தது. நிர்வாகத்திற்கும் தொழிலாளர்களுக்கும் இடையே நடந்த ஒரு கலவரத்தில் மனிதவள மேலாளர் ஒருவர் இறந்ததை அடுத்து 148 தொழிலாளர்கள் மீது கொலை வழக்கு சுமத்தி ஹரியானா மாநில அரசு அவர்களை கைது செய்து சிறையில் அடைத்ததது. 2017ல் குர்காவ் செஷன்ஸ் நீதிமன்றம் 118 தொழிலாளர்களை விடுவித்தது, ஆனால் 13 தொழிலாளர்கள் குறிப்பாக தொழிற்சங்கத் தலைவர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்தது.

இதை எதிர்த்து உச்சநீதி மன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. வழக்கு நிலுவையில் உள்ள தருணத்தில் 13 தொழிலாளர்களுக்கு ஜாமின் கொடுக்க வேண்டும் என்று உயர்நீதி மன்றத்திலும் உச்சநீதி மன்றத்திலும் வழக்குகள் தொடரப்பட்டு வந்தன. ஆனால் பலகட்டங்களில் உயர்நீதி மன்றமும் சரி. உச்சநீதி மன்றமும் சரி, தொழிலாளர்களுக்கு ஜாமின் கொடுக்கவில்லை.

மாருதி தொழிற்சங்கம் நிதி திரட்டி சிறையில் வாடிய தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு உதவி செய்து வருகிறது. கோவிட் காலகட்டத்தில் இந்த தொழிலாளர்கள் பரோலில் வெளியே வந்து தங்கள் குடும்பங்களுடன் தங்கியிருந்தனர். அந்த சமயத்தில் இரு தொழிலாளர்கள் பவன் தாலியா மற்றும் ஜியா லால் இறந்து விட்டனர். மற்ற தொழிலாளர்கள் சிறைக்கு திரும்பினர்.

இந்நிலையில் சிறையில் உள்ள தொழிலாளர்களுக்கு ஜாமின் கொடுக்க வேண்டும் என்று போடப்பட்ட புது வழக்கில் ராம்பிலாஸிற்கு ஜாமின் வழங்க உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. மற்ற தொழிலாளர்களின் ஜாமின் குறித்த வழக்கு விசாரணை இன்னும் நடைபெறவில்லை, ஆனாலும் ராம்பிலாஸின் ஜாமின் வெற்றி தொழிலாளர்கள் மத்தியில் ஒரு உத்வேகத்தை அளித்துள்ளது.

News Source : Ground Xero

நன்றி : தொழிலாளர் கூடம்

Leave a Reply

Your email address will not be published.