கிராமசபை மீட்புப் பயணம் 2021

பயணத்தின் 5வது நாள் 15/09/2021

இராஜேந்திரப்பட்டிணம் ஊராட்சி, விருதாச்சலம் ஒன்றியம், கடலூர் மாவட்டம்

இன்று காலை இராஜேந்திரப்பட்டிணம் ஊராட்சியில் ‘இராஜேந்திரப்பட்டிணம் ஊராட்சி மக்கள் வளர்ச்சி சங்கம்’ ஒருங்கிணைத்த கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாடினோம். பெரும்பாலான ஊர் மகளிர், இளைஞர்கள், இராஜேந்திரப்பட்டிணம் ஊராட்சிப் பிரதிநிதிகள் மற்றும் அருகிலுள்ள சில ஊராட்சிகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர். அவர்களிடம் கிராமசபையின் முக்கியத்துவம், அது தடைபட்டதால் மக்களுக்கு ஏற்பட்ட இழப்புகள், கிராமசபையைக் கூட்டியாக வேண்டிய அவசியம் பற்றியும் விரிவாக உரையாடினோம்.

கூட்டத்திற்கு வந்திருந்த மற்ற பிரதிநிதிகளும் கிராமசபை தடைபட்டது தொடர்பாகவும், இராஜேந்திரப்பட்டிணம் ஊராட்சியின் செயல்பாடுகள் பற்றியும் தங்கள் கருத்துகளைத் தெரிவித்தனர். கலந்து கொண்ட மக்களும் ஊராட்சி சார்ந்த தங்கள் பிரச்சனைகள் பற்றியும் நாம் அனைவரும் கூட்டாக செயல்பட வேண்டிய அவசியம் பற்றியும் தம் கருத்துகளைத் தெரிவித்தனர்.

இறுதியில் இராஜேந்திரப்பட்டிணம் ஊராட்சி தலைவர் திரு. சுரேஷ் அவர்கள் ஊராட்சி நிர்வாகத்தில் தமக்கு இருக்கும் சவால் பற்றியும், ஊராட்சி ஒன்றிய அளவில் அலுவலர்களின் ஆதிக்கம் பற்றியும், நிதிகள் பகிர்ந்தளிக்கப்படாமையால் வளர்ச்சித் திட்டங்கள் தடைபடுவது பற்றியும் தம் ஆதங்கத்தை வெளிப்படுத்தியதோடு தமிழ்நாடு அரசு கிராமசபையை உடனடியாக ஊராட்சித் தலைவர்கள் கூட்டத் தளர்வுகளை அறிவிக்க வேண்டும் என்றும் ஊராட்சிக்கான நிதியை உடனடியாக பகிர்வதோடு அதன் அதிகாரங்களையும் உறுதிபடுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

நிகழ்வை ஒருங்கிணைத்த ஊராட்சித் தலைவர் சுரேஷ் மற்றும் ஊராட்சிப் பிரதிநிதிகளுக்கும் வந்திருந்த மக்கள் மற்றும் விடுதலை சிறுத்தை கட்சியின் தோழர்களுக்கும் நன்றிகள் பல. இந்நிகழ்வின் மூலம் மக்களை ஜனநாயகப்படுத்த வேண்டிய அவசியத்தை உணர்ந்தோம்.

வேண்டும்_கிராமசபை

கிராமசபைமீட்புப்பயணம்

தன்னாட்சி
9445700758
thannatchi.in

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *