கர்நாடகத்தில் ஒரு பிராமண குடும்பத்தில் 1906ல் பிறந்தவர். ஒன்றுபட்ட கம்யூனிஸ்டு கட்சி தஞ்சை மாவட்டத்தில் வளர்ந்து வந்த நேரம். கட்சி தலைமை அவரை தஞ்சை கூலி விவசாயிகள் மத்தியில் பணியாற்றச் சொன்னதன் காரணமாக தமிழ் கற்றுக் கொண்டார்.

அவர் தலைமையில் நடந்த மக்கள் போராட்டங்கள் எண்ணற்றவை. ‘அடித்தால் திருப்பி அடி’ என்று கூலி விவசாயிகளுக்கு உத்வேகம் ஊட்டினார். சவுக்கடியும் சாணிப்பால் சித்ரவதைகளையும் அனுபவித்தவர்கள் தலை நிமிர்ந்தார்கள்.

தஞ்சை சிவந்தது. கிராமங்கள் தோறும் செங்கொடி ஏற்றப்பட்டது. ஆளும் வர்க்கங்கள் கொடூர அடக்குமுறையை ஏவியது. அஞ்சாத மக்கள் தங்கள் தலைவரின் தலைமையில் போராட்டக் களத்தில் தடியடி துப்பாக்கிச் சூடு என அனைத்தையும் சந்தித்தார்கள்.

தோழர் சீனிவாசராவ் தலைமையில் விவசாயக் கூலி தொழிலாளர்கள் ஒரு பேச்சுவார்த்தையில் கலந்துக் கொண்டனர்.

கீழத் தஞ்சையில், அந்த பேச்சுவார்த்தையில் நடந்த ஒரு சம்பவம் அழியாத வரலாறானது.
கூலி உயர்வு தொடர்பான அந்த பேச்சுவார்த்தையில் பண்ணைகளுக்கு வெளிப்படையாகவே ஆதரவு தருவது போல, அன்றைய காங்கிரஸ் அமைச்சர் பாஷ்யம் கலந்துக் கொண்டார்.

நூற்றுக்கணக்கான ஆயுதப்படை போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். நீண்ட நேரம் பேச்சுவார்த்தை நடந்தது. ஆனால், பண்ணைகள் தரப்பில் தருவதாகச் சொன்ன கூலிக்கு தோழர் சீனிவாசராவ் தலைமையிலான விவசாயத் தொழிலாளர்கள் சம்மதிக்கவில்லை.

உடனே, அமைச்சர் வாய்விட்டு மிரட்ட ஆரம்பித்து விட்டார் ‘மிஸ்டர் சீனிவாசராவ், நீங்கள் பண்ணைகள் கொடுக்கும் கூலிக்கு ஒப்புக் கொள்ளாவிட்டால், வீட்டுக்கு போக முடியாது. சிறைக்குத்தான் போக வேண்டியிருக்கும்’ என்று. அவர் போலீஸ் பட்டாளத்தை மனதில் வைத்து தான் அப்படி சொன்னார்.

உடனே, தோழர் சீனிவாசராவ் சிரித்தபடி சொன்னார் ‘எங்களது கோரிக்கையை நீங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்றால்
இந்த இடத்தை விட்டே நகர முடியாது’ என்று. அதைக் கேட்டு போலீஸை விட பலமடங்கு கூடுதலான எண்ணிக்கையில் இருந்த உழைக்கும் மக்கள் ஆர்ப்பரித்தார்கள்.

பயந்து போன அமைச்சர் தொழிலாளர்கள் தரப்பு வைத்த கோரிக்கை ஏற்றுக் கொண்டு அங்கிருந்து இறுகிய முகத்துடன் வெளியேறினார்.

ஒரு மக்கள் போராளிக்கு இலக்கணமாய் வாழ்ந்து 30.9.1961ல் மறைந்தார்.தோழர் பி.சீனிவாசராவ் அவர்களுக்கு செவ்வணக்கம்.

-  தோழர்  பாரதிநாதன்

Leave a Reply

Your email address will not be published.