நீண்ட நாட்களுக்கு முன்பே இந்த இணையத்தளம் துவங்கப்பட்டிருந்தாலும் சில நடைமுறை சிக்கல்கள் காரணமாக செயல்பட முடியாமல் இருந்தது. கடந்த ஒரு மாத காலமாக தொடர்ச்சியான கட்டுரைகளை "தொழிலாளரில்" வெளியிட்டு வருகிறோம். அந்த வகையில் தொழிலாளர் தளத்தின் நோக்கங்களை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறோம். நாம் தொடர்ச்சியாக பல்வேறு சமூக சிக்கல்களை சந்தித்து வருகிறோம். தொழிலாளர்கள் ஆகிய நாம் நமது சம்பள உயர்வு மற்றும் வேலை நிலைமைகள் குறித்து போராடி வருகிறோம். பல்வேறு தொழிற்சாலைகளில் போராட்டங்கள் நடந்தாலும் சில போராட்டங்கள் மட்டுமே வெற்றியடைகிறது. பல போராட்டங்கள் தோல்வியை சந்திகிறது அல்லது முடிவே கிடைக்காமல் இருக்கிறது. ஒன்றிய அரசின் தொழிலாளர் நலச் சட்டங்கள் அனைத்தும் திருத்தப்பட்ட நிலையில், கடந்த காலத்தில் தொழிலாளர் வர்க்கம் போராடி பெற்றுகொடுத்த பல்வேறு உரிமைகள் பறிக்கப்பட்டு மீண்டும் ஒரு அசாதாரண வேலை நிலைமைக்கு தள்ளப்பட்டுக் கொண்டிருகிறோம். பல பன்னாட்டு நிறுவனங்கள் தங்களது லாபங்களை சுருட்டிகொண்டு தொழிலாளர்களை சுரண்டி கொழுத்துவிட்டு, நாட்டைவிட்டு வெளியேறுகின்றன. ஆனால், அவர்களை கட்டுப்படுத்தும் எந்த ஆற்றலும் இன்று நம்மிடம் இல்லை. அரசு அவர்களுக்குத்தான் ஆதரவாக செயல்படுகிறதே தவிர, தொழிலாளர்கள் நலனை முன்னிறுத்தி செயற்படுவதில்லை.
நமக்கு பிரச்சினை ஏற்படும்போது பார்த்துக்கொள்ளலாம் என நினைப்பது கண் கெட்ட பிறகு சூரியனை வணங்குவது போல ஆகி விடலாம், எனவே இருக்கின்ற சூழ்நிலைகளை புரிந்து கொள்ளவும் கடந்த கால தொழிலாளர் வர்க்கங்களின் படிப்பினைகளை தெரிந்து கொள்வதும், பன்னாட்டு நிறுவனங்களின் பொருளாதார நிலைமைகளை அறிவதும் , அரசு ஏன் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக செயல்படுகிறது அவர்களுக்கு சாதகமாக சட்டங்களை கொண்டு வருகிறது என்பதையும் அறிந்து கொள்ள வேண்டும். மேலும் நிகழ்கால சூழ்நிலையில் நம்மை சுற்றி நடக்கும் சமூக பிரச்சினைகள் குறித்து, நமது பார்வையை விரிவாக்கி கொள்வது நமது கடமையாகும். மேற்சொன்ன காரணங்களின் அடிப்படையில் நமது தொழிலாளர் அரசியல் இணைய இதழாக தொடர்ச்சியாக இயங்கும். இது தொழிலாளர்களால் தொழிலாளர்களுக்காக நடத்தப்படும் தளம் என்பதால் தொழிலாளர்கள் தங்களது படைப்புகள், சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள் என எதுவாக இருந்தாலும் அனுப்பலாம். “தொழிலாளரில்” வரும் பதிவுகள் குறித்து தங்களது கருத்துகள் , விமர்சனங்கள் , கேள்விகளை தவறாமல் அனுப்புங்கள். ஒவ்வொரு மாதமும் நமது “தொழிலாளரின்” செயல்பாடுகள் குறித்து உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம் ! நன்றி !
இப்படிக்கு
ஆசிரியர் குழு
தொழிலாளர்- இணையத்தளம்.
தொடர்புக்கு : thozhilalar2019@gmail.com
நல்லது