தொடர்ச்சியாக முடக்கப்படும்
டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்புகள்

டாக்டர் அம்பேத்கரின் எழுத்துகள் மற்றும் நல்ல உரைகள் அடங்கிய நூல் தொகுப்புகளை வெளியிடாமல் நிறுத்தி வைத்திருக்கும் மகாராட்டிர அரசின் முடிவை விசாரிக்க, மும்பை உயர் நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்கை எடுத்துக் கொண்டுள்ளது.

டாக்டர் அம்பேத்கர் நூல்கள் வெளியிடப்படாமல் நீண்ட நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருப்பது தொடர்பாக ஒரு செய்திக் கட்டுரையை மராத்திய நாளேடான ‘லோக் சத்தா’ 24.11. 2001 அன்று வெளியிட்டது. அதில் பின்வரும் தகவல்களைப் பதிவிட்டிருந்தது:

“டாக்டர் அம்பேத்கருடைய நூல் தொகுப்புகள் ஒன்பது லட்சம் பிரதிகள் வெளியிடப்பட வேண்டும் என்று அரசு ஆணையிட்டு இருந்தது.
இந்நூல்களை அச்சிட, ரூபாய் 5 கோடியே 45 லட்சத்திற்கு காகிதம் வாங்கப்பட்டன.

“ஆனால் கடந்த நான்கு ஆண்டுகளில் 33 ஆயிரம் பிரதிகள் மட்டுமே அச்சிடப்பட்டன. எஞ்சியிருக்கும் தாள்கள் கிடங்கிலேயே முடங்கிப் போயுள்ளன.

“33 ஆயிரம் பிரதிகளுக்கு பதில் 3,675 பிரதிகளே அச்சிடப்பட்டுள்ளன. இதற்கு நவீன அச்சு எந்திரம் இல்லை என்று மராட்டிய அரசால் காரணம் சொல்லப்பட்டது.”

இந்நாளேட்டின் செய்தியை, நீதிபதிகள் பி.பி. வரலே மற்றும் எஸ். எம். மோடக் ஆகியோர் அடங்கிய மும்பை உயர் நீதிமன்ற அமர்வு, 2.12.2021 அன்று விசாரணைக்கு எடுத்துக் கொண்டு —

“டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்புகள் இன்றைய தலைமுறைக்கு மட்டுமல்ல; எதிர்காலத் தலைமுறைக்கும் மிகவும் தேவையானதும் இன்றியமையாததுமாகும். மேலும் இந்நூல்கள் சட்ட வல்லுநர்களுக்கு மட்டுமல்ல, பொதுவாக அனைவருக்கும் பயன்படக்கூடியவை.

“அரசு 1 முதல் 21 தொகுப்புகளை இதுவரை வெளியிட்டுள்ளது; இதற்கான தேவை அதிக அளவில் இருப்பதால் அது மீண்டும் மீண்டும் மறு வெளியீடு செய்யப்பட வேண்டும். எனவே இதைப் பொதுநல வழக்காக எடுத்துக் கொண்டு, தலைமை நீதிபதி தீபங்கர் தத்தா அவர்கள் முன்னிலையில் விசாரிக்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது.”

— தலித் முரசு
02.12.2021

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *